வெள்ளி, 11 நவம்பர், 2016

வாழ்கின்ற வள்ளல் ராமானுஜர்-பத்மஜா


 ‘சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் ராமானுஜனென்னும் மாமுனியே

-என திருவரங்கத்தமுதனரால் ராமானுஜ நூற்றந்தாதியில் போற்றப்பட்ட வள்ளல் ஸ்ரீ ராமானுஜராவார்.  

கலி 4119 பிங்கள வருடம் சித்திரம் மாதம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், கர்க்கட லக்னத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும் காந்திமதி அம்மையாருக்கும் ஸ்தபுத்ரனாக அவதரித்தவர் ராமானுஜர்.  


கி.பி. 2017 சித்திரை ஆதிரை நன்னாளில் அவருக்கு ஆயிரம் ஆண்டு ஆவதைக் கொண்டாடுகிறோம். அப்படியென்றால் அவர் உண்மையில் ஒரு வள்ளலே எனக் கூறலாம். ஏனென்றால் அவர் வாரி வாரித் தந்த செல்வம் இன்றும் இலக்கியம், சமயம், கோயில் பணி நிர்வாகம், சமூகம், சமுதாயம் போன்ற பல்வேறு துறைகளில் பயன் தருகிறது. அவரை வாழ்ந்து காட்டிய வள்ளல் என்றால் அவரது பெருமை கடந்த காலத்துடன் நின்றுவிடும். ஆனால் அதனையும் கடந்து இன்றும் வாழ்கிறார் இன்னும் வாழ்வார் அந்த வள்ளல் என்பது உறுதி.

ராமானுஜர் தமது ஆன்மிகப் பணி, இலக்கியக் கொடை, சமூக சேவையினால் தம்மை வாழ்கின்ற வள்ளலாக நிரூபித்துக் காட்டியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜரைப்பெரும்புதூர் வள்ளல்எனப் போற்றுவதுண்டு

 இவர் பக்தியில் புதியதோர் உலகினையே படைத்தருளினார். இதன் பயனாகத் தோன்றிய ராமானுஜ தரிசனம் என்ற நெறியினை நம்பெருமாளே இதனைஎம்பெருமானார் தரிசனம்எனப் பெயரிட்டு நிலைநிறுத்தினார். இது புதுமைக்குப் புதுமையாய் பழமைக்குப் பழமையாக உள்ள நெறியாகும்.  
இந்தத் தொல்வழியான நல்வழியைத்தான் விசிஷ்டாத்வைதம் என்றனர். இதனையே ராமானுஜ தரிசனம் புதுமைவாய்ந்த நெறியாகவும் பொதுமை நெறியாகவும் காட்டுகிறது. விசிஷ்டாத்வைதம் விசிஷ்டஸ்ய அத்வைதம் என விரிகிறது. சித், அசித்து, ஈச்வரன் என்ற மூன்று பொருளின் கூட்டே உலகமாகும். பகவானை அடைய பக்தியையும் சரணாகதியையும் உயிர்நிலையாகக் கொண்ட கைங்கரியம் ஒன்றே வழியாகும்.  

தென்னிந்திய வரலாற்றில் ராமானுஜரின் ஞானப்பேரரசு சிறப்பான இடம் பெற்றதுடன் இன்றும் வளர்ந்து வருகிறது. இதனால் ராமானுஜரை வாழ்கின்ற வள்ளல் என்று வாயார வாழ்த்தி வந்தனர்.

சிறுவயது முதலே புத்திக்கொழுந்தாய் அறிவுக் கொழுந்தாய் விளங்கிய ராமானுஜரின் இலக்கியக்கொடை வைணவ உலகிற்கு அழியாப் பொக்கிஷமாகும். ராமானுஜர் அருளிய ஒன்பது க்ரந்தங்கள் அவரைச் சிறந்த வேதாந்தியாகவும் தெளிவான சிந்தனையாளராகவும் ஒப்பற்ற அறிஞராகவும் நல்ல எழுத்தாளராகவும் காட்டுகின்றன.  

இவரது இலக்கியப் படைப்புகளில் வேதாந்த ஸங்கரஹம், வேதாந்த தீபம் வேதாந்த ஸாரம், கீதாபாஷ்யம், ஸ்ரீபாஷ்யம் ஆகிய ஐந்தும் தத்வார்த்தங்களை விளக்கும் க்ரந்தங்களாகவும் மற்ற நான்கும் அனுஷ்டானக்ரந்தம் எனவும் பெரியோர் கூறுவர். நவநிதிகள் போலவும் நவரத்தினங்கள் போலவும் இந்த க்ரந்தங்கள் விளங்குகின்றன.  

திருக்கோயில் திருப்பணிகள், பூஜாக்ரமங்கள், திருவிழாக்கள், கோயில் நெறிமுறைகளைப் பற்றியெல்லாம் ராமானுஜர் தந்தருளியகோயிலொழுகுஇன்றும் நடைமுறையில் இருப்பது அவரை வாழ்கின்ற வள்ளலாகக் காட்டுகிறது

இவர் அனைத்து வேத வாக்கியங்களையும் கடாக்ஷித்து க்ரந்தநிர்மாணம் செய்திருப்பதாய் அமுதனாரும் இவரை சமயங்கள் படைப்பஎன்றார். இவர் பேத அபேத கடகஸ்ருதிகள் எல்லாவற்றையும் நேர்கண்டு அர்த்தநிர்ணயம் செய்தது,  எவ்வாறு ஸர்ப்பமானது முன்னும் பின்னும் பார்க்கும் இயல்புடையதோ அப்படியே அமைந்துள்ளது. ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரமல்லவா?

ராமானுஜரின் சமுதாயப் பணிகளைப் பட்டியலிட்டு காட்டுதல் அரிது. தீண்டாமை ஒழிப்பிற்கு அடிகோலிய ராமானுஜரின் சீடர்கள் சாதி சமய இன குல வயது வேறுபாடின்றி குருபக்தியும் மக்கள் சேவையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இவரது வாழ்க்கையின் நிகழ்வுகளே இவரை ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகக் காட்டுகிறது.  

திருமந்திர தானம், குரு யாதவப்பிரகாசரை மன்னித்து கோவிந்த ஜீயராக்கினார். மக்களிடையே அன்பாலும் கருணையாலும் அகப்புரட்சி விளைவித்தார். தமது உபதேசங்களை வாழ்ந்து காட்டிய வள்ளலாகத் திகழ்ந்து நல்லதோர் எடுத்துக்காட்டாய் இருந்தார்.   யக்ஞமூர்த்தி முதலான வாதியர்களைத் திருத்தி ஆட்கொண்டார். ராமானுஜரின் திக்விஜயம்  ‘தீதில் நன்னெறி’ என்ற ஸ்ரீ வைஷ்ணவ நல்முறைப் போர்களால் உருவாகி நிலைத்த நற்பயன் தந்தது.

ராமானுஜர் திருமலையப்பனின் ஆசாரியராய் விளங்கினார். தேவப் பெருமாளின் மகனாய் பாடம் கேட்டார். உபய வேதாந்தங்களைக் காத்தருள யதிராஜராக மாறினார். பின்னர் மாமுனிகளாய் அவதரித்தார். ராமானுஜரின் சீடர் குழாம் பெருகிப் பெருகி பெரு வெள்ளமாயிற்று. இன்றும் நம்மாழ்வாரை வைஷ்ணவ சித்தாந்தத்தின் முதல் தாய் எனவும் ராமானுஜரை  வளர்ப்புத்தாய் எனவும் போற்றுகிறோம்.  

இந்த வாழ்கின்ற வள்ளல் ஆசாரிய மணிமாலையின் நடுநாயகமாயிருக்கிறார். இன்றும் ராமானுஜ முனி மூலம் இந்த குருபரம்பரை ஓரானவழியாய்த் தொடர்கிறது.  

ஆயிரமாண்டுகளாய் ஒளிவீசும் இந்த கலங்கரை விளக்கை, கற்பகக் கனியை, வாடாமலரை வாழ்கின்ற வள்ளலாய் மனதார போற்றி சொல்லாலும் செயலாலும் வாழ்த்தி வணங்கி வழிபடுவோமாக!

ராமானுஜர் திருவடிகளே சரணம். 


நன்றி: விஜயபாரதம்- ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி சிரப்பிதழ்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக