திங்கள், 1 மே, 2017

சமுதாய ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம்!

-கவிஞர் குழலேந்திகடந்த ஓராண்டாக, நமது தளத்தில் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு தினசரி இடுகைகள் வெளியாகி வந்தன. நாராயண நாமத்தைச் சொல்வதனூடாக சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டியவர் அவர். தேசிய சிந்தனைக் கழகம் அவரது ஆயிரமாவது ஜெயந்தியைக் கொண்டாட அடிப்படைக் காரணம் அதுவே.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து, காஞ்சிபுரத்தில் இறையருள் பெற்று, திருக்கோஷ்டியூரில் மந்திரோபதேசம் பெற்று, ஸ்ரீரங்கத்திலும் மேல்கோட்டையிலும், திருவேங்கடத்திலும்  வைணவம் வளர்த்து, நாடு முழுவதும் திக்விஜயம் செய்து விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டியவர் அவர்.

120 ஆண்டுகள் வாழ்வதென்பது இறைப்பேறு. அதுவும் நாட்டு நன்மைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து, திசையறியா மாந்தருக்கு நல்வழி காட்டுவதென்பது இறைப் பிறவிகளால்தான் இயலும். அவ்வகையில், ஸ்ரீ ராமானுஜர், இளைய பெருமாள் லட்சுமணரின் அம்சமாகவே வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை நிகழ்வுகள், இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள். புலனடக்கம், கல்வியறிவு, தன்மானம், சமயப் பிடிப்பு, பலதுறை ஞானம், மானுடநேயம், பன்மொழித் திறன், செயலாற்றல், தன்னம்பிக்கை, பணிவு, இறையருள், தியாக உணர்வு, தலைமைப் பண்பு, கம்பீரம், ... என அவரது சிறப்பம்சங்களை எழுதிக்கொண்டே செல்லலாம். இந்த குணங்களின் தொகுப்பே ‘இராமானுஜம்’. இவை அனைத்துமே இளம் தலைமுறை பின்பற்ற வேண்டிய அருங்குணங்கள்.

இந்த ஓராண்டு முழுவதும் நாடு முழுவதிலும் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாட்டங்கள் அவரது பக்தர்களாலும், தேசிய சிந்தனை கொண்ட அமைப்புகளாலும், இடைவிடாது நடத்தப்பட்டன. வைணவ  ஆலயங்கள் மட்டுமல்லாது,  அனைத்து ஆலயங்களிலும் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டு, சைவ- வைணவ ஒற்றுமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.  இந்தக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரு புதிய ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கியுள்ளன எனில் மிகையில்லை.

குறிப்பாக,  சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வாடி வரும் ஹரிஜன சகோதரர்களை அரவணைக்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டமின்றி சமுதாய ஒருமைப்பாட்டுக்கான நல்ல முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. சேரிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கும் துறவியர் பெருமக்கள் விஜயம் செய்தபோது, அப்பகுதி மக்கள் அளித்த வரவேற்பும் வெளிப்படுத்திய அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை. இந்த நல்முயற்சிகள் தொடர வேண்டும்.

ஸ்ரீ ராமானுஜரின் ஜெயந்திக் கொண்டாட்டங்கள் விழா நிகழ்வாக மட்டுமின்றி அறிவொளி பரப்புவதாகவும் இருக்க வேண்டும் என்ற தாபமே இந்தத் தளத்தை இதுகாறும் நடத்தி வந்தது. ஆச்சாரியரின் ஆயிரமாவது ஜெயந்திக் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றாலும், நமது தளத்தின் பணிகள் தொடரும். தின்சரி அடிப்படையில் இல்லாவிடிலும், இத்தளத்தின் இடுகைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். அதற்கு இதுவரை ஆதரவளித்த பக்தகோடிகளும் அன்பர்களும் தங்கள் நல்லாதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.

நல்லோர் தொடர்பு நன்மையைப் பெருக்கும்;  நல்ல விஷயங்களைப் படிப்பது நல்லறிவை வளர்க்கும். அந்த வகையில், இணைய உலகில் ஸ்ரீ ராமானுஜரின் புகழையும் நற்சிந்தனைகளையும் நமது தளம் தொடர்ந்து பரப்பும். இத்தளத்தின் இயக்கத்தில் பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் ஆச்சாரியப் பெருமானின் அருட்கருணை ஆசி உண்டு.

இந்தத் தளத்தை நடத்த உந்துவிசையாகத் திகழ்ந்த மந்திரம்,   ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ என்பதே. அவரது அருளால், அவர்தாள் வணங்கித் துவங்கிய இப்பணி, அவரது அருட்கருணையால் தொடர்ந்தது; இனியும் தொடரும்.

வாருங்கள், ராமானுஜர் அடியொற்றி, சமுதாய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவோம்! நமது தேசத்தைப் புனரமைப்போம்!ஸர்வ- தேச-தசா- காலேஷ்வவ்யாஹத- பராக்ரம/
ராமானுஜார்ய-திவ்யஜ்ஞா வர்ததமதிவர்ததாம்//


ராமானுஜார்ய- திவ்யஜ்ஞா ப்ரதிவாச்ரமுஜ்ஜ்வலா/
திகதவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணீ//


பொருள்:
  • எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும்! மேன்மேலும் வளரட்டும்! 
  • ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிக்க ஒளி வீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும்! ஏனென்றால், அந்தத் தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையே நாடுவது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக