ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஸ்ரீ ராமானுஜரும் விசிஷ்டாத்வைதமும்...

 -விவேக ஜோதி


ஆதிசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு மத்தியில் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரால் இந்த விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.

தமிழகத்தில் அவதரித்த ராமனுஜர் அவருக்கு முன்பிருந்த வியாசர், பாருசி, பாராங்குசர், நாத முனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டியுள்ளார். அந்தக் கொள்கைகளை விளக்கும் முகமாகத்தான் ராமானுஜர் பகவத்கீதை,பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார்.


அத்வைதத்தில் இருந்த சில விளக்கங்களில் ராமானுஜர் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில் தரும் விதமாகவே ராமானுஜர் தன் விசிஷ்டாத்வைதத்தை பெருமளவு உருவாக்கினார் என்று சொல்லலாம். விசிஷ்டாத்வைதம் என்பதற்கு விசேஷத்தோடு கூடிய அத்வைதம் என்பது பொருள்.

உதாரணமாக அத்வைதத்தில் கயிறு பாம்பாகத் தோன்றுவதாகச் சொல்லப்படும் உதாரணம். கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல பிரும்மம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம். அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? பிரும்மத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.

பாம்பிடம் உள்ள நஞ்சு பாம்பின் உள்ளேயே இருந்தாலும் பாம்பைப் பாதிப்பதில்லை. அதே போல மாயை பிரம்மத்துடனேயே இருந்தாலும் அந்த பிரம்மத்தைப் பாதிக்காமல் உள்ளது என்று சொல்கிறது அத்வைத விளக்கம். அப்படியானால் மாயை பாதிப்பது யாரை? அது ஜீவனைத் தானே. அப்படியானால் அவன் பிரம்மம் அல்லாத வேறொருவனாகத் தானே இருந்தாக வேண்டும். அந்த மாயை பிரம்மத்தையே பாதிக்கிறது எனில் மோட்சம் எவ்வாறு உண்டாக முடியும்? ஆகவே பிரம்மத்தைத் தவிர்த்து ஜீவன் உண்டு என்கிறது விசிஷ்டாத்வைதம்.

பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர்க் காட்சியில் போல உலகத்தோற்றம் பொய் என்பது தவறு. அந்த கானல் நீரிலும் நீர் இருப்பது உண்மையே. உலகம் முழுவதும் பஞ்சபூதங்களின் கலப்பால் உருவாகிறது. எனவே உலகில் எங்கும் எல்லா பூதங்களும் கலந்தே உள்ளன. அதனால் பாலைவனத்திலும் நீர் உள்ள அம்சத்தை தொலைவிலிருந்து நமது கண்கள் பார்த்தறிவதே கானல் நீரின் காட்சி உண்டாகுதல். அதன் அருகில் சென்றால் அள்ளிக் குடிக்கும்படித் தண்ணீர் இல்லையே தவிர கண்ணால் காண முடியாவிடினும் நீரின் அம்சம் இல்லாமல் போய் விடுவதில்லை.

இப்படி இரண்டிலும் ஒரே அம்சப் பொருள் உள்ளவை தான் ஒன்று இன்னொன்றாகக் காணப்படுகின்றது. கயிற்றுக்கும், பாம்பிற்கும் ஒற்றுமையாக உள்ள நீண்ட, மெல்லிய, வளைவுகள் என்ற பொதுவான அடையாளங்களே கயிறைப் பாம்பாகக் கருதச் செய்கின்றதே தவிர ஒரு கல்லோ, செடியோ பாம்பாகத் தெரியாது. இவ்வாறு அத்வைதத்தில் மாற்றுக் கருத்துக்களை வாதமாக வைக்கும் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தில் பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் ஆகியவற்றை பின்வருமாறு விளக்குகிறார்.

பரமாத்மாவான இறைவன் ஒருவர் தான் இருக்கிறார். ஸ்ரீமந் நாராயணனனே அந்த முழுமுதற்கடவுள். அவருக்கு உடலாயிருப்பது ஜகத் என்கிற உலகம். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த்தத்துவங்களாயிருப்பது ஜீவன்கள். சூரியனிடமிருந்து எண்ணிலடங்கா கதிர்கள் தோன்றி வருவதுபோன்று ஜீவன்கள் பரமாத்மாவில் இருந்து உருவாகின்றனர்.

புற உலகையும் தனி மனித உயிர்களையும் (ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில் உறையும் உயிர் என்று சொல்லலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அது போல புறஉலகு, ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.

இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான். எனவே ஆன்மாக்கள் பலவாயினும் ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது பரமாத்மா ஒன்றுதான். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் தன் சொந்த அனுபவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் பக்தியுடன் இறைவனை சரணாகதி அடைய வேண்டும் என்று ராமானுஜர் கூறுகிறார்.

மொத்தத்தில் ஞான மார்க்கத்தை விட முக்கியமாய் பக்தியும், சரணாகதியுமே இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லி விசிஷ்டாத்வைதம் பின் வரும் தலைமுறைகளுக்குப் பக்தி மார்க்கத்தைவழிகாட்டி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக