வியாழன், 6 அக்டோபர், 2016

குருவை மிஞ்சிய சீடர்

-முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
ஸ்ரீ ராமானுஜர் திருஅவதாரம் செய்து வளர்ந்துவருகையில் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் உடன் பயிலச் சென்றார்.

அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை; மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில் பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப் பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்வைத மரபு.

இவ்வாறு யாதவப் பிரகாசர் அத்வைதக் கண்ணோட்டத்தில் வேதவாக்கியங்களுக்குப் பொருள் கூறும்போதெல்லாம், இளையாழ்வார் மறுத்துவந்தார்.

‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ ’ என்ற வேதத்துக்குப் பொருள் கூறினார் ஆசிரியர். இந்தச் சுருதிக்கு, ‘அந்தப் பிரம்மத்துக்குச் சூரியனால் அலர்த்தப்படுகிற தாமரை போன்ற கண்கள்’ என்பது பொருள். இவ்வாறு கூறினால் அப்பிரம்மத்துக்கு உருவம் உண்டென்றும், குணங்கள் உண்டென்றும் பொருள்படும். ஆனால் அத்வைதக் கொள்கையில் உருவமும் குணமும் இல்லை ஆகையால் பொருளை மாற்றிக் கூற வேண்டியிருந்தது. எனவே ‘பிரம்மத்துக்குக் கண்கள் கப்யாஸம் குரங்கின் பின்புறம் போல் இருக்கிறது என்று வேதம் பரிகாசம் செய்கிறது’ என்று பொருள் கூறினார். இதைக் கேட்ட உடையவர் வேதனை அடைந்து கண்ணீர் விட்டார். அது கண்ட யாதவப் பிரகாசர், ‘ஏன் அழுகிறாய்?’ என்றார். அதற்கு ராமானுஜர், கம் + பிபதி = கபி: கம் நீர்; பிபதி அதைப் பானம் செய்பவன் சூரியன். அச்சூரியனால் அலர்த்தப்படும் தாமரை போன்ற கண்கள் என்று உண்மைப் பொருள் இருக்கப் பிரம்மத்தை இப்படி இழிவுபடுத்தலாமா என வினவினார்.

ராமானுஜரின் அறிவு மேம்பாட்டை உணர்ந்த ஆசிரியர், அவரைக் கொன்றுவிட எண்ணிக் காசி யாத்திரை அழைத்துச் சென்றார். வழியில் கோவிந்தன், தமையனாருக்கு இதைக் குறிப்பாக உணர்த்த உடனே ராமானுஜர் காஞ்சிக்குத் திரும்பி நடக்கலானார். பல மாதம் நடந்த வழி, விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது, காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து, மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொணர்ந்து சேர்த்தனர். தாயார் ‘நீர் வேண்டும்’ என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொணர்ந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர். உடையவர் தம்மைக் காத்தவர் யார்? என்ற உண்மை உணர்ந்து, நாளும் அக்கிணற்றிலிருந்து நீர் கொணர்ந்து திருமஞ்சனம் செய்துவந்தார்.

காசி யாத்திரையின்போது கோவிந்தருக்கு நீரில் ஒரு லிங்கம் கிடைக்க, அவர் அத்வைதியாகிக் காளஹஸ்தி சென்று ஆலயப் பூசைகளைச் செய்துவந்தார். பின்னர் யாதவப் பிரகாசர் காஞ்சி திரும்பி உடையவரைக் கண்டு திடுக்கிட்டு, விவரமறிந்து அவரிடம் மதிப்புடையவராகி, மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பாடம் நடத்திவந்தார்.

திருவரங்கத்தில் ஆச்சாரியராக இருந்த ஆளவந்தார் என்பவர் விவரம் அறிந்து, காஞ்சி வந்து, கோஷ்டியிலிருந்த இளையாழ்வாரைக் கண்டு, ‘ஆம் முதல்வன் இவன்’ என்று கடாட்சித்தார். பின் பெருமாளிடம் இவரை நம் சமயத்தை வளர்ப்பவராக ஆக்கியருள வேண்டித் திருவரங்கம் சென்றார். அக்காலம் காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளைப் பிரம்ம ராட்சசம் பீடித்திருந்தது. யாதவர் வந்து ஓட்ட, அது அகலவில்லை, பின் இளையாழ்வார் வந்து ஓட்ட, அது அகன்றது.

யாதவப் பிரகாசர் மறுபடியும் ‘ஸர்வம் கல்விதம் ப்ரம்ம’ என்பன போன்ற சுருதிகளுக்கு அத்வைதக் கருத்துப்படிப் பொருள் கூறினார். இளையாழ்வார் அதை ஏற்காமல், பிரம்மம் வேறு, சித்து அறிவுடைய பொருள்; அசித்து அறிவற்ற பொருள், இவற்றை அது சரீரமாகக் கொண்டுள்ளது. (இது சரீர அசரீர பாவனை எனப்படும்) என விசிஷ்டாத்வைதக் கருத்துப்படி பொருள் கூறினார். அது கேட்ட யாதவப் பிரகாசர், ‘நீர் இனி இங்கு வரவேண்டாம், உம் அறிவுக்குத் தக்கவரிடம் போம்’ என்று கூறிவிட்டார். இளையாழ்வாரும் விலகி திருக்கச்சி நம்பிகளை அடைந்து, முன்புபோலத் தீர்த்தக் கைங்கர்யம் செய்துவந்தார்.

ராமானுஜர் தம் மனைவியிடம் கண்ட மூன்று குற்றங்களால் அவரை விலக்கித் துறவியானார். கூரத்தாழ்வார், முதலியாண்டான் முதலிய பலரும் சீடராயினர். பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகளின்படி பெரிய நம்பிகளிடம் (மதுராந்தகத்தில்) பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்றார். தம் அம்மான் பெரிய திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தனைத் திருத்திப் பழையபடியே வைணவராக்கினார்.இந்நிலையில் யாதவப் பிரகாசர் தம் தாயாரின் அறிவுரையை ஏற்று, ராமானுஜ முனியை அடைந்து, அவரை வலம் வந்து வணங்கிப் பிராயச்சித்தம் செய்து கொண்டு, சீடரானார். உடையவரும் அவரை ஏற்று உரிய சடங்குகளைச் செய்து, முக்கோல், துவராடைகளைத் தந்து உபதேசித்து, கோவிந்த ஜீயர் எனத் திருப்பெயரும் அருளினார். அவரை யதிதர்ம சமுச்சயம் என்னும் நூலை சாஸ்திர விரோதமின்றிச் செய்யும்படி நியமிக்க, அவரும் அவ்வாறே செய்து அளித்தார். பின் குறுகிய கால அளவிலேயே யாதவப் பிரகாசர் பரமபதம் அடைந்தார். இவ்வாறு தம்மைக் கொல்லத் துணிந்தவருக்கும் நன்மை செய்தவர் ராமானுஜராவார்.

 நன்றி: தி இந்து ஆனந்தஜோதி (29.09.2016).
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக