சனி, 20 மே, 2017

வேங்கடவனுக்குப் பணி செய்வதே கடமை: திருமலை பெத்த ஜீயர் நேர்காணல்

சந்திப்பு: என்.ராஜேஸ்வரி



திருப்பதி திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானே ஸ்ரீவைணவத் திவ்யத் தலங்களான நூற்றியெட்டிலும், நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, என விதவிதமாய் கோலம் கொண்டு காட்சி அருளுகிறார் என்பது வைணவர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்புகள் பெற்ற திருப்பதி திருமலையில் ராமானுஜரால் அமைக்கப்பட்ட மடம் பெத்த ஜீயர் மடம். வேங்கடவனுக்கே அடிமை செய்யும் தொழில் பூண்ட திருமலை பெத்த ஜீயர், காலையில் சுப்ரபாதம் தொடங்கி இரவு திருமாலின் சயன பூஜை வரை தலைமை தாங்கும் பாக்கியத்தைப் பெற்றவர். இம்மடம் அமைக்கப்பட்ட விதம் குறித்து பெத்த ஜீயரிடம் மேற்கொண்ட நேர்காணலிலிருந்து:


பெத்த ஜீயர் மடம் ராமானுஜரால் அமைக்கப்பட்ட விதம் குறித்து கூறுங்களேன்.

ஜீயரை நியமிப்பதற்கு முன்னர் அறுபத்து நான்கு ஏகாங்கிகள் கைங்கரியம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு சாள ஏகாங்கிகள் என்று பெயர். ஏகாங்கிகள் என்றால் ஜீயருடைய பிரதிநிதிகள். பிரம்மசாரியாக இருப்பார்கள். இந்த நிலையில்தான் கஷாயம் அதாவது சந்நியாச உடை, த்ரிதண்டம் ஆகியவற்றைக் கொடுத்து ஒரு ஜீயரை நியமித்தார் ஸ்ரீராமானுஜர்.

ஜீயர்கள் நியமிக்கப்படக் காரணம் என்ன?

கால நேரம் தவறாமல் பூஜைகள் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஜீயரை நியமிக்கக் காரணம் ஆனது. ஒழிவில் காலமெல்லாம் (எப்பொழுதும்) என்ற திவ்யப் பிரபந்த பாசுர விளக்கத்திற்கு ஏற்ப, காலமெல்லாம் ஓய்வு ஒழிச்சல் இன்றி வேங்கடவனுக்கு கைங்கர்யம் அதாவது அடிமை செய்ய வேண்டுவதே ஜீயர்களின் கடமை ஆனது.

பெரிய ஜீயரை கேள்வியப்பன் என்றும் அழைக்கிறார்களே ஏன்?


ஸ்ரீமத் வேத மார்க்க பிரதிஷ்டாபன வேதாந்தசாரியராய் பரமஹம்ச பரிவராசாரியராய் ஸ்ரீதிருவேங்கடமுடையான் கோவிந்தராஜன் திவ்ய ஐஸ்வர்யத்திற்கும், மகதைஸ்வர்யத்துக்கும், கோடி திருவாபரணத்திற்கும் முத்திரைக்கும் முடிப்பிற்கும் காரணகர்த்தாவான, பெரிய கோயில் திருவேங்கட ராமானுஜ பெரிய ஜீயர் முதலில் எழுந்தருளினார். இவரே பெரிய கோயில் கேள்வியப்பன்.

கோயிலில் எந்தக் கைங்கரியமும் நிற்கக் கூடாது. கோயிலில் அனைத்து கைங்கரியங்களும் சரியாக நடக்கும்படி இந்த ஜீயர் கவனித்து வழி நடத்த வேண்டும். அப்படி மாறுபட்டு நடந்துவிட்டால், ஏன் என்று கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்கள் கேள்வியப்பன் ஜீயர்.

திருக்கோயில் ஆகம விதிகள் குறித்து ஸ்ரீராமானுஜரின் கொள்கை என்னவாக இருந்தது?

திவ்ய தேசங்களில் எந்த ஆகமம் வழிபாட்டில் இருந்ததோ அதனையே தொடர வேண்டும் என்பதே ஸ்ரீராமானுஜரின் ஆகமம் குறித்த கொள்கையாக இருந்தது. ஆகம விதிப்படி பூஜைகள் நடக்க வேண்டும். ஸ்ரீவைணவ சம்பிரதாயப்படி சாஸ்திரங்கள் நடக்க வேண்டும் என்பதே எம்பெருமானாரின் எண்ணம். ஆகமமும் சம்பிரதாயமும் இணையும்பொழுதுதான் கோயில்கள் மேன்மையுறும் என்று எம்பெருமானார் திண்ணமாக நம்பினார்.

பெத்த ஜீயர் மடத்தை ஸ்ரீராமானுஜர் அமைத்தார், சின்ன ஜீயர் மடத்தை அமைத்தது யார்? எதற்காக அமைக்கப்பட்டது?

மணவாள மாமுனிகள் இங்கு ஜீயராக இருந்தபோதுதான் சின்ன ஜீயர் மடத்தை, நானூறு வருட காலத்திற்கு முன் உருவாக்கினார். திருமலையில் திருவேங்கடமுடையானுக்கும் திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாளுக்கும் கைங்கரியம் செய்வதற்கு முறையே பெத்த ஜீயர், சின்ன ஜீயர் ஆகிய இருவர் தேவை என்பதற்காக இம்மடங்கள் நிறுவப்பட்டன. சுப்ரபாதம் முதல் சுவாமி சயனம் வரை பெத்த ஜீயரின் பொறுப்பில்தான் வரும்.

சுப்ரபாதம் பாடும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?

`கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா` என்று தொடங்கும். சுப்ரபாதம் ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் என்ற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீஅண்ணங்கராசாரியார் இயற்றியது. அதற்கும் முற்பட்ட காலத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடியதாகச் சொல்கிறார்கள்.

நன்றி: தி இந்து ஆன்மிகஜோதி  
(முழு நேர்காணல் ‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ மலரில்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக