புதன், 15 பிப்ரவரி, 2017

ராமானுஜர் தொடர்- வெள்ளிமணி-2

-இரா.இரகுநாதன்


பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் எந்த திவ்ய தேசப்பெருமாளையும் பாடவில்லை. அவர் பாடியது அவரது குருவான நம்மாழ்வாரை மட்டுமே. ஒரு நேரத்தில் நம்மாழ்வாரிடம் நித்திய பூஜைக்கு அவருடைய அர்ச்சா விக்ரகம் வேண்டுமெனக் கேட்டார் மதுரகவியாழ்வார். தண்பொருநை தண்ணீரை எடுத்து சுண்டக்காய்ச்சினால் அர்ச்சா விக்ரகம் வெளிவரும் என அருளினார் நம்மாழ்வார்.
பொருநைத் தண்ணீரை எடுத்து காய்ச்சியபோது திருதண்டம் காஷாய உடையுடன் மதுரகவிகள் அதுவரை அறியாத விக்ரகம் ஒன்று உருவாகி வெளி வந்தது.
நம்மாழ்வாரிடம் சென்று அதன் விவரம் கேட்டார் மதுரகவிகள். ஞானத்தால் உண்மையைக் கண்டுணர்ந்த நம்மாழ்வார் அது எனக்குப் பின்னர் 300 ஆண்டுகள் கழித்து உதித்து வைணவத்தை நிலைநிறுத்தப்போகிற ராமானுஜர் என அருளினார்.

கி.பி. 1017 இல் பிறக்கப்போவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே விக்ரக வடிவில் வந்து காட்சி தந்தவர் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளியுள்ள ராமானுஜர்.
தற்போது பின்னால் எழுந்தருளப்போகிற என்ற பொருளில் பவிஷ்ய என்ற அடைமொழி சேர்த்து ‘பவிஷ்ய ராமானுஜர்' என அழைக்கப்படுகிறார். அந்த விக்ரகத்தைப் பெற்ற நாதமுனிகள் அதனை நம்மாழ்வார் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரியிலேயே பிரதிஷ்டை செய்தார். இங்கு துறவறம் ஏற்கும் முன் உருவான திருவிக்ரகமாதலால் எப்போதும் எம்பெருமானார்க்கு வெள்ளையாடை மட்டும் சார்த்தப்படுகிறது.
ஸ்ரீ ராமானுஜரை ஆழ்வார்திருநகரியில் நிறுவிய நாதமுனிகள் மகனான ஈஸ்வர முனியின் திருக்குமாரர் ஆளவந்தார் ஆவார். சிறந்த அறிஞராக விளங்கிய ஆளவந்தாருக்குப் பல சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவரான பெரிய திருமலை நம்பிக்கு இரு சகோதரிகள். மூத்த சகோதரி பூமிபிராட்டி என்பவள், இவள் ஸ்ரீ பெரும்புதூர் ஆசூரி குல திலகரான கேசவ சோமயாஜியை மணந்தார். இளையவள் பெரியபிராட்டி மதுரமங்கலம் கமல நயன பட்டரை மணந்தாள். பெரிய திருமலை நம்பி தன் சகோதரிகளுக்கு நற்புத்திரர்கள் பிறக்க வேண்டும் என திருவேங்கடமுடையானை அனுதினமும் வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெரும்புதூர் கேசவ சோமயாஜி நெடுநாள் பிள்ளை பேறின்றி இருந்தமையால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் செய்து, அதன் பயனால் பூமிபிராட்டி கருவுற்றாள். சரியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியுகம் 4196 இல் பிங்கள வருடம், சித்திரை மாதம், சுக்கில பட்ச பஞ்சமி திதி சேர்ந்த, திருவாதிரை நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தது. முற்பிறவியில் ராமனின் தம்பியாகிய லட்சுமணனாக அவதரித்து கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்து இப்பிறவியில் உலக மக்களை உய்விக்க வேண்டி பெரும்புதூர் கேசவ பட்டர்க்கு முற்பிறவியில் ராமனின் தம்பியாகிய லட்சுமணனே இப்பிறவியில் மகவாக அவதரித்தார்.
தம் சகோதரிக்கு மகன் பிறந்திருப்பதைக் காண திருமலை நம்பிகள் பெரும்புதூருக்கு வந்தார். குழந்தையை கண்டு மகிழ்ந்து உள்ளம் நிறைந்தார். திருமாலுக்கு தொண்டு செய்யும் அறிகுறிகள் அக்குழந்தையிடம் இயல்பாகவேத் தென்பட்டது. ஆதிசேஷனின் அம்சமாக ராமாவதாரக் காலத்தில் இலக்குவனாக அவதரித்த அதே அறிகுறிகளும் அம்சங்களும்  இக்குழந்தைக்கு இருந்ததால் ராமனுக்கு நெருக்கமானவன் என்னும் பொருளில் அக்குழந்தைக்கு ‘இளையாழ்வார்' என பெயர் சூட்டினார்.
கேசவ பட்டர் அக்குமாரனுக்கு நல்ல ஹோரைகள் சேர்ந்து வந்த ஒரு நன்னாளில் முதன் முதலாக திட உணவுகளை உண்ணும் வகையில் அன்னபிராசனம் செய்து வைத்தார். பின்னர் முடியிறக்கும் வைபவமும் நடத்தி வைத்தார். ஐந்தாவது வயதில் கர்ண பூஷணம் என்னும் காது குத்தும் வைபவத்தை நடத்தினார்.
ஒரு நல்ல நேரம் உள்ள நல்ல நாளில் எழுத்தறிவித்தல் என்னும் அட்சராப்பியாசத்தைத் துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் சந்நிதி அமைவதற்கு முன்பாகவே வீற்றிருந்த பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் தனிக்கோயிலில் அருள்புரிந்து வந்திருக்கின்றார். அந்த சந்நிதியில் இறைவன் முன்பாக, இளையாழ்வாருக்கு அட்சராப்பியாசம் துவங்கப்பட்டது. மண்ணில் கைகளால் அளைந்து கற்கத்துவங்கிய இடமாதலால் அந்தப் பெருமாள் 'மண்ணளைந்த பெருமாள்' என அழைக்கப்பட்டார். அந்த சந்நிதியில் கல்வி கற்கத் துவக்கிய நல்ல நேரம் இந்த உலகிற்கு வழி காட்டும் வகையில் அமைந்தது.
உரிய நாளில் 9 ஆவது வயதில் காதில் மந்திரம் ஓதி ஞானக்கண் திறந்து உபநயனம் செய்து வைத்தார். ராமானுஜனும் எண்ணமெல்லாம் கருத்தாக அக்கால சூழல் மற்றும் இடத்திற்கு தக்கபடி, வேதத்தையும், தமிழையும் கற்று உபய வேதங்கள் என்னும் தமிழ் வடமொழிகளில் புலமை பெற்று அதிமேதாவியாய் திகழலானார். கி.பி 1033 இல் தந்தையார் மறைவு வரை அவரிடமும் பயின்றார். அதன் பின்னர் தத்துவ நாட்டத்துடன் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் ஊரில் கல்வி கேள்விகளில் புகழ்பெற்று, இருந்த ஆசானான யாதவ பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.
அதேநேரத்தில் மதுர மங்கலத்தில் கமலநயன பட்டருக்கும் பெரிய பிராட்டிக்கும் குரோதன வருடம் தை மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் ஓர் ஆண் மகவு பிறந்து பெரிய திருமலை நம்பிகளால் கோவிந்தன் என பெயரிடப்பட்டு அவரும் கல்வியில் சிறந்து, வேத அத்யயனத்தை இளையாழ்வாருடன் சேர்ந்தே கற்றுணர்ந்தார்.
இளையாழ்வாரின் தோற்றமும் அறிவும் இன்மொழியும் யாதவ பிரகாசரை மிகவும் கவர்ந்தது. அவரிடம் கல்வி கற்கும்போதே தனது 16 ஆவது வயதில் தஞ்சமாம்பாள் என்பவளை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடலானார்.
ஆதிசேஷனாக ஆதியில் அவதரித்தார். ராமாவதாரத்தில் தம்பி இலக்குவனாகத் தோன்றினார். கிருஷ்ணாவதாரத்தில் அண்ணன் பலராமனாக அவதரித்தார். கலிகாலத்தில் ராமானுஜராக மக்களுக்குத் தோழனாக துணைவனாக வழிகாட்டியாக நல்ல ஆசானாக வழிநடத்தி வழிகாட்டும் குருவாக அவதரித்தார். உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே!
(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக