புதன், 14 செப்டம்பர், 2016

ராமானுஜர் எனும் இரும்புக் கரும்பு-இந்திரா சௌந்தர்ராஜன்
ராமானுஜர்!

-இந்தப் பெயரை நினைக்கும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை உணரலாம். ‘எவரோ வைணவர்?’ என்கிற கேள்விக்கு தன்னையே ஒரு உதாரணமாக்கி வாழ்ந்து காட்டிவிட்டு காலத்தோடு கரைந்து போகாமல், ஆயிரமாண்டு கண்டு, அன்று சிந்திக்கப்பட்டதை விட இன்று மிக அதிகமாகவும், இறை மறுப்பாளர்கள் கூட இளைப்பாறும் வரலாறாகவும் திகழ்பவரே நம் ராமானுஜர்!

இவர் ஒரு வைணவ ப்ரத்யேகமாக சிலரால் கருதப்படலாம். ஆனாலும் எப்படி சூரிய சந்திரர்கள் உலகப் பொதுவோ அப்படி அனைவருக்கும் பொதுவாகி விட்டவர் இவர்.

ஆயிரம் என்கிற எண்ணை எண்ணுந்தோறும் ஆயிரம் பிறை தான் ஒருவர் வாழ்வில் நினைவுக்கு வரும். ஆயிரம் பிறை கண்டு வாழ்வது தீர்க்கமான ஆயுளின் அடையாளம். அடுத்து ஆயிரம் என்றவுடன் அரசர் பெருமக்களில் ராஜராஜ சோழன் நினைவுக்கு வருவான். இனி ஆயிரம் என்றால் ராமானுஜரே நினைவுக்கு வருவார்.

ஒரு வைணவன் நிதமும் சஹஸ்ரம் எனும் ஆயிரத்தில் அந்த வைகுண்டபதியை சிந்திப்பது போல, நிதமும் ராமானுஜரையும் சிந்திக்க வேண்டும் என்பது குரு பரம்பரைக் கோட்பாடு.

‘பரோபகாரம், தியானம், சத்சங்கம், திருவாராதனம்’ எனும் நான்கை தன் வாழ்நாள் கடமையாகவும் வழியாகவும் கொண்ட வைணவர்க்கெல்லாம் பெரும் சந்ததித் கொள்முதலாய் வந்தவர்

ஸ்ரீ ராமானுஜர். இன்று விடாமுயற்சிக்கு சிலந்தியையும் கஜினி முகமதுவையும் உதாரணம் காட்டும் சிந்தனாவாதிகளில் பலர் ராமானுஜரை மறந்துவிடாமல் இவரே முயற்சியின் வடிவாய் திகழ்ந்தவர் என்பதை திருக்கோட்டியூருக்கு மந்த்ரோபதேசம் பெற்றிட இவர் முனைந்த வரலாற்றை வைத்து முன்மொழிவர்.

ஒரு முறையா? இரு முறையா? 18 முறைகள்! இன்றுபோல அன்று என்ன சாலை வசதி உண்டா? தொடர்புச் சாதன வசதிதான் உண்டா?

வனாந்திரமான நிலப்பரப்பில் திக்கு திசை தவறிடாமல் நடந்தே பலப்பல காத தூரம் ஒரு மனிதன் கடப்பது என்பது எத்தனை பெரிய விஷயம்? இந்த நடைக்கு பின்னால் பொன்னாசையோ பொருளாசையோ இல்லை. குருவருளுக்கு இலக்காகி மோட்சகதிக்கு வழிகாட்டும் மந்திர உபதேசத்தை பெற வேண்டும் என்கிற ஒரே நோக்குதான் இருந்தது. அது இவர் வரையில் பதினெட்டாவது தடவையில் தான் சாத்தியமாயிற்று. அப்படியே இவர் மூலம் உலகம் ஒரு வைணவன் என்பவன் அடியார்க்கெல்லாம் அடியவன் என்பதையும் அழுத்தமாய் பறை சாற்றிற்று. 

ஒவ்வொரு முறையும் ‘யார் வந்திருப்பது?’ என்று கோட்டியூர் நம்பி கேட்பார். ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்பார் நம் புரட்சித் துறவி.

பிறகு பார்க்கலாம். திரும்பிச் செல்" என்று கூறி விடுவார் நம்பி.

பதினெட்டாவது தடவையில் தான் இக்கேள்விக்கு ‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்றார். ‘அடைவாய் இனி உபதேசத்தை’ என்று நம்பியும் மந்த்ரோபதேசம் செய்தார். உபதேசம் செய்யும்போதே ஒரு பூட்டையும் போட்டுவிட்டார். ‘இது உனக்கே உனக்கானது. பிறர்க்கு உரைக்கலாகாது. உரைத்தால் மோட்சகதி நரககதியாகி விடும்’ என்றார்.

ஏன் அப்படிச் சொன்னார்? குருவின் வழியாகவே அதை அடைய வேண்டும். குரு என்கிற கண்காணிப்பு மிக முக்கியம். அதனால் அப்படிச் சொன்னார். அடுத்து உயர்வானதை உயர்வானவரே உணரமுடியும் அடையவும் முடியும். 

ராமானுஜரும் அடைந்து விட்டார்.  என்றால் மாயையில் மடங்கிக் கிடக்கும் சாமான்யர்களுக்கு அந்த நாரணன் அருகாமை கிடையாதா? ஐயோ இதென்ன கொடுமை...? பதைத்தது ராமானுஜர் மனது. ஏறினார் கோபுரம்... அழைத்தார் ஜெகத்தை...

‘வாரும் ஜெகத்தீரே!’ என்றழைத்து உபதேசித்துவிட்டார் ஊருக்கே பொதுவாய் அந்த திருமந்திரத்தை...

அதனாலேயே உபதேசித்த நம்பியாலேயே ஜெகத்குருவாய் அங்கீகரிக்கப்பட்டார்.

நம்பி காக்க நினைத்தது மரபை... அவர் சீடரான ராமானுஜர் காத்ததோ மானுட மாண்பை!

இரண்டுமே உயர்ந்தவை தான். ராமானுஜர் மூலமாக, மரபுகளை மாண்புகளாக்குவது என்றால் மீறலாம் என்கிற ஒரு புது விதியே இதன் பின் உருவானது.

அது அடுத்து ஆலய வழிபாட்டு முறையிலும் எதிரொலித்தது.

ஒவ்வொரு வைணவ ஆலயமும்  ‘திவ்யம், ஆர்ஷம், பௌராணம், மானுஷம், ஸ்வயம்விக்தம்’ எனும் ஐந்து வகை ஆற்றலோடும் ‘பாஞ்சராத்ரம்’ ‘வைகானசம்’ எனப்படும் இரண்டுவித ஆகமத்தோடும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு மனிதனுக்கு தாய் -தந்தை என்று இருவர் இருப்பது போலத்தான் இதுவும். எதற்கு இரண்டு, ஒன்று போதுமே? என்று கேட்கலாம். எப்போதும் காரணமில்லாமல் காரியமில்லை. இந்த இரண்டில் பாஞ்சராத்ரத்திற்குள் 108 சம்ஹிதைகள் உள்ளன. வைகானசம் அதன் நிழலாயுள்ளது. பாஞ்சராத்ரம் என்பது பகவத் கொள்கை. திரேதாயுக காலத்தில் வடிவம் கொண்டது இது. இதை வகுத்தவன் அந்த ஆதிகேசவனே என்பது இதன் சிறப்பு.

பகலில் எல்லாவற்றையும் தெளிவாய் பார்க்க முடியும். அதுபோலவே பாஞ்சராத்ரம் மூலம் அந்த பரந்தாமனை தெளிவாய் ஒளியாய் அனுபவிக்கலாம் என்பது பாஞ்சராத்ரம் தொடர்பான ஒரு கருத்து.

வைகானசம் என்பது வைகானசர் எனும் மாமுனி மூலம் வந்த ஒன்று. இதன் பின்னாலும் அந்த நாரணனே காணப்படுகிறான். நாரணன் வைகானசருக்கு உபதேசித்திட அவர் மூலம் உருவாயிற்ரு இந்தக் கோட்பாடு. அதனாலேயே இதற்கு அவர் பெயரை மையப்படுத்தி, ‘வைகானசம்’ என்று அழைக்கப்பட்டும் வருகிறது.

பாஞ்சராத்ரம் பரந்தாமனே வகுத்தது. வைகானசம் மாமுனி மூலம் உகுத்தது. இந்த வகுத்ததையும் உகுத்ததையும் வைணவமும் பின்பற்றி வருகிறது.

ஒன்று ஓடுவது போன்றது. ஒன்று நடப்பது போன்று! வாழ்வில் இரண்டிற்கும் அவசியப்பாடு உள்ளதே! இதில் அது பெரிது இது சிறிது என்றெல்லாம் சிந்திக்க இடமே இல்லை. ஆயினும் ராமானுஜர் பாஞ்சராத்ரத்தை சற்று கூடுதலாய் விரும்பினார். இதற்கான காரணமும் பதிலும் மிக சூட்சுமமானது.

ஒரு ஆலயத்தில் நித்ய ஆராதனை இயற்கை காரணங்களால் தடைபட்டால், அதை உரியவர்க்கு பதிலாய் மற்றவர்கள் செய்தல் கூடாது என்பது வைகானசம். அதேபோல் தெய்வத் திருமேனியை உரியவரை அன்றி வேறு எவரும் தீண்டக் கூடாது என்பதும் வைகானச நெறி.

பாஞ்சராத்ரம் இங்கே சற்று வளைந்து கொடுக்கிறது. ஒன்று தீவிரமானது - இன்னொன்றோ சற்று நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது. தீவிரமான ஒன்று இருந்தாலே நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது பெரிதாய் தெரியவரும்.

ராமானுஜர் இங்கே தான் தன் பங்கினைச் செயல்படுத்தினார். ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா? இவர் ஒரு தீவிரர். இல்லாவிட்டால் பதினெட்டு முறை படை எடுப்பாரா...?

இந்த தீவிரவாதிக்கு ஒரு உண்மை நன்றாக தெரியும். எல்லோராலும் தீவிரமாய் செயல்பட முடியாதென்று... தீவிரமானவருக்கே உயரங்கள் கிட்டும். தீவிரமானவர்களாலேயே உச்சங்களை தொடமுடியும். அதே சமயம், அவர்களாலேயே பிறரை உச்சத்திற்கும் இட்டுச் செல்லவும் முடியும். அப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ எனும் தீவிரவாதிக்குத்தான் ‘நான்’ எனும் தன்முனைப்பு ‘அடியேன்’ எனும் பொது முனைப்பானாலே மோட்சகதி கிட்டும் என்பது புரிந்தது.

புரிந்த உடனேயே சீடனாக வேண்டியவர் ஜெகத்குருவாகவே ஆகிவிட்டார். சீடன் என்பவன் பின்தொடர்பவன், குருவோ தொடரச் செய்பவர்.சீடனுக்கு தீவிரம் தான் அழகு. குருவுக்கோ அவனை நெகிழ்த்துவதே அழகு. அதைத்தான் நம்பி, ராமானுஜருக்கு செய்தார். பின் ராமானுஜர் நமக்கெல்லாம் செய்தார்.

செய்தார் என்பது கூட பிழை! செய்த வண்ணமே உள்ளார் என்பதே சரி. அவரின் மேலான வாழ்வே தீவிரமான ஒரு சீர்திருத்த வாழ்வு தான்! இவர் ஒரு இரும்புக் கரும்பு!

எல்லோராலும் அப்படி வாழ்ந்து விட முடியாது. நாம் தீவிரமாய் நல்ல சீடனாய் அவரை தொடர்வோம். அவரது நெகிழ்வு நம் குறைபோக்கி நாரணன் திருவடிகளில் நம்மை சேர்த்துவிடும். இது சத்யம்! 

குறிப்பு: 

திரு. இந்திரா சௌந்தர்ராஜன், பிரபல தமிழ் எழுத்தாளர்.  சிறுகதைகள், புதினங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைக்கதைகள் எழுதிவரும்  இவர் மதுரையில் வசித்து வருகிறார். 
நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் 1000 சிறப்பிதழ்

1 கருத்து:

  1. Madurai Indira soundarrajan has nicely written the article.I am also from madurai.His article on Ramanuja is very good.The writer is a well known person in spiritual writing but he also missed an opportunity to say about Yadava Prakashar who turned to vaishnavite from saivite.Yadava prakashar was initially a guru of Ramanuja and then turned into shishya of Ramanuja which never happened in history.A guru turning
    into a shishya what a miracle?

    பதிலளிநீக்கு