இலக்கு
 


அன்பு சகோதர சகோதரிகளே,

வணக்கம்!

 “தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”

-என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.

‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.

தமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், 1976 -இல் துவங்கப்பட்டதே ‘தேசிய சிந்தனை கழகம்’.

தமிழ் இலக்கியங்களில் தேசிய ஒருமைப்பாடு, நமது கலாச்சார மரபுகளின் சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை மாநிலம் முழுவதிலும் நடத்திவரும்  தேசிய சிந்தனை கழகம், பல சிறு நூல்களையும் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்களை, பாரத நாட்டின் மேம்பாடு என்ற ஒரே கண்ணோட்டத்தில் ஒருங்கிணைக்கும் பணியில் ‘தேசிய சிந்தனைக் கழகம்’ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.  தேசிய சிந்தனைக் கழகத்தின் நிர்வாகிகளும், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் இத்தளத்தில் எழுத உள்ளனர்.

இந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.

பாரத அன்னை வெல்க!

2 கருத்துகள்: