வெள்ளி, 9 செப்டம்பர், 2016

சமத்துவப் பேரொளி திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர் காவியம்


 


.

சமத்துவப் பேரொளி 
திருப்பெரும்புதூர் 
ஸ்ரீஇராமாநுசர் காவியம்

(செய்யுள் நாடகக் காவியம்)

புலவர் கணபதி பழனிச்சாமி


ராமையா பதிப்பகம், 

சென்னை வெளியீடு
விலை: ரூ. 100


 ‘சமத்துவப் பேரொளி திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர் காவியம்’ நாடக நூல் கச்சிதமாய், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கதைமாந்தர்கள் எத்தனைபேர் என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் 5 அங்கங்கள், 28 களங்கள் மொத்தப் பாடல் வரிகள்- 4,838 என கணக்கிட்டு கொடுத்துள்ளார்கள்.

புலவர் கணபதி பழனிச்சாமி அவர்கள், கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மரபுவழி கவிதையும், இக்கால கவிதையும் அறிந்திருக்கும் இவர் இந்தக் காவிய நாடகத்தை தமிழ்ச் சுவை சொட்ட அருமையாக படைத்திருக்கிறார்.

இந்த காவியத்துக்கு புலவர் கணபதி பழனிச்சாமி எழுதியுள்ள என்னுரையில், “சமத்துவப் பேரொளி எனும் ஸ்ரீஇராமாநுசர் வரலாற்றுக் காவியம் -இதனை அனைவரும் படிக்க வேண்டும்; அவர் காட்டிய வழியில் நாம் சமத்துவம் பேண வேண்டும் என்பதே ஆழ்ந்த கவியுள்ளத்தின் நோக்கம்” என தன் ஆழ்ந்த ஆசையை வெளியிட்டுள்ளார்.

ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர்  முனைவர் மா.பா. குருசாமி அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அவரது அணிந்துரையில், “ஆன்மிகம் உள்ளொளியார், மெய்யறிவின் வினைப்பயனாய் ஒருவருக்குள் ஒளிர்வது. இறைவனில் ஒன்றி, எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணும் அன்பு கனிந்த அருளினைப் பெறுவார்க்கே ஆன்மிகம் வசப்படும். அப்படி ஆன்மிகத்தைத் தன்வயப்படுத்திக் கொண்ட பேரருளாளர் ஸ்ரீராமாநுசர். அவரை வைணவச் சமயம் என்னும் சிமிழுக்குள் அடைக்கின்றபொழுது அவரது பட்டொளி வீசும் பன்முகம் மறைந்துவிடுகிறது. கவிஞர் இக்காப்பியத்தின் மூலம் அவரை ஆன்மிகம் என்னும் இமயத்தின் உச்சியில் நிறுத்தி, அவரது ஓங்கிவளர் சமத்துவப் பார்வையினை உலகமறியச் செய்கின்றார்” என இந்த நூலின் ஏற்றத்தை போற்றுகிறார்.

காவியத்திலிருந்து மாதிரிக்கு ‘இராமாநுசர் செய்த தொண்டு’ என்ற தலைப்பிலிருந்து…

வித்சலர்:

பிராமணர்க்கு மட்டுமன்றி புவிமிசைத் தாழ்ந்தவர்க்கம்
உரியதாய் பஞ்ச சமஸ்காரம் உபதேசம்
தந்தார்; கங்கைபாய் தரணிபோல் காவிரி
தந்த மண்ணிலும் செழித்தது வைணவம்;
இறைமுன் சாதியிலை என்பதே வைணவம்
மறைமொழி திவ்யம் பிரபந்தம் – திருவாய்மொழி.

பஞ்சமர்க்கும் மற்றவர்போல் ஆலய வழிபாட்டில்
கொஞ்சமும் மாற்றமிலை கொணர்ந்தார் சீர்திருத்தம்!
நான்கு வேதங்கள்போல் நல்லாழ்வார் பாசுரங்கள்.
நான்கு திசைகளிலும் – நனிபோற்ற வகைசெய்தார்.

தமிழ்இலக் கியச்சேவை – வைணவத்தில் தனிச்சேவை;
அமிழ்தெனப் பாயவிட்டார் ஆலயங்கள் தோறும்!
ஆதி சங்கரர் அதைவதம் – எதிர்க்கவில்லை;
தோதாய் ஆக்கத் தொண்டுக்கே பங்களித்தார்!

மாய வாதம் மனதை மயக்கும்;
நோயாய் நின்று நம்மைப் புண்படுத்தும்;
பக்தி மார்க்கமே பயன்பாட்டு இறைவனுக்கு;
முத்தி தந்திடும் முடிவினில் மாந்தர்க்கு!

எளிய மக்கட்கு எளிமை பக்தியே –
எளிதாய் இறைவனை எய்துவிக்கும் என்பதே
இராமா நுசர்தந்த – இனிய விஷிஸ் டாத்வைதம்!

வீரையர்:

இதயம் இருக்கும் இடம்தான் உன்வீடு;
உதயம் உள்ளதுதான் உலக வீடு;
புதுமையைப் படைத்தவன் - இறைவன்; - அவனே
அதனால்தான் அன்னையை அவனியில் படைத்தான்
ஆம்; எங்கள் இராமாநுசர் அன்னையின் மேம்பட்டார்;
ஆம்; தமது இன்னுயிரும் எளியவர்க்கே என்றார்;

தனித்த சமூகத் தொண்டின் இணையற்றார்;
இனித்தமுறு ஆலய நிர்வாகம், கையூட்டிலை;
தனிப்பட்டோர் தலையீடு சற்றும் கிடையாது;
இனிப்பெண்கள் சமவுரிமை, எவ்விடத்தும் பாதுகாப்பு;
நிலையான சமூக நிலைத்தகுதி பெண்கட்கும்;
கலையொழுங்கு மற்றும் கட்டுப் பாடு;

பெண்கல்வி – சமூகப் பாதுகாப்பு; வறுமைநீக்கம்;
தண்ணீர்த்தட் டுப்பாடு தீர்க்கும் நீர்த் தேக்கங்கள்,
பல்வேறு சீர்திருத்தப் பணிகள் – அணிவகுக்கும்!
எல்லாத் துறைகளிலும் இவர்புரட்சி செய்தார்!

அழகர்கோன்:

“வேத நூற்கல்வி – மந்திர உபதேசங்கள்,
ஓதும் பிராமணர்க்கே உரியதன்று; அவைபொது!”
அவைஏழை எளியவர்க்கும் – ஏன்பஞ்ச மர்க்கும்
அவையும் பொதுச்சொத்து – எனத்திருக் கோட்டியூர்க்
கோபுரத்து உச்சிநின்று குவலயத்துச் சாற்றினார்!
சாபம் வருமெனினும் சங்கடப் படவில்லை!

இதற்காக அவர்தாம் எடுத்த முயற்சிகள்.
இதற்காகத் தாமேற்ற, இன்னல்கள் - நோன்புகள்;
செப்பும் தரத்தன்று; செவிகொளாத் துயரங்கள்,
மெப்புக்குப் பேசலன்று; “தாளம்படாது தரிபடாது;”
நல்லதொரு சமுதாயம் நானிலத்துத் தோற்றுவதே
வல்லான் கடமையென்று இராமாநுசர் துணிந்த செயல்!

பல்வேறு தரப்பினரும் பகையுணர்ச்சி பாராட்டினார்;
கொல்லும் கொலைச்சூழ்ச்சி; கொடுமனத்தர் மேற்கொண்டார்;
எதிராசர்; அதனால்தான் – எதிரிகளைச் சமாளித்தார்;
எதிலும் நாகரிகம் என்பதனைக் கைக்கொண்டார்;
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்; - நயத்தக்கார்;
அய்யன் வள்ளுவம் அவர்க்கே பொருந்தும்!

அமைதிமனப் பான்மையொடு ஆன்மீகப் பணிசெயும்,
சமரசம் செய்துகொண்ட தவசீலர் நடுவிலே.
சமூகக் கேடுகளைத் தலைநிமிர்ந்து எதிர்த்தார்கள்!
சமத்துவப் பேரொளி – சமூகப் பேரொளி!
நமது இராமாநுசர் – நெஞ்சுயர்த்திக் கொள்ளலாம்!

இமைப்போதும் நாடுக்கே எழுந்தோடு உழைத்தமகான்;
அமைதிப் பெருங்கடல்; ஆவேச அரபிக்கடல்!
நமக்கே கிடைத்த நற்பேறு மகிழ்ச்சிக் கடல்!புத்தகத்தின் பெயர்: 

திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர் காவியம்

ஆசிரியர்:
புலவர் கணபதி பழனிச்சாமி, M.A., M.L.I.S.,

வெளியீடு: 
ராமையா பதிப்பகம்,
ஜி-4, சாந்தி அடுக்ககம்,
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
ராயப்பேட்டை,
சென்னை – 14. 
அலைபேசி: 9790706549 / 9790706548

விலை: ரூ. 100


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக