வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஸ்ரீ ராமானுஜர் 1000: திக்கெட்டும் கொண்டாட்டம்


-என்.ராஜேஸ்வரி

திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாவதாரத்தில் ராமருக்குத் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்பது புராணம்.அதே ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர், கிபி 1017-ம் ஆண்டு, அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் என்ற இத்தலத்தில் தோன்றினார்.

அப்போது கலியுகம் 4119 சாலிவாகன் சக ஆண்டு 939 பிங்கள வருடம் சித்திரை மாதம் 13 ம் நாள், வியாழக்கிழமை , வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை திருநட்சத்திரத்தில், கடக லக்கினத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஆசூரி கேசவசோமாஜி பட்டர் மற்றும் காந்திமதி தம்பதிக்கு ஒரே செல்வத் திருமகனாக வந்துதித்தார். இவரது தாய் மாமாவான திருமலை நம்பிகள் அக்குழந்தைக்கு இளையாழ்வார் என திருப்பெயர் சூட்டினார். இவருக்கு பூமிநாச்சியார், கமலாம்பாள் ஆகிய இரு சகோதரிகள் உண்டு.


இத்திருத்தலத்தில் ஸ்ரீராமானுஜர் அவதார மண்டபத்தில் ஸ்ரீராமானுஜருடன் அவரது சிஷ்யர்களான 74 சிம்மாசனாதிபதிகள் வரிசையாக அமர்ந்திருக்கும் காட்சியைப் புடைப்புச் சித்திரமாகக் காணலாம். அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில், உற்சவர்கள் ஆகியவை படக்காட்சியாக விரிந்துள்ளன. மராட்டிய காலத்தைச் சேர்ந்த இவற்றில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை சரிதம் விவரிக்கப்பட்டுள்ளது.அவதாரத் திருவிழா

மஞ்சத்தில் ஸ்ரீ ராமானுஜர் பிரவேசமாவதிலிருந்து ஸ்ரீ ராமானுஜரின் 1000 ம் ஆண்டு விழா தொடங்கிவிட்டது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ராமானுஜர் உற்சவர் திருமஞ்சனத்திற்கு பின்னர் முறையே தங்கப்பல்லக்கு மங்களகிரி, யாளி, சிம்ம, ஹம்ச, சூரிய சந்திர பிரபைகள் சேஷ , யானை வாகனங்களில் புறப்பட்டு திருவீதி உலா காண்பார் .

ஏப்ரல் 30-ம் தேதி, ஞாயிறு அன்று காலை திருத்தேரில் வலம் வந்து ஸ்ரீ ராமானுஜர் அருள் தருவார். அன்று தேரடிக்கருகில் உள்ள பிள்ளை மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார். மே ஒன்றாம் தேதி, திங்கள் அன்று அவதாரத் தலத்தில் சாற்றுமுறை நடந்து திருமஞ்சனம் கண்டருள்வார் . இரவில் மங்களகிரியில் புறப்பாடாகி 02.05 2017 அன்று கந்தப்பொடி உற்சவத்துடன், விழா நிறைவுறும்.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்து அறநிலையத் துறை ஆணையர் முனைவர் மா. வீரசண்முகமணி தலைமையில் கூடுதல் ஆணையர்கள் (திருப்பணி) கவிதா, (பொது) திருமகள், இணை ஆணையர் அசோக் குமார், துணை ஆணையர் ஆர். வான்மதி திருக்கோயில் செயல் அலுவலர் வடிவேல் துரை, உதவி ஆணையர்கள் (காஞ்சிபுரம்) ரமணி, (திருவள்ளூர்) ஜான்சி ராணி, வேலூர் சுப்பிரமணி, ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரகுநாதன், வேலூர் மண்டலத்து இணை ஆணையர், செயல் அலுவலர், ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகளை சிரமேற் கொண்டு செய்து வருகிறார்கள்.


ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அகோபில மடத்தின் 46-ம் பட்டத்து அழகியசிங்கர் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட இரண்டு நவகிரந்த மாலைகளைச் சமர்ப்பித்தார். மதுரமங்கலம் எம்பார் சுவாமிகள் இரண்டரை கிலோ எடையுள்ள தங்க குடத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தி இந்து- ஆனந்தஜோதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக