ஞாயிறு, 2 அக்டோபர், 2016

அம்பேத்கரின் புகழ்மாலை

-ஜி.ஆளவந்தார்சித் (ஆத்மா) அசித் (சரீரம்) ஆகிய இரண்டையும் உடலாகக் கொண்டு, அவற்றுக்குள் உயிரைப் போன்று மறைந்து, அந்தர்யாமியாய், எங்கும் பரந்துள்ளவன் நாராயணன் என்று பறை சாற்றுகிறது இராமானுஜ தரிசனம். 

ஜாதி வேறுபாடு சனாதன தர்மத்தின் – வைதிக மதத்தின் – சாபக்கேடு என்கிறது ஸ்ரீவைஷ்ணவம். பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பது, பூர்வ ஜன்மகர்ம பலனினால் ஏற்படுகிறது என்று கூறுவது மிகப் பெரிய கொடுமை. 

சாஸ்திரங்களில் கூறப்படும் வருணாசிரம தருமத்தைப் பழைய தூய வைதிக நிலையில் இராமானுஜர் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் ஜாதி வேறுபாடுகளை அடியோடு நிராகரித்தார். ஆத்மா, சரீரம் இரண்டையும் தனது உடலாகக் கொண்டு, அவற்றுக்குள் பரம்பொருள் உறைகிறான் என்று விளக்கிவிட்டு, அவை இரண்டில் ஒன்றான சரீரத்தைப் பொறுத்தமட்டில் ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

இத்தகைய கூற்று, நிறைவு உள்ள, பரிபூரணமான, சகல கல்யாண குணங்களுடன் கூடிய பரம் பொருளையே நிந்திப்பதற்கு ஒப்பாகும். திருமால் நன்னெறியில் தீண்டாமைக்கோ அல்லது ஜாதி வேறுபாட்டுக்கோ இடமில்லை என்று இராமானுஜர் அறிவித்தார். 

சமூக வாழ்வில், தாழ்ந்தவருக்கும் தாழ்ந்த நிலையில் கிடந்துழன்ற பஞ்சமர்களை வைணவர்களாக்கி, அவர்களுக்குப் பூணூல் அணிவித்தார். 

ஹரிஜனங்கள் என்று காந்தியடிகள் அழைத்த மக்களைத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இராமானுஜர் ‘திருக்குலத்தார்’ என்று அழைத்தார். 
“இந்திய மண்ணிலிருந்து தீண்டாமையை அறவே நீக்கி ஒழிப்பதற்காகப் பாடுபட்ட பல மகான்களை வரலாறு கண்டிருக்கிறது. இவர்களில் கௌதம புத்தரும், இராமானுஜரும், அவரைப் பின்பற்றிய வைணவத் துறவிகளும் குறிப்பிடத்தக்கவர்கள்”
-என்று இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் பி.ஆர். அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பு:
.திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய புரட்சித் துறவி இராமானுஜர் புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக