சனி, 5 நவம்பர், 2016

ஆர்.எஸ்.எஸ். கொண்டாடும் ராமானுஜர் யார்?

-திருநின்றவூர் ரவிக்குமார்ராமானுஜருக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. அதில் ஒன்று யதிராஜர் (எத்திராஜ் ). யதி என்றால் துறவி. துறவிகளில் உயர்ந்தவர் யதிராஜர்.

ராமானுஜரின் 1000-மாவது ஜெய்ந்தியை ஆர்.எஸ்.எஸ். நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு சமுக, பண்பாட்டு இயக்கம். அது ஏன் துறவிகளில் அரசனான ராமானுஜரைக் கொண்டாடுகிறது?
ஆர்.எஸ்.எஸ்.ஸின் முதுகெலும்பாக உள்ள முழநேர ஊழியர்களான பிரசாரகர்கள் தேச நலனுக்காக குடும்ப வாழ்வைத் தவிர்த்து விட்டு வெள்ளாடைத் துறவிகளாகத் தொண்டு புரிந்து வாழ்கின்றனர். எனவே இல்லற வாழ்வை தவிர்த்து விட்டு துறவற்த்தை மேற்கொண்ட ராமானுஜருடன் தன்னை நெருக்கமாக அடையாளம் கண்டு, கொண்டாடுகிறதா ஆர்.எஸ்.எஸ்?

ராமானுஜர் துறவறம் மேற்கொண்டதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள்.

முதலாவதாக, பெரிய நம்பிகள் என்ற தன்னுடைய குருவை தன் வீட்டிலேயே குடும்பத்துடன் தங்க வைத்திருந்து பாடம் கேட்டு வந்தார். ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாள் பெரிய நம்பிகளின் மனைவியிடம் கிணற்றங்கரையில் நீர் தளும்பித் தெறித்தற்காக அவமரியாதை செய்தாள். அதனால் பெரிய நம்பிகள் குடும்பத்துடன் திருவரங்கம் சென்று சென்று விட்டார். அப்போது ராமானுஜர் வீட்டில் இல்லை. விஷயத்தை பிறகு கேள்விப்பட்டு மனம் வருந்தினார்.

பெரிய நம்பிகள் பிராமணராக இருந்தும் மாற்னேர் நம்பி என்ற தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த தன் குருபாயீக்கு (இருவரும் ஒரே குருவின் மாணவர்கள்) வைணவ முறைப்படி சவச்சடங்குகளை நடத்தி வைத்த உத்தமர்.

இந்த இடத்தில், நீர் நிலைகளும் மயானமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீர்மானம் நினைவு கூரத் தக்கது.

இரண்டாவதாக, தனக்கு எண்ணெய் தேய்த்துவிட வந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவருக்கு பழைய சோறாவது போடும்படி கேட்க, தஞ்சம்மாள் வீட்டில் சோறே இல்லை என்றாள். உள்ளே சென்று பார்த்த ராமானுஜர்  உணவு நிறைய இருப்பதைக் கண்டார்;  அவனுக்கு உணவிட்டார்.

தாழ்ந்த சாதிக்காரன் என்பதாலேயே உணவிட மறுத்த தஞ்சம்மாள் மீது ராமானுஜர் கோபம் கொண்டார். எந்தச் சாதியில் பிறந்தாலும் பக்தர்கள் அனைவரும் ஒரே குலம் என்றே ராமானுஜர் கருதினார். வைதீக ஆச்சாரங்களில் ஊறியிருந்த தன் மனைவி மீது மாறுபாடு கொண்டார்.

மூன்றாவதாக, திருக்கச்சி நம்பிகள் என்ற உத்தமரை தன் வீட்டில் விருந்திட்டு உபசரிக்க நினைத்தார். திருகச்சி நம்பிகள் காஞ்சி தேவராஜப் பெருமாளுடன் வார்த்தையாடக் கூடியவர் என்பது மட்டுமல்ல, ராமானுஜருக்கு வைணவநெறியைப் பற்றிய அடிப்படை தத்துவ அறிவை கொடுத்த முதல் குரு அவர்.

விருந்துக்கு நேரமானாதால் திருகச்சி நம்பிகளைத் தேடி ராமானுஜர் போக, வேறு வழியாக வீட்டிற்கு வந்த நம்பிகளை தஞ்சம்மாள் திண்ணையிலேயே உணவிட்டு அனுப்பி, சாப்பிட்ட இடத்தையும் தீட்டு போக பசும்சாணமிட்டு மெழுகினாள். காரணம் திருக்கச்சி நம்பிகள் உத்தமராகவும் உயர்ந்தவராகவும் இருந்த போதிலும் அவளுக்குத் தெரிந்தது அவரது பிற்பட்ட ஜாதி மட்டுமே. எனவே அவளது வைதீக சமய பழக்கப்படி அவரை நடத்தினாள்.

ராமானுஜர் ஜாதி வேறுபாடுகளை பெரிதாகக் கருதக் கூடாது என்ற பரந்த மனப்பான்மை கொண்டவர். அனைவரையும் விஷ்ணுவின் பக்தர்களாக, சமய ரீதியாக அனைவரும் ஒன்றாக கருதி ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருதினார்; செயல்பட்டார். இதற்கு மேலும் பல எடுத்துக் காட்டுகளை கூறமுடியும்.

ஆனால், இல்லறம் துறந்து துறவறம் மேற்கொள்ள கூறப்பட்ட இந்த மூன்று காரணங்களிலும் வைதீக சிந்தனைகளை மீறி சமூக- சமரசச் சிந்தனை அவரிடம் மேலோங்கி இருந்தது. அக்காலத்தில் நடைமுறையில்  இருந்ததற்கு மாறாகச் செயல்படவே அவரை உந்தியது.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஜாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்துக்கள் அனைவரையும் ஒன்று படுத்தி, பாரதத்தை உயர்த்த, உலகநாடுகளின் தலைமைப் பீடத்தில் அமர்த்த, பணியாற்றி வருகிறது.

இன்றும் பலர், திருகோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்ற ராமானுஜர் அனைவருக்கும் அல்ல, அங்கிருந்த தேர்ந்த வைணவர்களுக்கு மட்டுமே தான் கற்றதன் சாரத்தை எடுத்துரைத்தார் என்கிறனர். அவர்கள் கொண்டாடுவது ஆச்சாரியர் ராமானுஜரை- ராமானுஜர் என்ற வைதீக சமய குருவை.

அனைவருக்கும் உபதேசித்து எல்லோரையும் ஜாதி வேறுபாடுகளை மீறி பாகவத குலத்தில் சேர்த்த கருணை மேகமான ராமானுஜர் என்ற சமுக சிந்தனையாளரை, சீர்திருத்த வாதியை, புரட்சியாளரையே கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். - வைதீக சமய குருவை அல்ல..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக