சனி, 29 அக்டோபர், 2016

ராமானுஜரின் ஞானபுத்திரன்

-எம்.என்.ஸ்ரீநிவாசன் ‘திருக்குறுகைப்பிரான் பிள்ளான்’ என்பார் ராமனுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பியின் குமாரர் ஆவார். ராமானுஜருடைய ஞானபுத்திரனாக அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

ராமானுஜருக்கு நம்மாழ்வார் மீதான பிரதிபக்தியையும் ஆளவந்தாரின் திருவுள்ளப்படியும், குறுகைப்பிரான் பிள்ளானின் நம்மாழ்வார் மீதான மிகுந்த ஈடுபாட்டையும் குறித்தே பிள்ளான் என்ற பெயருடன் திருக்குறுகை என்ற நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தின் பெயரையும் சேர்த்து திருக்குறுகைப்பிரான் பிள்ளான் என்றே பெயரிட்டு அழைத்து வந்தார். இதற்குக் காரணமாக ஓர் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

ஒரு சமயம் ராமானுஜர் தமது மடத்தில் ஏகாந்தமாக ஓர் அறையில் தாளிட்டுக்கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைத் தம் மனதிலேயே நினைத்துக்கொண்டு அதற்கேற்ப அரையர் போல் அபிநயம் செய்து கொண்டிருந்ததைக் கதவின் சாவித்துவாரம் மூலம் கண்ட பிள்ளான், அந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை உரக்க கூறி, ராமானுஜரின் திருவுளம் பற்றி அறிய விரும்பினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் ராமானுஜர் உடனடியாக வெளியே வந்து பிள்ளானை மிகவும் பாராட்டி அவருக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீதான பற்றுதலையறிந்து அவரையே திருவாய் மொழிக்கு வியாக்கியானம் (விளக்கவுரை) அருளப் பொருத்தமானவர் என்று கருதி பிள்ளானுக்குக் கட்டளையிட்டார்.

மணிப்பிரவாள நடையில் அமைந்த கிரந்தம்

அவரும் அதன்படியே ‘ஆராயிரப்படி’ என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார். இதுவே முதன்முதலில் கிரந்த ரூபமாக அவதரித்த ஸ்ரீ கோசம் (நூல்) இதில் நாதமுனிகள், அளவந்தார், திருமலையாண்டான், திருவரங்கப் பெருமாள் அறையர், ராமானுஜர் ஆகியோருடைய கருத்துகளைக் கொண்டதும் முதன் முதலாக வைணவ சம்பிரதாய மொழியான மணிப்பிரவாள நடையில் அமைந்ததுமான கிரந்தமாகும்.

ஜைன மதத்தின் ஏகபோகமாக இருந்த மணிப்பிரவாள எழுத்தினை வைணவத்தில் புகுத்திய பெருமை திருக்குறுகைப் பிரான் பிள்ளானையே சாரும்.

இவர் நம்பெருமாள் சன்னிதியில் விசேஷ கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் உபய வேதாந்தியாக விளங்கியவர். ராமானுஜர் திருநாடலங்கரித்த போது அவருக்கு இறுதிக் கடன்களை செய்யும்படியான பாக்கியம் இவருக்குக் கிட்டியது.

திருவஹிந்திரபுரத்தில் அமைந்துள்ள னிவாசர் திருக்கோயிலில் திருக்குறுகைப்பிரான் பிள்ளான், ராமானுஜருடனும் கிடாம்பியாச்சானுடனும் இணைந்து திருச்சிலா ரூபமாகக் காட்சி அளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

நன்றி: தி இந்து -ஆனந்தஜோதி (20.10.2016)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக