சனி, 19 நவம்பர், 2016

வைணவத்தின் தாக்கம்


-ஜி.ஆளவந்தார்
 ஹர்மந்திர் சாஹிப்


இராமானுஜர் காலத்திற்குப் பின்னர், வேதாந்த தேசிகர் வடமொழியில் வெளியிட்ட திருவாய்மொழியின் சாரமும், பிள்ளை லோகாசாரியர் வடமொழியில் இயற்றிய ‘அர்த்த பஞ்சகமும்’ விசிஷ்டாத்துவைதக் கொள்கைகளை மேலும் பரப்ப உதவின.

கங்கை நதிப் பிரதேசத்தில் இராமானந்தர், கபீர், ரவிதாசர், பக்தை மீரா, துளசிதாசர் போன்றோர் வைணவ சித்தாந்தத்தை வளர்க்கப் பாடுபட்டார்கள். 

இவர்களில் இராமானந்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரும் தோல் பதனிடும் மரபைச் சேர்ந்தவருமான ரவிதாசர் இயற்றிய முப்பதுக்கும் அதிகமான பாடல்கள் சீக்கியர்களின் புனிதநூலான ‘கிரந்த சாகிப்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் ‘ஹரி மந்திர்’ என்று  (ஹர்மந்திர் சாஹிப்) அழைக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. வைணவ நெறியின் பிரசார வீச்சை இது குறிக்கிறது என்றால் மிகையாகாது.

குறிப்பு:

ஜி.ஆளவந்தார் எழுதிய  ‘புரட்சித் துறவி இராமானுஜர்’ புத்தகத்திலிருந்து...

ஞாயிறு, 13 நவம்பர், 2016

ராமானுஜரின் மனிதநேயக் கொள்கைகள்-ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ .வே.. கிருஷ்ணமாச்சாரியார்


உலக ஆன்மிக சிந்தனையாளர்களின் இடையில் ராமானுஜருக்குச் சிறப்பானதொரு  இடமுண்டு.  அவரது ஆன்மிக அணுகுமுறை மற்றையோரிடமிருந்து வேறுபட்டதாகும். அவரது ஆன்மிகச் சிந்தனை அன்றாட வாழ்வியலோடும் சமுதாயச் சூழலோடும் பின்னிப் பிணைந்தது.  

ஆன்மிகத்தில் அவரது தொலைநோக்குப் பார்வை, முற்போக்கான சிந்தனை இவையெல்லாம் அவரை ஒரு ஆன்மிகவாதி என்பதைவிட மனித சமுதாயம் முழுவதுமே ஏற்றம் பெற உழைத்த ஒரு தன்னலமற்ற சமூகச் சிந்தனையாளராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன

சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மனிதனும் ஆன்மிக ஏற்றம் பெற்றுய்ய வழிகாட்டியவர் அந்த மாமனிதர். மற்ற எந்த ஆன்மிகவாதிக்கும் இல்லாத இந்தப் பெருமையும் புகழும் ராமானுஜருக்கு மட்டுமே அமைந்துள்ளது.

சனி, 12 நவம்பர், 2016

தாய்மதம் திருப்பிய தன்னிகரற்ற தலைவர்-ஒப்பிலியப்பன்


சில மாதங்களுக்கு முன்புதாய்மதம் திருப்புதல்’ (கர்வாபஸி) என்ற செய்தி டி.வி.யிலும் செய்தி ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். வன்முறையாலும், பணத்தாலும் கோடிக் கணக்கான ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டதும், இன்றும் செய்து கொண்டிருப்பதும் உண்மைதானே!  

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வழிதவறி மதம் மாறியவர்களை, தாய்மதத்திற்கு தனது அன்பு வழியால் மாற்றிய தீரர்தான் மகான் ராமானுஜர்!

ஓர் உதாரணம்: விட்டலதேவன். ராமானுஜரால்விஷ்ணுவர்தனன்ஆகி, திருநாராயணபுரத்தில்யாதவாத்ரிபதிஎன்ற மூர்த்திக்கு ஆலயம் எழுப்பினார்!

 சினமும் சீறும் தன்மையும் ஆதிசேஷனின் குணங்கள். இந்த ஆதிசேஷனின் அம்சமான பகவத் ஸ்ரீராமானுஜரோ, சாந்தமும் பொறுமையும் தாயையும் கொண்ட கருணாமூர்த்தி! எத்தனை முரண்பாடு!  
 இதனால்தானோ என்னவோ, இவரின் ஆன்மிகக் கருத்துக்களில் முரண்படுபவர்கள் கூட இம்முக்கோல் முனிவரின் திருநாமத்தைச் சொன்னால் முரண்படாமல் போற்றிப் புகழ்ந்திருக்கின்றனர்! இவர் காலத்தை வென்ற காஷாயத் துறவி!       


வெள்ளி, 11 நவம்பர், 2016

வாழ்கின்ற வள்ளல் ராமானுஜர்-பத்மஜா


 ‘சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் ராமானுஜனென்னும் மாமுனியே

-என திருவரங்கத்தமுதனரால் ராமானுஜ நூற்றந்தாதியில் போற்றப்பட்ட வள்ளல் ஸ்ரீ ராமானுஜராவார்.  

கலி 4119 பிங்கள வருடம் சித்திரம் மாதம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், கர்க்கட லக்னத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் கேசவ ஸோமயாஜிக்கும் காந்திமதி அம்மையாருக்கும் ஸ்தபுத்ரனாக அவதரித்தவர் ராமானுஜர்.