வெள்ளி, 19 மே, 2017

உடையவர் திருக்கோயில்


-என்.ராஜேஸ்வரி
சாலவாகன மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கோயில் சென்னை எழும்பூரில் உள்ள உடையவர் திருக்கோயில். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1012- ம் ஆண்டு சென்னையா செட்டியார், லட்சுமி தேவி தம்பதிகள் இதனைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.

இத்திருக்கோயிலில் உள்ள மகாமண்டபத்தின் மேற்கூரையில் பல்லவர் காலத்துக் கோல வடிவமும், பாண்டியர் காலத்து மீன் சின்னமும் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. இம்மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் அருள்மிகு பார்த்தசாரதிப் பெருமாள், அனுமன், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் திருவுருவங்கள் ஆகியவை மிகவும் கலைநயத்துடன் பிரமிப்பூட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

உடையவர் இத்திருக்கோயிலில் கைங்கரியம் செய்ததாகக் கூறப்படுவதால், இத்தலம் உடையவர் கோயிலெனக் காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் கம்பீரமாகக் காட்சி தரும் கொடி மரத்தையடுத்துக் கருவறை மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரம் நீள, அகலத்தில் சற்றுப் பெரியதாக இருப்பதால் உற்சவர்கள் உள்புறப்பாடு நல்ல முறையில் நடத்த ஏதுவாக அமைந்துள்ளது. அழகிய நந்தவனம் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதால் தியானம் செய்ய ஏகாந்தமாக உள்ளது. தற்காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் அமைந்த சற்று விசாலமான மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

சன்னிதிகள்
அனுமன் சன்னிதி: தனிச் சன்னிதியில் நின்ற கோலத்துடன் சாந்த சொரூபமாய் அனுமன். காட்சி தருகிறார். அனுமன் சன்னிதிக்கு நேரேதிரே மகாமண்டபத்தில் நுழைந்ததும், கூப்பிய கரங்களுடன் மூலவர் சன்னிதியை நோக்கித் தனிச் சன்னிதியில் கருடாழ்வார் காட்சி தருகிறார். கோதண்டராமர் சன்னிதி: மகாமண்டபத்தில் மூலவர் சன்னிதி நுழைவு வாயிலை ஒட்டி வலது புறத்தில் கோதண்டராமர் சன்னிதி அமைந்துள்ளது. ராமர், சீதா லஷ்மண சமேதராய் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார்.

கருவறை மண்டபத்தில் சுமார் ஏழு அடி உயரத்தில் கிழக்கு முகமாகத் தனித்து, நின்ற திருக்கோலத்தில், தனிச் சன்னிதியில், அருள்மிகு பிரசன்னி வெங்கடேசப் பெருமாள், சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கை திருவடியைக் காட்டி வரம் அளிக்கும் வண்ணமும், இடது கை நம்மை அரவணைக்கும் விதமாகவும் காட்சி தருகிறார். திருவடி தொடங்கித் திருமுடியளவு தரிசனம் காண்பவர்கள் பெருமாளின் சுந்தரவதனத்தை ஆராதித்துக்கொண்டே இருக்கலாம். இத்தலப் பெருமாளை கண்ட கண்கள் வேறோன்றினைக் காணாவே என்று திருமலையில் ஸ்ரீவேங்கடவனை தரிசிக்கும்பொழுது ஏற்படும் ஈர்ப்பு ஏற்படுகிறது.


கருவறையிலிருந்து வெளியே வந்தவுடன் வலது, இடது புறத்தில் அனைத்து ஆழ்வார், ஆச்சாரியர்கள் ஆகியோரின் மூலவர், உற்சவ சிலாரூபங்களைக் காணலாம். அனைத்து உற்சவ சிலாரூபங்களிலும் தோளின் வலது, இடது புறத்தில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ள விதம் தெளிவாகக் காணக் கிடைக்கிறது. அவற்றின் கீழே அவ்வவர்களது திருநாமங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

உடையவர் தனிச் சன்னிதியில் மூலவரும் உற்சவரும் அர்ச்சையில் காட்சி தருகிறார். உடையவர் உற்சவர் அர்ச்சை அவரின் வயதான தோற்றத்தில் அமைந்துள்ளது. முதுகுப்புறம் ஆதிசேஷன் வடிவம் அமைந்து பிரமிப்பூட்டுகிறது. அவரது சாந்தமான முகம் மனதில் நிலைத்திருக்கும்படியாக அமைந்துள்ளது. ஐம்பொன்னால் ஆன இத்திருமேனியை தரிசிக்கும்பொழுது ஸ்ரீ பெரும்பூதூரில் தானுகந்த திருமேனியைக் காணும் பரவச உணர்வு ஏற்படுகிறது.

சக்கரத்தாழ்வார் சன்னிதி: கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வலதுபுறத்தில் தனிச்சன்னிதியில் ஒரே சிலாரூபத்தில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும், பின்புறம் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். தாயார் சன்னிதி: தாயாரின் திருநாமம் அலமேலுமங்கை. இவர் தனிச்சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன், இரு கைகளில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் ஒரு கரம் அபயம் அளிக்கும வண்ணமும், மறு கரம் கீழ் நோக்கியபடி மலர்ந்த திருமுகமாகக் காட்சி அளிக்கிறார்.

ஆண்டாள் சன்னிதி: ஆண்டாள், மூலவர் திருமுக அமைப்பு சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் சௌந்தர்யமாய் இத்தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தல விருட்சம், நெல்லி மரம்.

சென்னை ரிப்பன் மாளிகைக்கு அருகில் உள்ள பெரியமேடு பகுதியில் ஸ்ரீ உடையவர் திருக்கோயில் என்ற இந்த அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் திருநட்சத்திரமான திருவோணம், உடையவர் திருநட்சத்திரமான திருவாதிரை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விளக்கேற்றுவது விசேஷம்.


நன்றி: தி இந்து ஆனந்தஜோதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக