திங்கள், 29 மே, 2017

திருச்சியில் ராமானுஜர் ஜயந்தி விழா- தினமணி செய்தி

-ஆசிரியர் குழு

 
ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசுகிறார் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. உடன் (இடமிருந்து) மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்  என்.கோபாலசுவாமி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத துணைப் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால், முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரி, மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், விழாக் குழு மாநிலச் செயலர் சக்கரவர்த்தி.


ராமானுஜர் ஜயந்தி விழா அரசு சார்பில் கொண்டாட ஆலோசனை
 

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்

 

திருச்சி, மே 28:  ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாட ஆலோசித்து வருவதாக மத்திய மத்திய கலாசாரம்,  சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

 ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜயந்தி விழாக்குழு மற்றும் சார்பு இயக்கங்களின் சார்பில் ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழா திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு தலைமை வகித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசுகையில், ஸ்ரீராமானுஜரின் ஜயந்தி விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதில் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியது:

 தற்காலத்தில் அனைத்து சமூக மக்களிடம் சமதர்மத்தை பேணுவது சிரமமாக உள்ள நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமூக நல்லிணகத்தையும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தையும் படைக்க தனது கொள்கைகளால் பாடுபட்டவர் ராமானுஜர். அவரின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிலைத்திருக்க அவரது சேவை மனப்பான்மையே காரணம்.

 பிரதமர் நரேந்திர மோடி ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழாவை மேன்மைப்படுத்த சிறப்பு தபால்தலை வெளியிட்டார். ராமானுஜரின் ஜயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த விழாவின் வாயிலாக ராமானுஜரின் கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.

 தொடர்ந்து ராமானுஜரின் கோட்பாடுகள் சென்றைடையும் வகையில் தொண்டாற்றி வரும் அறிஞர்களை கெளரவப்படுத்தினார்.


 இதில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியது:

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்காக அரிய பல செயல்களை செய்தவரின் பிறந்த நாளில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மனிதஇனம் தோன்றியது முதல் வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த வேறுபாடுகளை களையும் முயற்சியில், அன்பின் மூலமாக அனைவரையும் ஒருங்கிணைத்து சரித்திரம் படைத்தவர் ராமானுஜர்.

ராமானுஜர் வெறும் போதனைகளை மட்டும் செய்யாமல், வாழ்ந்து காட்டியவர். தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தவும், சமுதாய பிளவுகள் நீக்கவும் பாடுபட்டவர். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தொடங்கி நாடு முழுவதும் சமதர்மத்தை பேணப் பாடுபட்டார்.

சமூக நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ராமானுஜரின் புகழ் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். அவரது கொள்கைகள் பரப்பப்பட வேண்டும் என்றார்.

 இதில் ஆர்.எஸ்.எஸ். தேசிய துணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால்,  ராமானுஜர் குறித்த புத்தகங்களை வெளியிட்டு, இன்றைய சூழ்நிலையில் ராமானுஜரின் கோட்பாடுகளின் பொருத்தம் குறித்து உரையாற்றினார்.

திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஆசியுரை வழங்கினார். இதில் ஆர்எஸ்எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா, விழாக்குழு தலைவர் ஏ.வி.ரங்கச்சாரி, விழாக்குழு மாநிலச் செயலர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


-தினமணி (29.05.2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக