புதன், 25 ஜனவரி, 2017

காவித் துணியில் புரட்சி செய்தவர் ராமானுஜர்

-ஆசிரியர் குழுசென்னை, ஜன. 12: காவித் துணியை அணிந்து கொண்டு புரட்சி செய்தவர் ராமானுஜர் என்று ஊடகவியலாளர் மை.பா.நாராயணன் பேசினார்.

சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் தினந்தோறும் உரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (ஜன. 12)  நடைபெற்ற உரை நிகழ்ச்சியில் ‘அற்புத மகானும் அர்த்தமுள்ள ஆயிரமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மை.பா. நாராயணன் பேசினார். வெற்றி நமக்கே என்ற தலைப்பில் சிறுமி ரித்திகா அழகம்மை பேசினார். நிகழ்ச்சியில் மை.பா. நாராயணன் பேசியது: 

ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும் இன்றும் வழிகாட்டியாக இருக்கிறார். அன்றைய காலத்தில் காவித் துணியை அணிந்து கொண்டு புரட்சி செய்தவர் அவர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதியை ஒழிக்க பாடுபட்டவர். அவர் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியல்ல. சமூகத்தின் பிரதிநிதி. தற்போதும் பல கிராமங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. ஆனால் அப்போதே தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றவர் அவர்.

சமுதாயத்தையும் சமயத்தையும் செப்பனிட்டவர் அவர். ராமானுஜரின் சேவையில் மனிததேயமும் இருந்தது என்றார் மை.பா. நாராயணன். இந்த நிகழ்ச்சியில் பபாசி துணை இணைச் செயலர் குருதேவா, செயற்குழு உறுப்பினர் ஷைலஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

-தினமணி செய்தி 


திங்கள், 9 ஜனவரி, 2017

திருக்கோளூர்ப் பெண்பிள்ளையின் பக்தி ஏக்கம்

-பருத்தியூர் கே.சந்தானராமன்

பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்நம்பி என்ற செல்வந்தர், திருவரங்கன் திருக்கோயில் தொண்டில் ஈடுபட்டிருந்தார். எனினும் அவருடைய தொண்டுகள் அரங்கனுக்கும் அடியார்களுக்கும் பயனுள்ளதாக அமையவில்லை. நம்பியைத் திருத்த திருவுள்ளம் கொண்டார் ராமானுஜர். ராமானுஜரின் அறிவுரைகளை நம்பி அலட்சியம் செய்தார். அதனால் மனமுடைந்த ராமானுஜர் காஞ்சிக்கே திரும்ப எண்ணினார். ஆனால், கூரத்தாழ்வார் அவரைச் சமாதானம் செய்தார். நம்பியை நல்வழிப்படுத்தும் பொறுப்பைத் தான் மேற்கொள்வதாகச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார். நம்பிகள் மனம் திருந்தி வந்து ராமானுஜரின் சீடரானார்.

ராமானுஜர் நம்பிக்கு ‘திருவரங்கத்து அமுதனார்’ என்ற திருப்பெயரையும் சூட்டினார். அமுதனார், ராமானுஜர் மகிழும் விதத்தில் தொண்டுகளைச் செய்தார். திருவரங்கன் சந்நதியில் இயற்பா சேவிக்கும் பணியையும் இனிதே செய்து வந்தார். திருவரங்கத்து அமுதனார்க்கு ஒரு நூல் இயற்ற வேண்டும் என்ற அவா மேலிட்டது. அதனை ராமானுஜரிடம் கூறினார். கூரத்தாழ்வார் அல்லது பன்னிரு ஆழ்வார்கள் குறித்த நூல் ஒன்றை எழுதலாம் என்றார் ராமானுஜர். ஆனால் அமுதனாரோ ‘ராமானுஜர் நூற்றந்தாதி’ என்ற நூலை இயற்றினார். ஒவ்வொரு பாடலிலும் ராமானுஜரின் திருப்பெயரை அமைத்து, நூறு பாடல்கள் கொண்ட அந்தாதியாக இயற்றினார். ராமானுஜரின் முன்னிலையில் அந்த நூல் அரங்கேறியது.

அறிஞர்கள் பாராட்டினர். அடியவர்கள் பாராயணம் செய்தனர்.  ‘அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே?’ என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்கினார்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஸ்ரீ ராமானுஜரும் விசிஷ்டாத்வைதமும்...

 -விவேக ஜோதி


ஆதிசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு மத்தியில் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரால் இந்த விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.

தமிழகத்தில் அவதரித்த ராமனுஜர் அவருக்கு முன்பிருந்த வியாசர், பாருசி, பாராங்குசர், நாத முனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டியுள்ளார். அந்தக் கொள்கைகளை விளக்கும் முகமாகத்தான் ராமானுஜர் பகவத்கீதை,பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார்.

சனி, 7 ஜனவரி, 2017

ஸ்ரீ ராமானுஜர் வரலாறு

-விவேக ஜோதி


அத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தான் ஸ்ரீ ராமானுஜர்.

இவர் கி.பி. 1017 ஆண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயது முதலாகவே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிகவும் நுணுக்கமான தத்துவங்களை மிக எளிதாக புரிந்து கொண்டார். தனது 16-வது வயதில் ரக்ஷகாம்பாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் அவர் தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடியேறினார்.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

ஸ்ரீ ராமாநுஜ தரிசனம்: நாட்காட்டி

-என்.ராஜேஸ்வரி
மதத்தில் புரட்சி செய்த மகான் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி, சிறப்பு வெளியீடாக `ஸ்ரீராமாநுஜ தரிசனம்` என்ற தலைப்பில் பதிமூன்று தாள்கள் கொண்ட 2017 ம் ஆண்டு நாட்காட்டியை பற்பல வண்ணத்தில், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

பாரத நாடு முழுவதும் அவரது பாதம் பட்ட தலங்களைக் குறிப்பிடும் வகையில், இந்திய வரைபடத்தில் புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ள விதம் தெளிவு. ராமாநுஜரின் ஓவியம் தங்கத் தாம்பாளத்தில் வைத்தாற்போல் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருப்பது அவருக்குத் தனிச் சிறப்பு செய்வதாக அமைந்துள்ளது.

`பூமன்னு மாது பொருந்திய மார்பன்` என்று தொடங்கும் ஸ்ரீராமாநுஜர் நூற்றந்தாதி பாசுரம் முதல் பக்கத்திலேயே எடுத்தாளப்பட்டிருக்கும் விதம் அழகு. முதல் பக்கத்தைத் தொடர்ந்து வரும் பக்கங்களில் ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் பாஷ்யக்காரர் திருக்கோயில், திருப்புட்குழி அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், மதுராந்தகம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் அருள்மிகு செளமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பி திருக்கோயில் உள்ளிட்ட பன்னிரு ஸ்ரீவைணவத் தலங்கள் ஒவ்வொரு தாள் வீதம் இடம் பெற்று உள்ளன. அந்தந்தத் திருத்தலத்தில் ராமாநுஜருடனான சிறப்பை எடுத்துக்காட்டும் குறிப்புகள், ராமாநுஜரின் அர்ச்சா விக்கிரகம், திருத்தல திவ்ய தம்பதிகள் ஆகியோரின் உற்சவ விக்கிரங்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ள விதம் அருமை.

இந்த நாட்காட்டி இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களான ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் உட்பட பல திருக்கோயில்களில் அடக்க விலையான 60 ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.


நன்றி: தி இந்து ஆனந்தஜோதி (05.01.2017)
.


செவ்வாய், 3 ஜனவரி, 2017

ராமானுஜர்- தேர்ந்த நிர்வாகி

-ஆமருவி தேவநாதன்

வைணவம் மீது சாமானிய மக்கள் கவனத்தைத்  திருப்பி, ஒரு தேர்ந்த நவீன நிர்வாகத் திறன் உள்ள நிறுவனத்தின் தலைவர் போல் ஆற்றுப்படுத்தி வைணவம் ஒரு மாபெரும் எழுச்சியுடன் மேலோங்க வழி வகுத்தவர் இராமானுசர். 
இவரது காலம் கி.பி.1017-1137.  நீண்ட ஆயுள் வாய்க்கப்பெற்ற அவர் முதலாம் இராசேந்திரன் துவங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்துள்ளார். இந்நீண்ட ஆயுளில் செயற்கரிய செயல்கள் செய்து வைணவம் தழைக்கச் செய்தார் இராமானுசர்.
இராமானுசரின் தத்துவம் விசித்டாத்வைதம். இது சங்கரரின் அத்வைதத்தில் இருந்து வேறுபட்டது. இந்தத் தத்துவத்துக்கும்  ஜைன, பௌத்தத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ஆனால் கொஞ்சம் ஆழமானவை. இவை பற்றித் தனியான ஒரு பதிவில் காண்போம். தற்போது இராமானுசர் மற்றும் அவரது வழிமுறைகள் பற்றி மட்டும் பார்ப்போம்.