திங்கள், 29 மே, 2017

திருச்சியில் ராமானுஜர் ஜயந்தி விழா- தினமணி செய்தி

-ஆசிரியர் குழு

 
ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசுகிறார் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. உடன் (இடமிருந்து) மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்  என்.கோபாலசுவாமி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத துணைப் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால், முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரி, மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், விழாக் குழு மாநிலச் செயலர் சக்கரவர்த்தி.


ராமானுஜர் ஜயந்தி விழா அரசு சார்பில் கொண்டாட ஆலோசனை
 

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தகவல்

 

திருச்சி, மே 28:  ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாட ஆலோசித்து வருவதாக மத்திய மத்திய கலாசாரம்,  சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

 ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜயந்தி விழாக்குழு மற்றும் சார்பு இயக்கங்களின் சார்பில் ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழா திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு தலைமை வகித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசுகையில், ஸ்ரீராமானுஜரின் ஜயந்தி விழாவை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதில் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியது:

 தற்காலத்தில் அனைத்து சமூக மக்களிடம் சமதர்மத்தை பேணுவது சிரமமாக உள்ள நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமூக நல்லிணகத்தையும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தையும் படைக்க தனது கொள்கைகளால் பாடுபட்டவர் ராமானுஜர். அவரின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிலைத்திருக்க அவரது சேவை மனப்பான்மையே காரணம்.

 பிரதமர் நரேந்திர மோடி ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழாவை மேன்மைப்படுத்த சிறப்பு தபால்தலை வெளியிட்டார். ராமானுஜரின் ஜயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த விழாவின் வாயிலாக ராமானுஜரின் கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.

 தொடர்ந்து ராமானுஜரின் கோட்பாடுகள் சென்றைடையும் வகையில் தொண்டாற்றி வரும் அறிஞர்களை கெளரவப்படுத்தினார்.

வெள்ளி, 26 மே, 2017

கருணை மேகம் ராமானுஜர்- நூல் அறிமுகம்

-ஸ்ரீ
 ‘காரேய் கருணை இராமாநுஜா’ என்பது ராமாநுஜரைப் போற்றும் துதிகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. கார் என்றால் கருப்பு என்று பொருள். அது கருமேகத்தைக் குறிக்கிறது. மேகத்தின் நிறம் கருப்பு என்று பொதுவாகச் சொன்னாலும், சூல் கொண்டு நன்கு திரண்ட மேகம் மட்டுமே கருப்பு வண்ணத்தில் இருப்பது. அதுதான் மழையைப் பொழிகிறது. இத்தகைய மேகத்தில் மழை பொழியாமல் இருக்க முடியாது. அது எந்த இடத்தில் திரண்டு இருக்கிறதோ, அங்கு மழை பொழியும். இந்தப் பொழிவுக்கு இடம், காலம், பொருள், ஏவல் முதலிய காரணங்கள் கிடையாது.

எனினும் இந்த மழைப்பொழிவு நன்மையை மட்டுமே தரும் என்று கருத முடியாது. பெய்த இடத்திலேயே பெய்வது. சில இடங்களில் மழை பொழிவே இல்லாமல் போவது முதலான குறைகளும் உண்டு.

சனி, 20 மே, 2017

வேங்கடவனுக்குப் பணி செய்வதே கடமை: திருமலை பெத்த ஜீயர் நேர்காணல்

சந்திப்பு: என்.ராஜேஸ்வரிதிருப்பதி திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானே ஸ்ரீவைணவத் திவ்யத் தலங்களான நூற்றியெட்டிலும், நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, என விதவிதமாய் கோலம் கொண்டு காட்சி அருளுகிறார் என்பது வைணவர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்புகள் பெற்ற திருப்பதி திருமலையில் ராமானுஜரால் அமைக்கப்பட்ட மடம் பெத்த ஜீயர் மடம். வேங்கடவனுக்கே அடிமை செய்யும் தொழில் பூண்ட திருமலை பெத்த ஜீயர், காலையில் சுப்ரபாதம் தொடங்கி இரவு திருமாலின் சயன பூஜை வரை தலைமை தாங்கும் பாக்கியத்தைப் பெற்றவர். இம்மடம் அமைக்கப்பட்ட விதம் குறித்து பெத்த ஜீயரிடம் மேற்கொண்ட நேர்காணலிலிருந்து:

வெள்ளி, 19 மே, 2017

உடையவர் திருக்கோயில்


-என்.ராஜேஸ்வரி
சாலவாகன மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கோயில் சென்னை எழும்பூரில் உள்ள உடையவர் திருக்கோயில். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1012- ம் ஆண்டு சென்னையா செட்டியார், லட்சுமி தேவி தம்பதிகள் இதனைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.

இத்திருக்கோயிலில் உள்ள மகாமண்டபத்தின் மேற்கூரையில் பல்லவர் காலத்துக் கோல வடிவமும், பாண்டியர் காலத்து மீன் சின்னமும் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. இம்மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் அருள்மிகு பார்த்தசாரதிப் பெருமாள், அனுமன், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் திருவுருவங்கள் ஆகியவை மிகவும் கலைநயத்துடன் பிரமிப்பூட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

வியாழன், 4 மே, 2017

ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு: முதல்வர் வெளியிட்டார்

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்   ‘இராமானுஜர் வைணவ மாநிதி’ என்ற நூலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, அதனை பெறுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.சென்னை, மே 3: ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார விழாவையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை மூன்று மொழிகளில் விளக்கும்  ‘இராமானுஜர் வைணவ மாநிதி’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நூலினை வெளியிட, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

ஸ்ரீ வைணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்தவரான ஸ்ரீ ராமானுஜர் கி.பி. 1017 -ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். ஸ்ரீ ராமானுஜர் கி.பி.1051 -ஆம் ஆண்டில் பிரம்மசூத்திரத்துக்கான ஸ்ரீபாஷ்யம் உரை எழுதியதோடு, விசிஷ்டாத்வைதம் என்னும் இறை தத்துவத்தையும் உருவாக்கினார். இந்து மதத்தில் காணப்பட்ட ஜாதிப் பாகுபாடுகளை களைவதற்கான சமூக சீர்திருத்தங்களைச் செய்த இவர், வேதாந்த சங்ரகம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம் போன்ற வைணவ சமயம் சார்ந்த நூல்களை இயற்றியுள்ளார்.

ராமானுஜ வேதம்- 58

-ஆசிரியர் குழு


செவ்வாய், 2 மே, 2017

மனிதரில் கடவுளை கண்ட மகான் ராமானுஜர்


பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்புதுடில்லி, மே 1:  “சமூக சீர்திருத்தவாதியும், வைணவத் துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர்” என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வைணவத் துறவி ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் தலை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் வேறுபாடின்றி வாழ்ந்து காட்டியவர் ராமானுஜர். சுயநலம் சிறிதும் இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறு உபதேசங்களை வழங்கிய அவர், அதன்படியே வாழ்ந்தும் காட்டினார்.

'மக்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச மந்திரம் ஏன் ஒருவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். அதை அனைவரும் அறிந்து முக்தி நிலை பெறட்டுமே' எனக் கருதி, ஏழைகள், பாமரர்கள் கூடிய சபையில் மோட்ச மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார். இதிலிருந்தே அவரின் விசாலமான எண்ணம் நமக்கு புரிகிறது.

சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்

தன் முன்னோர் வகுத்து வைத்த பிற்போக்கான நடைமுறைகளை தகர்த்ததன் மூலம் அவர் காலத்து துறவிகளுக்கு முன்னோடியாக விளங்கினார் ராமானுஜர். சமூகத்தில் வாழும்

அனைத்து தரப்பினரும் சமம் என்பதை நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் ரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் வசம் மட்டுமே இருந்தது. ராமானுஜர் இந்த நடைமுறையை மாற்றினார். கோவில் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம்அளிக்கப்பட்டது.

ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க பங்காற்றினார்


பெண்களுக்கும் சில பொறுப்புகள் வழங்கப்பட்டன. கோவில் என்பது அனைத்து மக்களுக்கான புகலிடமாக மாறியது. அங்கு பலர் பசியாறினர்; உடை இல்லாதோருக்கு உடை வழங்கப்பட்டது. இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 

வாழ்க்கையை முறைப்படுத்த, நல்ல போதனைகள் வழங்கப்பட்டன.ராமானுஜர் அமல்படுத்திய சீர் திருத்தங்கள், இன்றும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளன. ஜாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்த அந்தக் காலத்தில் ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க ராமானுஜர் மிகப் பெரும் பங்காற்றினார்.

அவரது வாழ்க்கை முறை மற்றும் போதனைகளால் பிற மதத்தை சேர்ந்தோரும் ஏற்றுக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டில்லியை ஆண்ட சுல்தானின் மகள் தான் பீவி நாச்சியார் என்பது இன்று பலருக்கும் தெரியாத உண்மை. கர்நாடகா மாநிலம் மேல்கோட்டை கோவிலில் இவரது சிலையை நிறுவியவர், ராமானுஜரே.

ராமானுஜரின் பெருமை குறித்து அம்பேத்கர் 1927ல் எழுதிய கட்டுரையில் மிக அருமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். அதிலிருந்து சிலவற்றைமட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 ‘மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட ராமானுஜர் அரும்பணியாற்றினார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குரு தன் வீட்டில் உணவருந்திச் சென்ற பின் வீட்டை சுத்தப்படுத்திய தன் மனைவியின் செயலால் ராமானுஜர் மிகவும் மனம் வருந்தினார்; அதை கடுமையாக எதிர்த்தார். தன் மனைவியின் செயல் அவரை மிகவும் பாதித்தது. அந்த பாதிப்பே இல்வாழ்க்கையை துறந்து அவரை சன்னியாசம் பெற துாண்டியது. அவர் வெறும் உபதேசம் மட்டும் தரவில்லை; அவரது உபதேசத்தின்படி வாழ்ந்தும் காட்டினார். பெண்களுக்கு சமநீதி, சம அந்தஸ்து வழங்கியதில் ராமானுஜருக்கு நிகர் ராமானுஜரே’ என, அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ஆண்டுகளில் ராமானுஜரின் போதனைகள் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன.

பாக்கியம் எனக்கு கிடைத்தது

சமுதாயத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டுள்ளன. முற்போக்கு சிந்தனைகள் பெருகியுள்ளன;  ‘கடவுளின் முன் அனைவரும் சமம்; பக்தி அனைவருக்கும் பொதுவானது’ என்ற ராமானுஜரின் சிந்தனை போற்றத்தக்கது. ராமானுஜர் வழிகாட்டுதலின் படி ஏழைகள், பெண்கள் ஒடுக்கப்பட்டோர் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமநீதி கிடைக்க நாம் அனைவரும் பாடு பட வேண்டும்.

ராமானுஜரின் கொள்கைகளை வழிகாட்டுதலை போதனைகளை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வது நம் கடமை. இந்த தருணத்தில், அவரது தபால் தலையை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி: தினமலர் (02.05.2017)


ராமானுஜ வேதம்- 56

-ஆசிரியர் குழு


திங்கள், 1 மே, 2017

சமுதாய ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம்!

-கவிஞர் குழலேந்திகடந்த ஓராண்டாக, நமது தளத்தில் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு தினசரி இடுகைகள் வெளியாகி வந்தன. நாராயண நாமத்தைச் சொல்வதனூடாக சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டியவர் அவர். தேசிய சிந்தனைக் கழகம் அவரது ஆயிரமாவது ஜெயந்தியைக் கொண்டாட அடிப்படைக் காரணம் அதுவே.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து, காஞ்சிபுரத்தில் இறையருள் பெற்று, திருக்கோஷ்டியூரில் மந்திரோபதேசம் பெற்று, ஸ்ரீரங்கத்திலும் மேல்கோட்டையிலும், திருவேங்கடத்திலும்  வைணவம் வளர்த்து, நாடு முழுவதும் திக்விஜயம் செய்து விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டியவர் அவர்.

120 ஆண்டுகள் வாழ்வதென்பது இறைப்பேறு. அதுவும் நாட்டு நன்மைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து, திசையறியா மாந்தருக்கு நல்வழி காட்டுவதென்பது இறைப் பிறவிகளால்தான் இயலும். அவ்வகையில், ஸ்ரீ ராமானுஜர், இளைய பெருமாள் லட்சுமணரின் அம்சமாகவே வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை நிகழ்வுகள், இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள். புலனடக்கம், கல்வியறிவு, தன்மானம், சமயப் பிடிப்பு, பலதுறை ஞானம், மானுடநேயம், பன்மொழித் திறன், செயலாற்றல், தன்னம்பிக்கை, பணிவு, இறையருள், தியாக உணர்வு, தலைமைப் பண்பு, கம்பீரம், ... என அவரது சிறப்பம்சங்களை எழுதிக்கொண்டே செல்லலாம். இந்த குணங்களின் தொகுப்பே ‘இராமானுஜம்’. இவை அனைத்துமே இளம் தலைமுறை பின்பற்ற வேண்டிய அருங்குணங்கள்.

இந்த ஓராண்டு முழுவதும் நாடு முழுவதிலும் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாட்டங்கள் அவரது பக்தர்களாலும், தேசிய சிந்தனை கொண்ட அமைப்புகளாலும், இடைவிடாது நடத்தப்பட்டன. வைணவ  ஆலயங்கள் மட்டுமல்லாது,  அனைத்து ஆலயங்களிலும் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டு, சைவ- வைணவ ஒற்றுமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.  இந்தக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஒரு புதிய ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கியுள்ளன எனில் மிகையில்லை.

குறிப்பாக,  சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வாடி வரும் ஹரிஜன சகோதரர்களை அரவணைக்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டமின்றி சமுதாய ஒருமைப்பாட்டுக்கான நல்ல முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. சேரிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கும் துறவியர் பெருமக்கள் விஜயம் செய்தபோது, அப்பகுதி மக்கள் அளித்த வரவேற்பும் வெளிப்படுத்திய அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை. இந்த நல்முயற்சிகள் தொடர வேண்டும்.

ஸ்ரீ ராமானுஜரின் ஜெயந்திக் கொண்டாட்டங்கள் விழா நிகழ்வாக மட்டுமின்றி அறிவொளி பரப்புவதாகவும் இருக்க வேண்டும் என்ற தாபமே இந்தத் தளத்தை இதுகாறும் நடத்தி வந்தது. ஆச்சாரியரின் ஆயிரமாவது ஜெயந்திக் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றாலும், நமது தளத்தின் பணிகள் தொடரும். தின்சரி அடிப்படையில் இல்லாவிடிலும், இத்தளத்தின் இடுகைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். அதற்கு இதுவரை ஆதரவளித்த பக்தகோடிகளும் அன்பர்களும் தங்கள் நல்லாதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.

நல்லோர் தொடர்பு நன்மையைப் பெருக்கும்;  நல்ல விஷயங்களைப் படிப்பது நல்லறிவை வளர்க்கும். அந்த வகையில், இணைய உலகில் ஸ்ரீ ராமானுஜரின் புகழையும் நற்சிந்தனைகளையும் நமது தளம் தொடர்ந்து பரப்பும். இத்தளத்தின் இயக்கத்தில் பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் ஆச்சாரியப் பெருமானின் அருட்கருணை ஆசி உண்டு.

இந்தத் தளத்தை நடத்த உந்துவிசையாகத் திகழ்ந்த மந்திரம்,   ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ என்பதே. அவரது அருளால், அவர்தாள் வணங்கித் துவங்கிய இப்பணி, அவரது அருட்கருணையால் தொடர்ந்தது; இனியும் தொடரும்.

வாருங்கள், ராமானுஜர் அடியொற்றி, சமுதாய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவோம்! நமது தேசத்தைப் புனரமைப்போம்!ஸர்வ- தேச-தசா- காலேஷ்வவ்யாஹத- பராக்ரம/
ராமானுஜார்ய-திவ்யஜ்ஞா வர்ததமதிவர்ததாம்//


ராமானுஜார்ய- திவ்யஜ்ஞா ப்ரதிவாச்ரமுஜ்ஜ்வலா/
திகதவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணீ//


பொருள்:
  • எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும்! மேன்மேலும் வளரட்டும்! 
  • ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிக்க ஒளி வீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும்! ஏனென்றால், அந்தத் தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையே நாடுவது!

சிஷ்யனால் மீண்ட சொர்க்கம்

-ஆசிரியர் குழு


ராமானுஜ வேதம்- 55

-ஆசிரியர் குழு