வெள்ளி, 30 டிசம்பர், 2016

ராமானுஜரும் பெரிய நம்பியும்!

- எம்.என். ஸ்ரீநிவாஸன்
ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர் கி.பி. 997 - 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தார், பெரியநம்பி.

ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை (முத்திரை பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து வைத்தார். மேலும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை காஞ்சிப் பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.

காஞ்சியில் சில காலம் வாழ்ந்த போது பெரிய நம்பிகளின் மனைவிக்கும் ராமானுஜருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராமானுஜரிடம் திரும்பி விட்டார். தகுந்த நேரத்தில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜர் திருவரங்கம் சென்றார்.


ராமானுஜர் சென்றபோது ஆளவந்தார் பரமபதம் சென்றுவிட்டார். அவருக்கு பின்னர் வைணவ ஆசார்ய குரு பீடத்தை அலங்கரித்து திருவரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை சரி செய்தார் ராமானுஜர்.

இதனிடையில் ஆளவந்தாரது மற்றொரு சீடரான தாழ்ந்த குலத்தைச் சார்ந்த மாறநேரி நம்பி என்பவர் இயற்கை எய்திவிட்டார். அப்போது யாரும் அவருக்குண்டான ஈமக்கடன்களைச் செய்ய முன்வரவில்லை. பெரிய நம்பியே ஈமக்கடன்களைச் செய்துவிட்டு இதுகுறித்து ராமானுஜரிடம் தெரிவித்து, 'நான் செய்தது சரிதானே' என்று வினவினார்.

ராமானுஜர் 'இவ்வாறு செய்யலாமா?' என்று கேட்க, பெரிய நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார்.

பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன், தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை சுட்டிக்காட்டி 'இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா? ராமனைவிட நான் உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும் மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக் காட்டிலும் நான் உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின் சடங்குகளிலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள திருவாய்மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?' என்று ராமானுஜரைக் கேட்க, அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார். எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின் திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.

இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில் தாங்கள் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து திருமாளிகையின் உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்துவங்கியது.

மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால் உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும் அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர். ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள், 'அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்' எனக் கூற, பெரிய நம்பிகள் அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று முடிவு செய்ய நமக்குத் தகுதி இல்லைஎனத் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன் உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன் என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.

இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம் வளர்த்தார்.

நன்றி: தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக