புதன், 8 மார்ச், 2017

ராமானுஜரிடம் உபதேசம் கேட்ட பெருமாள்

-குள.சண்முகசுந்தரம்ராமானுஜரிடம் பெருமாள் ஒரு சிஷ்யன் போல் வந்தமர்ந்து உபதேசம் பெற்ற உன்னத தலமே அழகிய நம்பிராயர் திருக்கோயில். நெல்லைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்குறுங்குடியில் அமைந்திருக்கிறது இத்திருத்தலம். பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான், தீவிரமான விஷ்ணு பக்தர். திருக்குறுங்குடிக்கு அருகே மகேந்திரகிரி மலையில் வசித்து வந்த அவர் யாழ் இசைப்பதில் வல்லவர். தனது இஷ்ட தெய்வமான அழகிய நம்பிராய பெருமாளை தரிசிக்க அடிக்கடி திருக்குறுங்குடி வந்துபோகும் நம்பாடுவான், ஒரு சமயம் கார்த்திகை மாதத்து ஏகாதசி நாளில் எம்பெருமானை தரிசிக்க காட்டுவழியே வந்தார்.

பிடித்துக்கொண்ட பிரம்ம ராட்சசன்

அவர் வந்த வழியில் அகோரப் பசியோடு வனத்தில் சுற்றித் திரிந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை வழிமறித்துப் பிடித்து வைத்துக் கொண்டு அவரைப் புசித்து பசியாறப் போவதாகச் சொல்கிறான். அதைக் கேட்டு சிறிதும் கலங்காத நம்பாடுவான், “அசுரனே.. நான் நம்பியை தரிசிக்கச் சென்றுகொண்டிருக்கிறேன். அவனை தரிசித்துவிட்டு இவ்வழியாக வருகிறேன். அப்போது நீ என்னை புசித்து உன் பசியாற்றிக் கொள்ளலாம்” என்று சொல்கிறார்.

விலகி நின்ற கொடிமரம்


இதை ஏற்று அசுரனும் அவரை விடுவிக்கிறான். நம்பிராயனைச் சந்திக்க கோயில் வாசலுக்கு வரும் நம்பாடுவான், அங்கிருந்தபடியே பெருமாளை நெக்குருக வேண்டுகிறார். அப்போது நம்பிராயனின் அழகிய திருமுகத்தை அவர் காணமுடியாதபடிக்கு கொடிமரம் மறைத்து நிற்கிறது. ஆயினும் பக்தி சிரத்தையோடு பெருமாளை வேண்டி பாடுகிறார். அப்படி அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே கொடிமரம் சற்றே விலகி நின்றது. பெருமாளின் திருமுகத்தைப் பார்த்து பேரானந்தம் கொள்கிறார் நம்பாடுவான்.


அந்த ஆனந்தக் கொண்டாட்டத்தில் திருவாய்மொழி பாசுரத்தை பாடுகிறார். நம்பியை தரிசித்த மகிழ்ச்சி ததும்ப, அசுரனுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டை நோக்கி வேகமாக நடந்தார். அப்போது, வயோதிகப் பிராமணராக வந்து அவரைத் தடுத்த நம்பிராயன், “இந்தக் காட்டில் சுற்றித் திரியும் பிரம்ம ராட்சசன் ஒருவன் கண்ணில் படும் ஆட்களை எல்லாம் பிடித்துத் தின்றுவிடுகிறான். அதனால், நீங்கள் இந்த வழியாக செல்லவேண்டாம்” என எச்சரிக்கிறார்.

“எனது வாக்கை நம்பி என்னை விடுவித்தான். அதுபோல நானும் அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதனால் அவனுக்கு இரையாக போய்க்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு இன்னும் வேகமாக நடந்தார் நம்பாடுவான்.

விமோசனம் பெற்ற அசுரன்

காட்டுக்குள் ராட்சசனைத் தேடி அலைந்தவர் ஓரிடத்தில் அவனைச் சந்தித்து, “உனது தயவால் நம்பிராயனுக்கு நான் வைத்திருந்த விரதத்தை தடையின்றி முடித்துவிட்டேன். இப்போது தாராளமாக நீ என்னை புசிக்கலாம்” என்றார். ஆனால், தனது பசி அடங்கி விட்டதாகச் சொல்லி நம்பாடுவானை உண்ண மறுக்கிறான் பிரம்ம ராட்சசன். இதுவும் பெருமாளின் மகிமையே என நினைத்த நம்பாடுவான், கோயிலில் நம்பிராயனைப் பாடி பரிசில் பெற்ற பழத்தில் பாதியை ராட்சசனுக்கு உண்ணக் கொடுத்தார். அதை வாங்கி உண்ட ராட்சசன் அப்போதே பாவ விமோசனம் பெற்று தனது முன்பிறவியின் வடிவத்தை எடுத்தான்.

ராமானுஜரிடம் உபதேசம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயரை நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். ராமானுஜர், திருவனந்தபுரத்தில் வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட்டபோது அங்குள்ள இன்னொரு சாரர் அவரைத் தடுத்தனர். அப்போது ராமானுஜர், எம்பெருமானை வேண்டி நின்றதாகவும் அந்தக் கூட்டத்திடமிருந்து கருடாழ்வார் அவரைக் காப்பாற்றி அழகிய நம்பிராயன் திருத்தலத்திற்கு இட்டு வந்ததாகவும் ஒரு சமயம் ராமானுஜரிடம் நம்பிராயனே சீடராக அமர்ந்திருந்து உபதேசம் பெற்றதாகவும் தகவல்கள் உண்டு.

ஆறு பூஜைகள்
இத்திருத்தலத்தில் தினமும் விஸ்வரூபம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அத்தாழம், அர்த்த சாமம் என ஆறுகால பூஜைகள் உண்டு. பங்குனி பிரம்மோற்சவமும் கார்த்திகை மாதத்து கைசிக ஏகாதசி திருநாளும் அழகிய நம்பிராயர் திருத்தலத்தில் முக்கியத் திருவிழா நாட்கள்.

நன்றி:   தி இந்து- ஆனந்த ஜோதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக