புதன், 5 அக்டோபர், 2016

ராமானுஜனுக்கு தாயின் தாலாட்டு

-கவிஞர் வாலி


எண் - 7
ராமானுஜனா? ராஜகுமாரனா? 

‘மலடு’ எனும்
மூன்றெழுத்துச் சொல்லையே –

உள்ளீடற்ற
ஒரு –
மலட்டுச் சொல்லாக
மாற்றியவன்;

தன்னை
தாயார் ஸ்தானத்திற்கு – ஓர்
ஏணிபோல வந்து
ஏற்றியவன்!

இதற்கு மேலும் –
இராமானுஜன் மேல்…

பித்தேறிக் கிடக்கப்
பெற்றவளுக் கென்ன வேண்டும்?

தன்னிலிருந்து
தவமிருந்து
தானே பிரித்தெடுத்த தன்னை;

தங்க வயல்
தோண்டி எடுக்காது –
அங்க வயல்
அகழ்ந்து எடுத்த பொன்னை;

தரையில் விடுவாளா?
தலைமேல் தாங்கினாள் யாண்டும்!

தூளியில் விட்டது கொஞ்சம்;
தொட்டிலில் விட்டது கொஞ்சம்;
அந்தக் கொஞ்சத்திற்கே – அவளை
அனலில் விட்டது நெஞ்சம்!


கோழி –
கூவியது முதல்; சுவர்க்
கோழி –
கூவுவது வரை…

இராமானுஜனை
இடுப்போடு –
அவள்
வைத்திருப்பவள் அல்ல;
தைத்திருப்பவள்!

ராமானுஜனா?
ராஜகுமாரனா?

என
எவரும் –
வினவ;
வியக்க;

காந்திமதி – தன்
கைப்பெட்டிக்குள்…

பொத்திப் பொத்தி வளர்த்தாள்
பொக்கிஷத்தை; நாளை
பௌவம் போல் பொங்க இருக்கும்
பௌருஷத்தை!

எதிர்காலத்தில்
எதிகளின் ராஜன் எதிராஜன் –
என்றாகப் போகிறான்
என்பதாலோ என்னவோ…

அய்யங்கார் குமாரனை
அரசகுமார னாட்டம் – ஓர்
ஆளுமை துலங்க
ஆளாக்கினாள்…

காந்திமதி – எனும்
காந்தாத மதி!

பூவாய்ச் சிரிக்கும்
புத்திர ரத்தினம் –
ராவாய்ப் பகலாய்
ராஜாங்கம் நடத்த…

அப்பா வீடே
அரண்மனை யாச்சு;

அம்மா இடுப்பே
அரியணை யாச்சு;

சீலைத் தலைப்பே
சிறுகுடை யாச்சு;

சூப்பும் விரலே
செங்கோ லாச்சு;

குதலை மொழியே
கட்டளை யாச்சு;
கண்ணீர்த் துளியே
கைவா ளாச்சு;

பசும்பொன் தொட்டில்
பல்லாக் காச்சு;
ஆராட் டொன்றே
பாராட் டாச்சு!

கேசவ சோமயாஜிகூட
கேலிசெய்தார் –
பொண்டாட்டியை; குடும்பத்தின்
பெருமாட்டியை!

‘பிள்ளையாண்டான்
பிறந்ததிலிருந்து…

என்னைப் பற்றிய
எண்ணமும் இல்லை; உனக்கு –
உன்னைப் பற்றிய
உணர்வும் இல்லை!
குழந்தையே குழந்தையே என்று –
குழந்தை நினைப்பிலேயே – உன்னை
இழந்தையே இழந்தையே இன்று!

அதுதானோ உனக்கு –
ஆகாசம்; அவனி?

ஆகட்டும் –
அப்படியே;
ஆயினும் – கொஞ்சம்
அகத்துக்காரரையும் கவனி!’

நாயகன் இங்ஙனம்
நையாண்டி செய்தது…

காந்திமதிக்குக்
கூச்சத்தை உண்டாக்க –

அவளது
அழகிய –
நயன மேகம்
நாணமழை பெய்தது!

பொந்தோ சந்தோ –
போகுமிடமெல்லாம்…

குட்டியைக்
கவ்விக்கொண்டே போகும் –
மார்ச்சாலம்
மாதிரி…

அடுப்பங்கரையோ
ஆற்றங்கரையோ
இடுப்புக் குழந்தையை
இறக்கி விடாது –

காரிய மாற்றுவது
காந்திமதிக்கு
விடமுடியாத
வழக்கமாகி விட்டது;

அம்மா பிள்ளை
அன்னியோன்னியம் –
ஆர் பரிகசிப்புக்கும்
அப்பாற் பட்டது!

அதற்குக் காரணம்
அருமந்த புதல்வனை…

வாராது வந்த
மாமணியாய் எண்ணினாள்;
ஒரு நாளைக்கு
ஒன்பான் தினுசாக –

ஆசைப்பட்ட படியெல்லாம்
அலங்காரம் பண்ணினாள்!

வளரும் பிள்ளை –
வருங் காலத்தில்…

விறகா?
வீணையா?

வேயா?
வேணுவா?

காஞ்சிரமா?
கண்டா?

கரம்பா?
கழனியா?

என்பதெல்லாம்
எப்பொழுதும் –
ஒரு தாய்க்கு
வெள்ளிடை;

‘விளையும் பயிர் –
முளையிலே!’ என்பது
சிரஞ்சீவியான
சொலவடை!

உலக வழக்கில் –
ஒரு தாய்…

தனது தோள் தழுவிய –


துகிலெடுத்து;
துகிலில் மறைந்துள – இரு
நகிலெடுத்து;

உற்ற பிள்ளைக்கு
ஊட்டுவாள் பால்!

கற்ற பிள்ளையாய்;
கல்விச் செல்வமெல்லாம்
பெற்ற பிள்ளையாய்;
பேதைமையும் பேதுறவும்
அற்ற பிள்ளையாய்;
அற்ப பயங்களைச்
செற்ற பிள்ளையாய்;
செகத்திடை பிறங்க வைக்கும்…

அன்னை ஊட்டிடும்
அப் பால்; உயிர்க்கு
ஆக்கம் தருவதில்
அம்புவியில் வேறுண்டோ –

அப் பாலுக்கு
அப்பால்?

காந்திமதி – தானொரு
குழந்தைக்குத் தாயாகு முன்பே…

பெரிய சுமங்கலிகள்
பேசக் கேட்டிருக்கிறாள்

தாய்ப்பால்
தாராளமாகப் பருகக் கிடைத்த –
வாய்ப்பால்…

பிள்ளைகள்
பெறும் –
அறிவை; அதன் –
செறிவை!

எனவேதான் –
இராமானுஜனுக்கு –
மூன்று வயது
முடிந்த பின்பும்…

அர்த்த ராத்திரியில்
அவன் அழுதால்…

காந்திமதி உடனே – தன்
கச்சை அவிழ்ப்பாள்;

மகனுக்கு
மார் கொடுத்து – அவன்
மண்டை மேல்
முந்தானையைக் கவிழ்ப்பாள்!

பிள்ளை – தன்
பால்பல்லால் வலிக்க…

அங்ஙனம்
அது வலிக்கும்போது – அது
வலித்த இடம் வலிக்க…

விட்டு விட்டு
விட்டு விட்டு
ஊட்டுவாள் பால்; ஏணையில் –

இட்டு இட்டு
இட்டு இட்டு
ஆட்டுவாள் தால்!

‘தாலோ! தாலேலோ!
தாலோ! தாலேலோ!

வாசவனார் முதலான
வானவரும் வந்தேத்தக்
கேசவனார் குலத்துதித்த
கேசரியே! தாலேலோ!

ஆசூரி வமிசத்தை
அந்தகாரம் விழுங்காமல்
தேசூறி நிற்கின்ற
திருவிளக்கே! தேலேலோ!

விந்து விழுந்தாலும்
விளையாத களர்நிலமாய்
நொந்து விழுந்தாளின்
நோய் தீர்த்தாய்! தாலேலோ!

உகப்பன் என் புருஷன்
உன்னாலே எஞ்ஞான்றும்;
தகப்பன் என்னுமொரு
தகவளித்தாய்! தாலேலோ!

மைகுந்தும் பழனங்கள்
மலிந்துள்ள பூதூர்க்கு
வைகுந்தம் விட்டு வந்த
வாசுதேவா! தாலேலோ!

வினைவந்து சேராமல்
வையத்தார் உய்வதற்கென்
மனைவந்து சேர்ந்தவனே!
மாதவனே! தாலேலோ!

இராவணனே இவ்வுலகில்
இராவணம் இறுதி செய்த
இராவணனே! இரவிகுலத்து
இராகவனே! தாலேலோ!

உடுக்கை இடையுடையாள்
உடுக்கையை இழுக்கையிலே
உடுக்கை அடுக்கடுக்காய்
உதவியவா! தாலேலோ!

அகம்கொண்டு ‘ஆரடா அவ்
அரி?’யென்று ஆர்த்தவனை
நகம்கொண்டு விகிந்தவனே!
நரசிங்கா! தாலேலோ!

படியளந்த விண்ணளந்த
பூவடியால் மாவலியின்
முடியளந்த முழுமுதல்வா!
மணிக்குறளா! தாலேலோ!

மண்ணயர விண்ணயர
மாமகனே! நீ மட்டும்
கண்ணயர மாட்டாது
கரைவது ஏன்? கூறய்யா!

அப்பும் கூர்மையிலே
அடிபணியும் கண்விழியில்
அப்பும் கசிந்து வர
ஆரடித்தார்? கூறய்யா!

துப்பும் செக்கரிலே
தோற்றோடும் செவ்வாய்தான்
துப்பும் சிறுநகையைத்
திருடியதார்? கூறய்யா!

பண்ணையென இருந்தாலும்
போயவரைப் பிடித்துவந்து
வெண்ணெயிலே விலங்கிட்டு
வெய்யிலிலே நிற்கவைப்போம்!

ராஜாவா யானாலும்
ரதமேறிப் பிடித்து வந்து
ரோஜாவில் விலங்கிட்டு
ராப்புயலில் நிற்கவைப்போம்!

கனவானா யிருந்தாலும்
கையோடு பிடித்து வந்து
அனலாலே விலங்கிட்டு
அடைமழையில் நிற்கவைப்போம்!

தனவானா யிருந்தாலும்
தட்சணமே பிடித்து வந்து
மணலாலே விலங்கிட்டு
மடுவினிலே நிற்க வைப்போம்!

இறைச்சல் போட்டழுதால்
இளவரசனின் போஷாக்கில்
குறைச்சல் என்றென்னைக்
குறை கூறும் ஊரெல்லாம்;

உன்னை நான் அழவைத்த
ஒருகுற்றம் காரணமாய்
என்னைத்தான் தண்டிக்க
எழுந்துவரும் பாரெல்லாம்!

எவ்வுயிரும் தன்னுடைய
இன்னுயிராய் எண்ணுகின்ற
செவ்வுயிரே! நான் பெற்ற
சீதனமே! தாலேலோ!

இலக்குவன் போலிருந்து
இந்திர சித்துக்களைக்
கலக்குவன் என்றெழுந்த
கருமணியே! தாலேலோ!

விழுதுவிட் டிருக்கின்ற
வைணவம் ஒருநாளும்
பழுதுபட் டிருக்காமல்
பார்ப்பவனே! தாலேலோ!’

இன்னணம்
இரவு தோறும்…

பாடுகளைப்
பட்டவள் – பிள்ளையின்
பீடுகளைப்
பாடுவதை…

கேசவர் –
காதால் பருகுவார்;

பருகிப் பருகிப்
பகல் நேரத்துப்
பனித் துளியாய் உருகுவார்!

நகர்வதே –
நாலு பேர்க்குத் தெரியாமல்…

நகர்ந்தன
நேரத்தின்
நாள்கள் – என்னும்
தாள்கள்!

கத்தரி;
காற்று;
கார்;
கூதிர்;

இவை போல்
இன்ன பிற…

வந்து வந்து போயின; ஓரிரு –
வருடங்கள் ஆயின!

ஒரு விஜயதசமியில்
வித்தியாரம்ப நாளில்…

அட்சராப்பியாச வைபவம்
அமோகமாக நடந்தது –
ஆசூரி கேசவ சோமயாஜியின்
அரண்மனை அனைய இல்லில்;

அஞ்சு வயது ராமானுஜனின்
பிஞ்சு விரல்கள் –

எட்டெழுத்தை
எழுதின – ஒரு
வட்டிலில் நிறைய
விரவியிருந்த நெல்லில்;

அந்த –
அட்டாட்சரம் தானே
அறிவு வெளிச்சம் கொளுத்தி
ஆன்மாவிற்கு வழிகாட்டும்…
அல்லல் மிகுந்த –
அறியாமை என்னும் அல்லில்!.

குறிப்பு:
.கவிஞர் வாலி  எழுதிய  ‘ராமானுஜ காவியம்’ நூலின் ஒரு பகுதி இது. 
பக்கங்கள்: 394, விலை: ரூ. விலை: 150.00   
கிடைக்கும் இடம்: 
    வானதி பதிப்பகம்,  
    23, தீனதயாளு தெரு,  
    தியாகராய  நகர்,   
    சென்னை- 600 017,  
    போன்: 044- 24342810கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக