திங்கள், 7 நவம்பர், 2016

தாமும் தமருமா உகந்து தாமான பவிஷ்யதாசாரியர்!

-மனத்துக்கினியான்‘பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்...’ 
-நம்மாழ்வாரின் இந்த திருவாய்மொழிப் பாசுரத்தில்தான் எத்தனை உள்ளர்த்தம் பொதிந்து கிடந்தது. தன்னுடைய இந்தப் பாசுரத்தை விளக்கப் புகுந்த அவரே பின்னாளில் வைணவ மார்க்கம் தழைக்க அவதரிக்கப் போகும் மகானை தன் சீடருக்குக் காட்டியருளினார்!


தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள திருக்கோளூரில் அவதரித்த மதுரகவியாழ்வார், வடக்கே சென்றார். எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தார். ஆனால், அவருக்கு தெய்வீக ஒளி, தெற்கேதான் தெரிந்தது! வானில் உதித்த அந்தப் பேரொளி அவரை வசப்படுத்தியது. ஒளியின் பாதையைப் பின் தொடந்தார். தன் ஊருக்கு அருகில் திருநகரியில் நின்றது அந்தப் பேரொளி.
உறங்காப் புளியெனப் பேரெடுத்த அந்தப் புளிய மரப் பொந்தினுள், ஞானம் உறங்கா நிலையில் பேரொளியாய்த் திகழ்ந்த நம்மாழ்வாரைக் கண்டுகொண்டு அடிபணிந்தார். ஒற்றைக் கேள்வியால் அவரின் ஞானத்தை அளவெடுக்க எண்ணினார்.
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
ஒற்றைப் பதிலால் உயர் ஞான விளக்கம் தந்தார் நம்மாழ்வார்...  ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!’

அதென்ன? இது உயிரும் உடலும் தொடர்புடைய ஞான விளக்கம்! இந்த உடலினுள் புகுந்த ஆன்மா, உடல் சார்ந்த இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடலுடனேயே கிடக்கும் எனும் விளக்கம்! உலக வாழ்வின் கர்மாக்களை அனுபவித்துக் கொண்டு அது தீரும் வரை அந்த உடலினுள் தங்கியிருக்கும் எனும் ஞான விளக்கம். இன்னும் சற்று விலகிப் போனால்... ஆசார்யனின் மறை மொழிகளைத் தின்று, விருப்பம் தீரும் வரை அவர் அணுக்கத்தில் கிடக்கும் எனும் விளக்கம்.

மதுரகவிகளுக்கு என்னவெல்லாமோ தோன்றியது. அந்த நொடியே நம்மாழ்வார் குருவானார். அதுவும் சின்னஞ்சிறு வயது! வயதிற் பெரிய மதுரகவியோ சீடரானார்.

அதுமுதல், குருவே தமக்கு எல்லாமெனத் திகழ்ந்தார் மதுரகவிகள். பெருமாளைப் பாடாது, குருவையே பாடி, ‘கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனான கண்ணனைக் காட்டிலும், தென்குருகூர் நம்பி என்று சொன்னால் என் நாவு இனிக்கும்’ என்று வாழ்ந்த சீடர் மதுரகவிகள்.

ஞான உபதேசம் நல்கிய நம்மாழ்வார், தம் முப்பத்திரண்டாம் அகவையில் இவ்வுலக வாழ்வு துறந்து, திருநகரியில் இருந்து வைகுந்தம் புகத் திருவுள்ளம் கொண்டார். அதற்குள் ஏன் இந்த அவசரம்? என்று கேட்டார் மதுரகவிகள்!

தமிழ் மறை தந்தாகிவிட்டது. நால் வேதமும் ஞான சாரமா தமிழிற் கொடுத்தாகிவிட்டது. வந்த காரியம் முடிந்த பின்னே, அடுத்த வேலை இங்கென்னே என்றிருந்தார் நம்மாழ்வார்.

ஆயினும் மதுரகவிகளின் ஏக்கமும் போக்கும் நம்மாழ்வாரை அடுத்து அனுக்ரஹிக்கத் தூண்டியது.

நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளினார்... ‘மதுரகவிகளே நீரும் வந்து சேருவீர். உம் பணி முடிந்தால் எம்முடன்! அதுவரை உமக்குத் துணையாக எம்மைப் போல் ஒன்றைத் தருகிறோம். இதோ... இந்தக் கனிம வளம் மிகுந்த தாமிரபரணி நீரை இப்போதே காய்ச்சும்! எம்மைப் போல் ஒன்று உருவாகும்!’  என்று பணித்தார்.

குருவின் ஆணை... செயல்படுத்தினார். பரணி நீர் காய்ச்சப் பட்டது. தாமிரச் சத்து மிகுந்த நீர் அன்றோ? இறுதியிற் கிடைத்தது ஓர் உருவம். ஆயின் அது தம் குருவினை ஒப்ப இல்லை! ஆயின் அது காட்டி, குருவிடமே கேட்டார் மதுரகவி!

 ‘ஆகா! இது என்ன வித்தியாசமாக, இதைப் பார்த்தால் தங்களைப் போல் தெரியவில்லையே? மழமழவென செதுக்கியும் செதுக்காமலும் ஓர் உருவம்?’

அவருக்கு பதிலளித்தார் நம்மாழ்வார்... ‘ஆம்! இது நாம் அல்லோம்! நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும் எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!’

 ‘பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாசார்யன்! சம்ப்ரதாயம் தழைக்கச் செயப் புகுந்த பின்னாள் ஆசான்!‘ என்றார்.

‘ஆகா! இவர் பின்னாளில் தோன்றப் போகிறவரா? முன்னமேயே எமக்கு அறிவித்தீரே! தீர்க்க தரிசனமோ இது?’ என்று நாத் தழுதழுக்க நெஞ்சில் ஏற்றினார்!

‘ஆம்! மதுரகவிகளே! நீரும் நானும் செய்யாததை இவர் செய்யப் புகுவார்! கைங்கர்யம் எனும் திருத்தொண்டே இவர் லட்சணம்! பாகுபாடு நீக்கி, பரந்தாமனிடம் ஒருவர் விடாது, அனைவரையும் சேர்ப்பிப்பவர்... அரங்கனுக்கு அடிமைப்படுத்தப் போகும் செயல்வீரர்! இவரை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த உருவத்தை நாளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பியும்!‘ என்றார் நம்மாழ்வார்.

மதுரகவிகளுக்கு மகிழ்ச்சிதான் ஆயினும் தம் குருவின் தாளிணைகளைப் போற்ற ஒரு விக்ரஹம் வேணுமே என்று மீண்டும் அடிபணிந்தார்.
மறுமுறை காய்ச்சும் என்றார் ஆழ்வார். அதன்படியே ஒரு விக்ரஹம் கிடைத்தது. இப்படி தாமிரபரணி நீரைக் காச்சிப் பெற்றது இரண்டு விக்ரஹங்கள். ஒன்று ராமானுஜராகிற பவிஷ்யதாசார்யர் திருமேனி. இன்னொன்று நம்மாழ்வாரின் திருமேனி. இரண்டுமே தற்போது ஆழ்வார் திருநகரியில் அணி செய்கின்றன.

ஆழ்வார் திருநகரி சென்றால் பவிஷ்யதாசார்யருக்கு தனி சந்நிதி உள்ளது. அங்கே இப்போதும் ராமானுஜரின் திருமேனியை நாம் தரிசிக்கலாம்.
இப்படி தாம் தோன்றப் போவதற்கு முன்பே திருமேனியராக் காட்டிக் கொடுத்த பவிஷ்யதாசார்யரான ஸ்ரீராமானுஜர், தாம் அவதரித்த பின்னும் மேலும் மூன்று திருமேனியராய் அன்பர்க்குக் காட்டிக் கொடுத்து அருள் புரிந்தார்.

தானுகந்த திருமேனி:

எம்பெருமானார் தம் 120-ஆம் அகவையில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோயில் நிர்வாகத்தை நெறிப்படுத்தலில் கவனம் செலுத்தி வந்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரை விட்டு ஸ்ரீரங்கம் வந்த பின், ஸ்ரீபெரும்புதூரில் அவரடியார்கள் அவரைக் காணாமல் பெரிதும் பரிதவித்தார்கள். அவர் நினைவு எப்போதும் தங்களுடன் இருக்க ஒரு வழி கண்டார்கள். எம்பெருமானாரின் விக்கிரகம் ஒன்றை ஒரு சிற்பியைக் கொண்டு செதுக்கச் செய்தார்கள். அதனை ஓர் ஆலயம் எழுப்பி பிரதிஷ்டை செயவும் முனைந்தார்கள்.

அந்தத் திருமேனிக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது.  உளி கொண்டு சிற்பி அதனைச் செதபோது, ஒரு சிறு துளி பட்டு கண்ணில் ரத்தம் வழிந்ததாம்! அந்த நேரம் சுவாமி ராமானுஜர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். திடீரென தியானத்தில் ஆழ்ந்தார் எம்பெருமானார். சீடர்கள் குழம்பித் தவித்தனர்.  அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்... ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.

பின்னர் அவர் ஸ்ரீபெரும்புதூருக்கு எழுந்தருளிய போது, சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புத் திருமேனியைச் செதுக்கினர்.  அந்தத் திருமேனியைத் தாமே உகந்து தழுவி, தம் சக்தியையெல்லாம் அத்திருமேனியில் செலுத்தினார். இதுவே  ‘தானுகந்த திருமேனி’ ஆனது.  ஸ்ரீபெரும்புதூர் ஆலயத்தில் தனி சந்நிதியில் வழிபாட்டில் உள்ளது.

தமருகந்த திருமேனி:

மைசூருக்கு அருகில் உள்ள மேல்கோட்டையில் சுவாமி ராமானுஜர், சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து கைங்கர்யங்கள் பல செய்துவந்தார்.  தாழ்த்தப்பட்ட மக்களென்று ஒதுக்கப்பட்டவர்களை, எம் பெருமானின் அடியார்களாகில், அவர்கள் திருக்குலத்தாரே என்று உயர்த்திப் பிடித்து, அவர்களைப் பெருமான் பக்கத்தில் அழைத்துச் சென்று, புரட்சி செய்ததும் இத்தத் திருத்தலத்தில்தான்.

வெகுநாட்கள் அங்கிருந்த ராமானுஜர், தம் 80ஆம் வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காகப் புறப்பட்டார்.  அப்போது, அங்கிருந்த சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே என தவித்துப் போனார்கள்.

சுவாமியுடனேயே தங்கியிருக்க எண்ணி அவர்கள் படும் துயர் கண்டு தேறுதல் அளிக்க, சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை  சிலையாக வடிக்கச் செய்தார் ராமானுஜர். சுவாமி கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்த அந்தத் திருமேனியில் தம் தெய்வீக சக்திகளைப் புகுத்தி சக்தியூட்டி, தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

அவர்களிடம் இருந்து  விடைபெற்ற போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணுங்கள். இந்தத் திருமேனியைக் கண்டு மன அமைதி பெறுங்கள்’ என்று அவர்களை சாந்தப்படுத்தினார்.

அடியார்கள் உகப்புக்காக, அவர்கள் உகந்து செய்தளித்த திருமேனி என்பதால், இது ‘தமர் (அடியார்) உகந்த திருமேனிஆயிற்று! இவரின் திருமேனியை நாம் இப்போதும் மேல்கோட்டையில் தரிசித்து மகிழ்கிறோம்.

தானான திருமேனி:

அது கி.பி. 1137-ஆம் ஆண்டு. நிறைவாழ்வு வாழ்ந்த மகான் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 -ஆம் வயதில்,   தாம் பிறந்த பிங்கள வருடம், மாசி மாத வளர்பிறை தசமியில், சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார். 

அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய  திருமேனியைக் கிடத்தினார்கள். அவரின் சீடர்களான  கந்தாடையாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோரும், சீடர் குழாமும் விழுந்து துடித்தது.

உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேத்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத சம்ஸ்காரத்துக்கு தயார்ப் படுத்தினார்.  அரங்கன் உடுத்திக் களைந்தளித்த பீதகவாடை, சூடிக்களைந்த துழா மாலை ஆகியன அவர் திருமேனியில் சாற்றப்பட்டன.

பிரபந்தப் பாசுரங்களாகிய தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் மறையை தரணியில் நிறுவிய எம்பெருமானாருக்கு அரையர்கள் மூலம் திருவாய்மொழி ஓதி மரியாதை செலுத்தப்பட்டதாம். வேத கோஷங்கள் முழங்க,  ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நான்கு உத்திர, சித்திரை வீதிகளிலும் அவரது திருமேனி எழுந்தருளச் செயப்பட்டு, அரங்கன் கோயில் வாயிலை தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி  ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்,  ‘இராமானுசன் என்தன் மாநிதி’ என்றும் ‘இராமனுசன் என்தன் சேமவைப்பு’ என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே  ஸ்ரீராமானுஜரின் திருமேனி என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோயில் வளாகத்திலேயே  (யதி  ஸம்ஸ்கார விதியின் படி) பள்ளிப்படுத்த அரங்கன் ஆணையிட்டான்.

இவ்வாறு,  ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் அவரது திருமேனி பள்ளிப்படுத்தப்பட்டது.  இன்றும் நாம் இவருடைய திருமேனியை கோயில் சந்நிதியில் தரிசிக்கலாம். தலைமுடி, கைநகம் போன்றவற்றைக் காண இயலும். இவ்வாறு, தாமே ஆன திருமேனி என்பதால், இந்தத் திருமேனிக்கு  ‘தானான திருமேனி’ என்று பெயரேற்பட்டது.


நன்றி:  விஜயபாரதம்- ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி சிறப்பிதழ்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக