வியாழன், 27 ஏப்ரல், 2017

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா

-எஸ்.கல்யாணசுந்தரம்


திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரையில் பத்து தினங்களுக்கு சிறப்பாகக் கொண்டாட கோயில் நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

ஸ்ரீமத் நாராயணனின் சீரிய கருணையால் ஆதிசேஷனின் அவதாரமாக கிபி 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை திருநட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து இளையாழ்வார் என்ற இயற்பெயர் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்த துறவறம் பூண்டதால் ஸ்ரீ வரதராஜப் பெருமாளால் யதிராஜர் என்றும் போற்றப்பட்டார்.

எட்டெழுத்து மந்திரத்தின் மேன்மையை நாடறியச் செய்ததால் எம்பெருமானார் என்றும், ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை இயற்றியதால் ஸ்ரீ பாஷ்யக்காரர் என்றும் அழைக்கப்படுபவர் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் நிர்வாக அமைப்புகளைத் திருத்தி அமைத்ததால் தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் என்ற வாழித் திருநாமம் பெற்றவருமான பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரப் பெருவிழா ஸ்ரீரங்கம் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவையொட்டி ஏப்ரல் 28-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆர். கேசவன் குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கவுள்ளார். மாலை 6.30 மணிக்கு நாமசாஹர், ஸ்ரீஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகளின் பஜனை நடைபெறவுள்ளது.

ஸ்ரீராமானுஜார்ய திவ்யாஜ்ஞா

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கிஞ்சித்காரம் அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி காலை 8.45 மணிக்கு கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பொ. ஜெயராமன் வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக `வழிகாட்டும் ராமானுஜ சித்தாந்தம்’ என்ற தலைப்பில் `உழவு பலித்தது’ - `தானான திருமேனி’ வந்த வரலாறு, `காரேய் கருணை ராமானுஜ’ – (பஜனை) பத்தும் பத்தாக நம் கடமை ஆகியவை ஒளிக்காட்சியாக திரையிடப்படும். உடையவர் சன்னிதியில் “தானான திருமேனி” தரிசனமும் காணலாம்.

பிற்பகல் 3.30 மணிக்கு அரங்கத்தில் அண்ணலின் அடிச்சுவடு அன்றும் - இன்றும் என்ற ஒளிக்காட்சியும், அற்புதன் ராமானுஜன் என்ற தலைப்பில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசமும், ஸ்ரீ விஷ்ணுலோக மணி மண்டப மார்க்கதாயீ என்ற நாட்டிய நாடகமும், மாலை 6.30 மணிக்கு பஜனையுடன் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. பிரபல ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் சுவாமிகள் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஏப்ரல் 30-ம் தேதி: முத்துசீனிவாசனின் உபன்யாசம், கடையநல்லூர் ஸ்ரீகணபதி துக்காராம் மகராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள்.

மே 1-ம் தேதி: கடலூர் கோபி பாகவதரின் பக்த விஜயம், பராசர பத்ரி நாராயண பட்டரின் உபன்யாசம், ஸ்ரீ ராமானுஜ வைபவம் - ஜாகீர் உசேனின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறவுள்ளன.

மே 2-ம் தேதி: ஏ.வி. ரங்காச்சாரியின் உபன்யாசம், ஆலப்புழை எஸ். சுரேஷ் பாகவதரின் பஜனை நிகழ்ச்சிகள்.

மே 3-ம் தேதி: அ. கிருஷ்ணமாச்சாரியரின் உபன்யாசம், ஓ.எஸ். அருண் வழங்கும் பஜனை நிகழ்ச்சிகள்.

மே 4-ம் தேதி: நங்கவரம் ரமேஷ் பாகவதர் குழுவினரின் பஜனை, மேலத் திருமாளிகை விஷ்ணுசித்தன் உபன்யாசம், ரேவதி முத்துசாமியின் ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நாடகம்.

மே 5-ம் தேதி: பிரேமா நந்தகுமாரின் உபன்யாசம், உடையாளூர் கே. கல்யாணராமன் குழுவினரின் பஜனை.

மே 6-ம் தேதி: பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வனின் சொற்பொழிவு, ஆர். காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள்.

மே 7-ம் தேதி: ஆர். கணேசன் வழங்கும் நாத சங்கமம், அருண் மாதவன் வழங்கும் பஜனை, ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் கிருஷ்ணப்பிரேமி சுவாமிகள் வழங்கும் உபன்யாசம்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், செயல் அலுவலரும், அறநிலையத்துறை இணை ஆணையருமான பொ. ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

நன்றி: தி இந்து- ஆனந்தஜோதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக