திங்கள், 27 பிப்ரவரி, 2017

எம்பெருமானாரின் கருணை, நீர்மை, பரிவு, ஆதங்கம்

-டி.சக்கரவர்த்தி* ஸ்ரீரங்கம் வீதியில் வண்ணான் ஒருவன் தனி இளங்குழந்தையை கையில் ஏந்தியபடி வந்து கொண்டிருந்தான். அதுசமயம் எதிரில் அவ்வழியே வந்த இராமானுசரைக் கண்டு அவரை வணங்கினான். அவன் கையில் இருந்த அழகான குழந்தையைக் கண்ட இராமானுசர் குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டார். “இராமானுசன்” என்று அவன் பதில் உரைத்தான்.  அவனது ஆசார்ய பக்தியையும், குழந்தையின் பொலியையும் கண்ட இராமானுசர் அப்படியே அந்த குழந்தையைத்தன் கைகளில் எடுத்து வாரி முத்தமிட்டார்.  இராமாநுசரின் பாச உணர்வு, சாதி பாகுபாட்டினைக் கடந்த சமநோக்கு, நீர்மை இவற்றிற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.


* திருவரங்கத்தில் பெரிய பெருமாளுக்கு சலவைத்துணிகளைச் சமர்ப்பித்து கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற வண்ணான் ஒருவனை, இவனால் அல்லவோ பெரியபெருமாள் மிக நேர்த்தியாக உடைஉடுத்து கம்பீரமாகவும், அழகாகவும் காணப்படுகிறார். என உணர்ந்த இராமாநுசர், அவனுக்கு தகுந்த சன்மானம் அளித்து கௌரவிக்க எண்ணினார்.  அவரை பெரிய பெருமானின் திரு முன்பே அழைத்து சென்று, உமக்கு நேர்த்தியாக கைங்கர்யம் செய்து, அழகுக்கு அழகு சேர்க்கும் இவனுக்கு மிக உயர்ந்த சன்மானம் அளிக்க வேண்டும் என பிரார்த்திக்க பெரியபெருமாளும் அப்படியே என அங்கீகரித்து இவன் செய்த இந்த நற்செயலுக்காக இவனது முன்னோர்கள் செய்த பிழையைப் பொறுத்தோம். இவன் சன்மம் கடைத்தேற அருளுகிறோம் என மொழிந்தார்.

(கிருஷ்ணாவதாரத்தில் கம்சனுக்கு சலவைத்துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் ஒருவனிடம் கண்ணன் எம்பெருமான், எனக்கு இந்த சலவைத் துணிகளைக் கொடுத்தால் ஆகாதா, நாங்கள் அணிந்து கொள்ள மாட்டோமா எனக் கேட்க, அவன் மறுத்து பெருமானிடம் அபசாரப்பட்டதை நினைவிறுத்திக் கொள்க).

* எம்பெருமானார் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளி இருந்தபோது நிகழ்ந்த சம்பவம்:

துணிகளைத் துவைத்து சலவை செய்து கொண்டிருந்த வண்ணான் ஒருவன் எம்பெருமானார் அவ்வழியே செல்வதைக் கண்டு ஓடிவந்து அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினான். எம்பெருமானார் அவனை ஆசீர்வதித்தார்.  அவ்வண்ணான் எழுந்திருந்து அவன் பிள்ளைகளை உரத்த குரலில் அவர்களது பெயர்களைச் சொல்லி, “கரிமாறா” “மகிழ்மாறா” “சடகோபா” “வகுளாபரணா” என்று ஒவ்வொருவராகக் கூப்பிட்டு எம்பெருமானார் திருவடிகளில் தெண்டன் சமர்ப்புவித்துச் செய்யச் சொல்ல, அவர்களும் அப்படியே செய்தனர். நம்மாழ்வாரிடம் அந்த வண்ணானுக்கு இருந்த அளவிடமுடியாத பக்தியையும், அதன் வெளிப்பாடாக தன் மகன்களுக்கு அவன் நம்மாழ்வாரின் வெவ்வேறு பெயர்களை வைத்திருப்பதையும் கண்ணுற்று உளம் நெகிழ்ந்த இராமானுசர்,  ‘இல்லற வாழ்க்கை வாழும் இவனுக்குக் கிடைக்கப் பெற்ற பாக்கியம் துறவியான எனக்குக் கிடைக்கப் பெற்றிலேனே’ என ஆதங்கப்பட்டராம். என்னே இராமாநுசரின் பேரியல்பும் மாண்பும்.

* திருவாலி திருநகரிக்கு அடியவர்களுடன் சென்று கொண்டிருந்த இராமானுசருக்கு எதிரே வந்த தாழ்ந்த குலம் என்று சொல்லப்படுகிற பள்ளப்பெண் ஒருத்தியைக் கண்ட அவரது அடியார்கள், “தூர விலகிப்போ” என்று குரல் கொடுத்தனர்.  அந்தப் பெண்ணோ, “என் இரண்டு பக்கங்களிலும் மணி மாடங்கள், எதிரே எம்பெருமானார், பின்புறம் பெருமாள், பெருமாள் கோவில், இவ்வாறிருக்க என்னை எங்கே தள்ளிப்போகச் சொல்கிறீர்கள்?” என்று ஆழ்வார்கள் ஸ்ரீஸிக்திகளை மேற்கோள் காட்டி பதிலுரைத்தாள்.

இதனைக் கண்ணுற்ற இராமாநுசர்  “இவளா பள்ளப்பெண்?  இவள் ஞானப்பெண்ணல்லவா?”  எனப்போற்றி அவளை வழிவிட்டு விலகச் சொல்வதைத் தடுத்தார்.


“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார் அடியார் தம்மடி யாரெம் அடிகளே”(நம்மாழ்வார் பாசுரம்)

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!


குறிப்பு:

ஸ்ரீ. டி.சக்கரவர்த்தி, வித்யாபாரதி அமைப்பின் தமிழக தலைவர். ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழுவின் மாநிலத் தலைவரும் ஆவார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக