திங்கள், 27 பிப்ரவரி, 2017

எம்பெருமானாரின் கருணை, நீர்மை, பரிவு, ஆதங்கம்

-டி.சக்கரவர்த்தி* ஸ்ரீரங்கம் வீதியில் வண்ணான் ஒருவன் தனி இளங்குழந்தையை கையில் ஏந்தியபடி வந்து கொண்டிருந்தான். அதுசமயம் எதிரில் அவ்வழியே வந்த இராமானுசரைக் கண்டு அவரை வணங்கினான். அவன் கையில் இருந்த அழகான குழந்தையைக் கண்ட இராமானுசர் குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டார். “இராமானுசன்” என்று அவன் பதில் உரைத்தான்.  அவனது ஆசார்ய பக்தியையும், குழந்தையின் பொலியையும் கண்ட இராமானுசர் அப்படியே அந்த குழந்தையைத்தன் கைகளில் எடுத்து வாரி முத்தமிட்டார்.  இராமாநுசரின் பாச உணர்வு, சாதி பாகுபாட்டினைக் கடந்த சமநோக்கு, நீர்மை இவற்றிற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ராமானுஜர் தொடர்- வெள்ளிமணி-3

-இரா.இரகுநாதன்

தன் தந்தையிடம் தமிழ், வடமொழி ஆகிய உபய வேதங்களை கற்ற பிறகு, தத்துவங்களை உணர்ந்து சிறக்க காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் ஊரில் அப்போது கல்வி கேள்விகளில் புகழ்பெற்று, ஆசிரியராக விளங்கிய யாதவ பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.
தொடக்கத்தில் இளையாழ்வாரின் தோற்றமும் அறிவும் இன்மொழியும் யாதவப் பிரகாசரை மிகவும் கவர்ந்தது. அவரிடம் கல்வி கற்கும்போதே தனது 16 ஆவது வயதில் தஞ்சமாம்பாள் என்பவளைத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்திலும் ஈடுபட்டார்.
ஒருமுறை தன் குருவிற்கு இளையாழ்வார் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் அங்கு வந்து சில உபநிடத வாக்கியங்களுக்கு பொருள் கேட்க அவரும் சொல்லி கொண்டிருந்தார். அப்போது யாதவ பிரகாசர் கண்களை மூடிக் கொண்டு இறைவனின் கண்களை ஒப்பிட்டுச் சொல்லும் போது கபி என்றால் குரங்கு, ஆசம் என்றால் அதன் பின்பாகம் எனப்பொருள் கொண்டு குரங்கின் பின்பாகத்தை ஒத்த சிவந்த தாமரை புஷ்பங்களைப் போன்ற கண்களை உடையவன் இறைவன் என பொருள் கூறினார்.
அப்போது யாதவபிரகாசரின் தொடை மீது இரு சொட்டு சூடான நீர்த்துளிகள் விழுந்தன. கண் திறந்து பார்த்த யாதவப்பிரகாசர், அந்த நீர்த்துளிகள் இளையாழ்வாரின் கண்ணிலிருந்து ஆசிரியர் மீது விழுந்தது என்பதை அறிந்து திகைத்துக் காரணம் கேட்டார்.

புதன், 15 பிப்ரவரி, 2017

ராமானுஜர் தொடர்- வெள்ளிமணி-2

-இரா.இரகுநாதன்


பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் எந்த திவ்ய தேசப்பெருமாளையும் பாடவில்லை. அவர் பாடியது அவரது குருவான நம்மாழ்வாரை மட்டுமே. ஒரு நேரத்தில் நம்மாழ்வாரிடம் நித்திய பூஜைக்கு அவருடைய அர்ச்சா விக்ரகம் வேண்டுமெனக் கேட்டார் மதுரகவியாழ்வார். தண்பொருநை தண்ணீரை எடுத்து சுண்டக்காய்ச்சினால் அர்ச்சா விக்ரகம் வெளிவரும் என அருளினார் நம்மாழ்வார்.
பொருநைத் தண்ணீரை எடுத்து காய்ச்சியபோது திருதண்டம் காஷாய உடையுடன் மதுரகவிகள் அதுவரை அறியாத விக்ரகம் ஒன்று உருவாகி வெளி வந்தது.
நம்மாழ்வாரிடம் சென்று அதன் விவரம் கேட்டார் மதுரகவிகள். ஞானத்தால் உண்மையைக் கண்டுணர்ந்த நம்மாழ்வார் அது எனக்குப் பின்னர் 300 ஆண்டுகள் கழித்து உதித்து வைணவத்தை நிலைநிறுத்தப்போகிற ராமானுஜர் என அருளினார்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ராமானுஜர் தொடர்- வெள்ளிமணி-1

- இரா.இரகுநாதன்


’மாயோன் மேய காடுறை உலகம்' என சங்க காலத்தில் சிறப்புற்று இருந்த திருமால்நெறி இடைப்பட்ட களப்பிரர் காலத்தில் வலுவிழக்க வைக்கப்பட்டது.
எதிர்த்து வந்த இடையூறுகளைத் தகர்த்து அன்பு நெறியாம் அருள்தரும் திருமால் நெறி ஆழ்வார்களால் உயர்த்திப் பிடித்து அன்பு நெறியாக வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் மதமாக வளர்ந்தது விஷ்ணுவை வணங்கிய வைணவம்.
அன்றைய சமூகத்தில் எவை அதிக துன்பத்தைச் சாதாரண மனிதனுக்குக் கொடுத்ததோ அவைகளை நீக்க ஓர் அருளாளர் உதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்நேரத்தில் உதித்த விடிவெள்ளியே ராமானுஜர்!

திங்கள், 13 பிப்ரவரி, 2017

வேடுவனாய் வந்த வரதன்!

- எஸ்.வெங்கட்ராமன்

வைணவத் தலங்களில் கோயில் என்றால் திருவரங்கத்தையும், பெருமாள் கோயில் என்றால் ஸத்யவிரத ஷேத்திரமான வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் குறிக்கும். வைகாசி கருடசேவை உட்பட காஞ்சி வரதர் கோயிலில் நடைபெறும் எல்லா உற்சவ தினங்களும் சிறப்பானவையே. அவ்வகையில் ’அனுஷ்டான குள வைபவ' உற்சவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.
பகவத் ராமானுஜர் காஞ்சியில் இருந்தபோது அருகில் உள்ள திருப்புட்குழி கிராமத்தில் வசித்து வந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார்.  குருகுலவாசத்தில் வேதாந்த பாடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின.  அதனால் ராமானுஜரின் மேல் ஒருவித கசப்பு மனப்பான்மை ஏற்பட்டு அது மேன்மேலும் வளர, ஒரு காசி யாத்திரையாக சீடர்களுடன் சென்று ராமானுஜரை காசியில் கங்கையில் தள்ளிக் கொன்றுவிடுவது எனத் திட்டம் வகுத்தார் யாதவப் பிரகாசர். இதனை யாத்திரையில் தனது தம்பி முறையான கோவிந்தபட்டர் என்பவர் மூலமாக அறிந்த ராமானுஜர் பல மைல் தூரங்கள் கடந்து வந்த நிலையில் யாத்திரையிலிருந்து தப்பித்துவிட்டார். காஞ்சியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.