திங்கள், 9 ஜனவரி, 2017

திருக்கோளூர்ப் பெண்பிள்ளையின் பக்தி ஏக்கம்

-பருத்தியூர் கே.சந்தானராமன்

பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்நம்பி என்ற செல்வந்தர், திருவரங்கன் திருக்கோயில் தொண்டில் ஈடுபட்டிருந்தார். எனினும் அவருடைய தொண்டுகள் அரங்கனுக்கும் அடியார்களுக்கும் பயனுள்ளதாக அமையவில்லை. நம்பியைத் திருத்த திருவுள்ளம் கொண்டார் ராமானுஜர். ராமானுஜரின் அறிவுரைகளை நம்பி அலட்சியம் செய்தார். அதனால் மனமுடைந்த ராமானுஜர் காஞ்சிக்கே திரும்ப எண்ணினார். ஆனால், கூரத்தாழ்வார் அவரைச் சமாதானம் செய்தார். நம்பியை நல்வழிப்படுத்தும் பொறுப்பைத் தான் மேற்கொள்வதாகச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார். நம்பிகள் மனம் திருந்தி வந்து ராமானுஜரின் சீடரானார்.

ராமானுஜர் நம்பிக்கு ‘திருவரங்கத்து அமுதனார்’ என்ற திருப்பெயரையும் சூட்டினார். அமுதனார், ராமானுஜர் மகிழும் விதத்தில் தொண்டுகளைச் செய்தார். திருவரங்கன் சந்நதியில் இயற்பா சேவிக்கும் பணியையும் இனிதே செய்து வந்தார். திருவரங்கத்து அமுதனார்க்கு ஒரு நூல் இயற்ற வேண்டும் என்ற அவா மேலிட்டது. அதனை ராமானுஜரிடம் கூறினார். கூரத்தாழ்வார் அல்லது பன்னிரு ஆழ்வார்கள் குறித்த நூல் ஒன்றை எழுதலாம் என்றார் ராமானுஜர். ஆனால் அமுதனாரோ ‘ராமானுஜர் நூற்றந்தாதி’ என்ற நூலை இயற்றினார். ஒவ்வொரு பாடலிலும் ராமானுஜரின் திருப்பெயரை அமைத்து, நூறு பாடல்கள் கொண்ட அந்தாதியாக இயற்றினார். ராமானுஜரின் முன்னிலையில் அந்த நூல் அரங்கேறியது.

அறிஞர்கள் பாராட்டினர். அடியவர்கள் பாராயணம் செய்தனர்.  ‘அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே?’ என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்கினார்.


அதன்மூலமாக திருவரங்கத்து அமுதனார் ராமானுஜரின் சீடராகி, அவர் மீது நூற்றந்தாதி பாடி, தமது குருபக்தியை வெளிப்படுத்தினார். அது போன்ற ஒரு நூலை இயற்றும் பேறு தமக்குக் கிடைக்கவில்லையே என்ற தமது ஏக்கத்தைத் தெரிவிக்கிறார்.

மாறனேரி மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர் மாறனேரி நம்பி. ஆளவந்தாரின் மற்றொரு சீடராகிய பெரிய நம்பிக்கு மிகவும் நெருக்கமானவர்.

மாறனேரி நம்பி உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். மாறனேரி நம்பி ஒரு நாள் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார். பெரிய நம்பி அது குறித்து வினவினார். ‘‘மண்ணால் ஆகிய உடலுக்கு மண்ணை இடுகிறேன்’’ என்று பதிலளித்த நம்பி, கண்ணனும் மண்ணை உண்டதைச் சுட்டிக் காட்டினார்.
ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார். மாறனேரி நம்பிகள் அதனைத்தான் வாங்கிக்கொண்டு குருநாதரைக் குணமடையச் செய்தார். தமது நோயை வாங்கிக் கொண்ட மாறனேரி நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார். அவ்வாறு அந்த அடியார்கள் சாதிபேதமில்லாமல் பழகினர்.

உழவுத் தொழில் புரிந்த வேளாளராகிய மாறனேரி நம்பி பரமபதம் எய்தினார். வேதியராகிய பெரியநம்பி அவருக்கு இறுதிக் கடன்களை இயற்றினார். அதனை விரும்பாத மற்ற வேதியர்கள் பெரிய நம்பியை விலக்கி வைத்தனர். பெரிய நம்பியின் மகள் அந்துழாய் கொதித்தெழுந்தாள். திருவரங்கத்துப் பெருமானிடமே நியாயம் கேட்கச் சென்றாள். அப்போது திருவரங்கன் தேரில் உலா சென்று கொண்டிருந்தார். ‘‘எனது தந்தை பெரிய நம்பி, மாறனேரி நம்பிக்கு இறுதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்!’’ என்றாள் அந்துழாய்.

அரங்கனின் தேர் அந்துழாயின் சொற்களைக் கேட்டு அப்படியே அசைவற்று நின்றது! அடியார்கள் வியந்தனர்! அப்போது ராமானுஜர் அங்கு வந்தார். பெரிய நம்பிகளின் செயலுக்கு விளக்கம் கேட்டார். முன்னோர் செய்ததையே தானும் செய்ததாகக் கூறிய பெரிய நம்பிகள் இரண்டு சான்றுகளை எடுத்துக் காட்டினார். பறவையினத்தைச் சேர்ந்த ஜடாயுவிற்கு ஸ்ரீராமர் இறுதிக் கடன் செய்தார்.

மாறனேரி பறவையை விடத் தாழ்ந்தவரா? விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன்கள் செய்துள்ளார். மாறனேரி நம்பி விதுரரை விடத் தாழ்ந்தவரா?  ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர் கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார். இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை  ‘கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே?’ என்று கேட்டு நினைவுபடுத்துகிறார்.

திருவாய்மொழி விளக்கம்:  ராமானுஜர் ஐந்து ஆசிரியர்களிடத்தில் அரிய பொருள் விளக்கங்களைக் கேட்டறிந்தவர். எனினும், தன்னுடைய இயல்பான நுண்ணறிவால் அவற்றைச் சிந்தித்துச் செயல்பட்டவர். எட்டெழுத்து மந்திரம் முதலானவற்றைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டுத் தெளியுமாறு ராமானுஜருக்கு பெரிய நம்பிகள் அறிவுறுத்தினார். திருவரங்கத்திலிருந்த ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண, பதினெட்டு முறை சென்றார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த திருவெட்டெழுத்து மந்திரத்தை அவ்வூர் கோபுரத்தின் மீது நின்று ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உபதேசித்தார், ராமானுஜர். குருவின் கட்டளையை மீறி அவ்வாறு உபதேசித்ததால் அவருக்கு நரகம் கிட்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது என்று கூறித் தன் ஆசானையும் பிரமிக்கச் செய்தார் ராமானுஜர். அத்துடன் திருக்கோட்டியூரார், ராமானுஜரை, திருமலையாண்டான் என்ற ஆசானிடம் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் விளக்கம் கேட்டு அறியப் பணித்தார்.

அவ்வாறே ராமானுஜர் திருமலையாண்டானிடம் பாடம் கேட்டார். சில பாசுரங்களுக்கு, திருமலை ஆண்டான் கூறிய விளக்கங்களுக்கு மேலும் தெளிவான பொருள்கள் கூறி அவரை வியக்கச் செய்தார். ஏனெனில், ராமானுஜர் கூறிய சிறப்பு விளக்கங்கள் யாவும் ஆளவந்தார் கூறிய விளக்கங்கள் ஆகும். ஆளவந்தாரிடம் நேரில் பாடம் கேட்காத ராமானுஜர் அவர் கூறிய அதே சிறப்பு விளக்கங்களை விவரித்தது ஆண்டானுக்கு வியப்பாக இருந்தது!  ‘சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே’  -‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள்.

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து உறவு கொண்டனர். தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசிக்கவோ, உபதேசம் பெறவோ வாய்ப்புப் பெறவில்லையே என்று திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ஏங்குகிறார்.


நன்றி: தினகரன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக