செவ்வாய், 21 மார்ச், 2017

திருக்குலத்தார் தரிசனம்

-நைத்ருவன்

ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா நாடெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் அதனையொட்டி சில நிகழ்வுகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன. வெறுமனே விழாவைக் கொண்டாடுவதல்லவே நோக்கம்? கொண்டாட்டம் பல விழாக்களில் மக்கள் அனுபவித்து வருவதுதானே?  ஸ்ரீமத் ராமானுஜர் அவர்களின் நோக்கம்,  எண்ணம்,  செயல் ஆகியவை மக்களை நேரிடையாகச் சென்றடைவதுதான் சிறப்பு என்பதால், விழாக்கள் அந்த அடிப்படை நாதம் ஒலிக்கும் விதமாகவே திட்டமிடப்படுகின்றன.
ஸ்ரீமத் ராமானுஜர் எளிமையாக இருந்தது மட்டுமல்லாமல், எளியோருக்கு தோழனாக, அவர்களும் எளிதில் பகவத் சங்கத்தை அடைய வழிகாட்டியவர். இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அறிவித்து, அனைவரும் கோயிலில் ஒன்றாய் பெருமாளை சேவிக்க ஏற்பாடு செய்தவர். எட்டாக் கனியாய் வைக்கப்பட்ட எம்பெருமானை எல்லோரும் எளிதில் அடைய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ மூலம் வைணவனானால் ஜாதி மற்றும் புற அடையாளங்களை ஒழித்து சமநிலை காணலாம் என்று எடுத்துரைத்து அதற்கு வழிகோலியவர்.
அவ்வடியொற்றி, ஜீயர் சுவாமிகள் யாராவது நமது பகுதிக்கு எழுந்தருளினால் அவர்கள் எளியோரைச் சந்தித்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே என்றெண்ணி அதற்காக முனையும் தறுவாயில், மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகளை முன்மொழிந்தனர் நண்பர்கள் சிலர். அதன்படியே ஜீயர் சுவாமிகளைத் தொடர்பு கொண்டோம். உடனே, அடுத்த வாரமே வருகிறேன் என்று உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்.
நாங்கள் எண்ணியது ஜீயர் சுவாமிகளை ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள மக்கள் அவரை தரிசித்துச் சென்று விடுவார்கள். அப்படி பல பகுதிகளில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம் என்று. ஆனால் அவரது விருப்பம் வேறாக இருந்தது. திருக்குலத்தாரும் ஏழ்மை மிகுந்த மக்களும் வாழும் பகுதிக்குச் என்று ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்க வேண்டுமென்பதாக இருந்தது அவரது அவா. திருப்பூர் போன்ற பரபரப்பான சூழல் உள்ள ஊரில், அநேக ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில் இந்த நிகழ்வைக் கையாள்வது சரிவருமா என்பது சற்றே யோசனையாக இருந்தாலும்,  துணிவுடன் தொடங்கிவிட்டோம்.

(எந்த நாள்?) காலையில் வந்து சேர வேண்டிய ஜீயர் சுவாமிகள் சூழ்நிலை ஏற்படுத்திய தடங்கலால் மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தார். மாலை ஆறு மணிக்கு ஆண்டிபாளையம் பகுதியில் சென்று சேர திரளாக மக்கள் குழுமியிருந்து ஜீயர் சுவாமிகளை வரவேற்றனர். பின்னர் சுமார் அறுபது வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் விளக்கேற்றி அவர்கள் வைத்திருந்த படங்களுக்கு பூஜை செய்ததுடன், அதில் கலந்துகொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் அவர்கள் அனைவரது பெயரையும் கேட்டு ஆசீர்வதித்து, அவர்களுக்கு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறிய அனுஷ்டானங்களை எடுத்துக் கூறி வந்தார்.
மறுநாள் காலை 7 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜம்மனைப் பள்ளம் பகுதிக்குச் சென்றோம். மேடு,  பள்ளம்,  சரிவு,  குறுக்கே ஓடும் சாக்கடைகள் என நகரின் அடையாளம் எதுவும் இல்லாத ஒரு பகுதி. அந்தப் பகுதி ஏற்பாட்டாளர்கள் சுவாமிஜி சௌகரியமாகச் சென்றுவர வேண்டுமே என்ற எண்ணத்தில் முன்னால் இருக்கும் வீடுகளுக்கு மட்டும் சொல்லியிருப்பார்கள் போல,  சுவாமிகளோ அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டுமென்று கூறி அப்பகுதி தொடங்கும் இடத்துக்குச் செல்ல,  தகவல் தெரியாத அவ்வீடு முதலில் திகைத்து உடனே பரபரப்படைந்தது. ஒரு குடம் தண்ணீரை சுவாமியின் காலிலும் அவர் நடந்துவர வீட்டின் முன்பும் கொட்டி அன்புடன் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இதனைக் கண்ட அனைத்து வீடுகளிலும் நெருப்பு போல சுறுசுறுப்பு பற்றிக் கொண்டது. அவசரமாக்க் குளித்து சுவமிஜியை வரவேற்க வேப்பிலை,  மஞ்சள் போடப்பட்ட குடத்து நீரோடு வாசலில் காத்திருக்க சுவாமிஜி ஒவ்வொரு குடும்பத்தையும் மகிழ்சியோடு சந்தித்து வந்தார். ஓர் இல்லத்தில் சமீபத்தில் இறப்பு ஏற்பட்டதால் சுவாமிஜியை அழைக்க இயலவில்லை என்று வருந்தி அடுத்த முறை நிச்சயமாக வர வேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொண்டார்கள்.
இதனைப் பார்த்த பக்கத்துப் பகுதி அன்பர்கள் எங்கள் வீடுகளுக்கும் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க, மூன்று நாட்கள் தங்குவதாக இருந்த சுவாமிகள் நான்கு நாட்கள் தங்கி, கருமாரம்பாளையம், ஆத்துமேடு,  கருவம்பாளையம் பகுதிகளில் சுமார் 420 வீடுகளுக்கு நேரில் சென்றும்,  சுமார் 130 குடும்பங்களை பொதுவிலும் சந்தித்தார்.
மீண்டும் இரண்டு நாட்கள் ஒதுக்கி (எப்போது?) திருப்பூர் வந்த அவர்,  அனுப்பர்பாளையம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீமத் ராமானுஜருக்கு நடந்த திருவாதிரை சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை அருளினார்.
பின்னர் பெருமாநல்லூர் பகுதிகளில் சுமார் 120 குடும்பங்களைச் சந்தித்து ஆசியருளினார். அற்புதமாக இந்த ஏற்பாடுகளைச் செய்த ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமாவது குழுவில் நமது தேசிய சிந்தனைக் கழக உறுப்பினர்களும் பங்கேற்று செயலாற்றினர்.

காண்க: காண்டீபம் (தை 2017 இதழ்)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக