புதன், 9 நவம்பர், 2016

சமுதாயத்தைப் புரட்டிப்போட்டவர் ராமானுஜர்


-சுப்பு

.
நான் ராமானுசன் 


ஆமருவி தேவநாதன்


.
தன்னை முன்னிறுத்தி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள் தமிழில் பிரபலமாக இல்லை.  ‘பாரதியாரின் சுயசரிதை’,  ‘நாமக்கல் கவிஞரின் என் கதை’,  ‘.சாவின் என் சரித்திரம்போன்ற சில வரலாறுகளே இங்கே வெற்றி பெற்றுள்ளன என்று கருதியிருந்தேன்
 
இல்லை, என்கிறார் ஆமருவி தேவநாதன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாட்குறிப்பு போல இவர் எளிய தமிழில் கொடுத்திருக்கிறார். ராமானுஜரின் வாய்மொழியாக இது எழுதப்பட்டுள்ளது


இந்தப் புத்தகம் ஒரு புனைவு. இது பொதுவாக தமிழ்நாட்டிலிருந்து எழுதப்படும் புத்தகங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இங்கே, இன்றைய சூழலில் ஒருவரைப் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால் இன்னொருவரை இழிவுபடுத்த வேண்டும் என்கிற உத்தி இருக்கிறது

ஆமருவி தேவநாதன் இந்தத் தவறைச் செய்யவில்லை. ஆதிசங்கரரின் மீது உள்ள மதிப்பு குறையாமல், ஆதிசங்கரரின் அத்வைதப் பார்வை பற்றிய கேள்விகளைத் தொடுக்கிறார்

(பக் 27) ராமானுஜர் பேசுகிறார்“சங்கரரிடம் எனக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு. நமது வைதீக சம்பிரதாயத்தையே மீண்டும் ஸ்தாபித்தவர் அவர். ஷண்-மதங்களான கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம் என்ற ஆறு தரிசனங்களைக் காட்டினார் அந்த மஹான். ஆனால் சித்தாந்தத்தில் குழப்பிவிட்டார். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது”.

(பக் 33) சமுதாயத்துடன் ஒட்டாமலும் சமுதாயத்தின் பல கூறுகளையும் இணைக்காமலும் வெறும் தத்துவம் மட்டுமே பேசுவதாலும் பெருவாரியான மக்களை ஒருங்கிணைக்காமல் இயங்குவதாலும் அந்தத் தத்துவங்களும் அதன் தோற்றுவாய்களும் அழிகின்றன. இது பலருக்கும் புரிவதில்லை. அந்த நிலை அத்வைதத்துக்கும் ஏற்பட்டது

சாதாரண வாசகர்களுக்குத் தத்துவ சிக்கல்களை எதிர்கொள்வது சிரமம்தான். தர்க்கம் அதற்கு அண்ணன் முறை. சர்க்கஸ் கூடாரத்தில், உயரக் கம்பியில் ஊசலாடும் வித்தையைப் போன்றது இந்தப் பகுதிகள். ஆமருவி இந்தப் பிரச்னையை எப்படிச் சுலபமாகக் கையாண்டிருக்கிறார்

சில நம்பிக்கைகளை மாற்றக் கூடிய புத்தகம் இது என்று சொன்னேனல்லவா? சில இடங்களில் நம்முடைய நம்பிக்கை என்னும் ஆமையை இவர் கவிழ்த்துப் போட்டு அடித்துவிடுகிறார்

(பக் 90  91) வஜ்ர சூசிகா உபநிஷதம்என்று ஒரு உபநிஷதம் உள்ளது. அதில் ஒரு கேள்வி வருகிறது. நாரதர் வியாசரிடம் கேட்கிறார். ‘பிராம்மணன் உயர்ந்தவன் என்கிறார்களே, இது எவ்வளவு உண்மை? பிராம்மணன் உயர்ந்தவன் என்றால் மற்றவர்கள் தாழ்ந்தவர்களா? ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் கீழானவர்கள் என்கிற வரிசையில் அமைந்துள்ளதா இந்த உலகம்?’ 

வியாசர் சொல்கிறார், பிராமணன் என்பது என்ன? உடலா? உடல் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வயோதிக பிராமணன் இறந்து விடுகிறான். அவனது பிள்ளைகள் அவனுக்கு எரியூட்டுகிறார்கள். உடல் பிராம்மணன் என்றால், அதனை எரியூட்டும்போது அந்த உடல் அழிவதால் பிள்ளைகளுக்கு பிராம்மணனைக் கொன்றபிரும்மஹத்திதோஷம் ஏற்பட வேண்டுமே. அதனால் அவர்கள் முகங்கள் விகாரமடைய வேண்டுமே. அப்படி ஒன்றும் நிகழவில்லையே. ஆக உடல் பிராமணன் இல்லை.  “ஆக பிராம்மணன் என்பது தொழிலோ, குணமோ, உடலோ, ஆத்மாவோ அல்ல. அது ஒரு நிலை. வாழ்வில் அடைய வேண்டிய நிலை. கல்வி, ஞானம், தத்துவம், வேள்வி முதலியவற்றில் தேர்ச்சி பெறும் ஒரு நிலை.. .”

மொத்தத்தில், ராமானுசர் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டவர். ஆமருவியின் முயற்சியும் அத்தகையதே. தமிழ் புத்தக வரலாற்றில் தடம் பதிக்கும் முயற்சி இது. தத்துவ முத்திரையோடு இது வந்திருக்கிறது


நூல் விவரம்:
 நான் ராமானுசன் 
ஆசிரியர்: ஆமருவி தேவநாதன்
பக்கங்கள் 136- விலை: ரூபாய் 60/-
விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக