செவ்வாய், 8 நவம்பர், 2016

எம்பெருமானார் பெருமைகள்

-ரேவதி‘வையத்து வாழ்வீர்காள்’ என திருப்பாவையில் ஆண்டாள் விளித்து, உலகோர் அனைவரும் உய்யப் பாடினார்.

அதுபோலவே ஆண்டாளுக்கே அண்ணனான ஸ்ரீராமானுஜரும் உலகோர் அனைவரும் உய்ய திரு எட்டு மந்திரத்தை உரக்கக் கூறி உலக மக்கள் அனைவரையும் கூவி அழைத்தார்.


சமஸ்கிருதத்தில் வடமொழி வேதங்களை மட்டும் படித்திருந்த ஸ்ரீராமானுஜர், தமது குரு ஆளவந்தாரின் மூன்று ஆசைகளையும் நிறைவேற்ற தமிழ் கற்றார்.
கற்றலிலும் கற்பித்தலிலும் சிறந்து விளங்கினார்.

திருவாய்மொழிக்குப் புதிய விளக்கங்கள் கூறினார். பெரிய கோயிலாம் திருவரங்கக் கோயிலில் அரங்கன் முன் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார்.

பெருமாள் வீதிகளில் எழுந்தருளும்போது ‘தமிழ்’ முன்னே செல்லச் செய்தார்.
மேலும் ‘ஆசை உடையோர் அனைவரும் தமிழ் மறையைக் கற்கலாம்’ எனப் பொது உடைமை ஆக்கினார்.

இந்தியாவிலும் நேபாளத்திலும் உள்ள எல்லா திருப்பதிகளிலும் ‘பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ பாடுவதை ஒரு மரபாக இன்று வரை தொடர வைத்துள்ளார்.

கோயில் நிர்வாகங்கள் அனைத்தையும் சீர்திருத்தம் செய்தார்.

மனதால் சமதர்மமென்ற புரட்சிகரமான எண்ணங்களை, செயலால் ஒழுங்குபடுத்தினார்.

விசிஷ்டாத்வைத கொள்கையை, கடைபிடித்து அது ‘ராமானுஜர் தத்துவ’மெனப் பெயர் பெறச் செய்தார்.

திருநகரிக் கோயிலுக்குப் போனபோது, அவரை தரிசிக்க வந்த ஹரிஜன சமுதாயப் பெண்ணை, ஒரு சீடர், தள்ளி நிற்கச் சொன்னதும், ‘உலகமெல்லாம் உலகளந்த பெருமானிருக்கும்போது நான் எங்கே ஒதுங்குவது?’ என்றாள்.
இது கேட்டு ராமானுஜர் மகிழ்ந்து அவளை ஆசிர்வதித்தார்.

 ‘யாதும் ஊரே... யாவரும் கேளீர்’ என்ற கொள்கையிலிருந்து அவர் என்றும் பிழறவேயில்லை.

முப்பது இரண்டு வயதிலேயே உலக ஆசைகளை முற்றிலும் துறந்து ‘முக்கோல்’ என்ற திரிதண்டம் ஏந்தி ‘யதிராஜ’ரானார். இவரை திருப்பாவை ஜீயர் (அடிகளார்) என்றும் மக்கள் அழைத்தனர்.

பல கோயில்களுக்கும் திருப்பணிகளுக்கும் ஏற்பாடு செய்து கட்டுவித்தார். மக்கள் வந்து தங்கப் பல மடங்களையும் அமைத்தார். ஏழுமலையானுக்கு பச்சைக் கற்பூர நாமம் சாற்றவும் ஏற்பாடு செய்தார்.

நூல்கள் பல எழுதினார். 25,000 சூத்திரங்கள் கொண்ட பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அதைப் பரப்பவும் கற்பிக்கவும் ‘ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் முதல் வேந்தராக ‘நடாத்தூர் ஆழ்வானை’ நியமித்தார். பிராமணரையும் பஞ்சமரையும் ஒன்றுபடுத்தி சமதர்ம சமுதாயம் ஏற்படுத்தினார்.

மேலும், கீதாபாஷ்யம், வேதாந்த சங்கிரஹம், வேதார்த்த சாரம், வேதாந்த தீபம், கத்யத்ரயம், நித்ய கிரந்தம் ஆகிய நூல்களையும் அருளினார்.

இன்றும் தாமான திருமேனியாய் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் அமர்ந்து, அரங்கன் கோயில் பணிகள் அனைத்தும் செவ்வனே நடக்கிறதா என கண்காணித்து, அரங்கனையும் அவரையும் பணிந்து வரும் மக்களுக்கு இந்த உலகில் உய்ய வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் அந்தப் புனிதர், ஆச்சார்யர். 


நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் சிறப்பிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக