செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ராமானுஜர் ஒரு ஏகலைவன்

-திருநின்றவூர் ரவிக்குமார்நல்லோர் சேர்க்கை மேலும் மேலும் நன்மையைக் கொடுக்கும். ராமானுஜர் திருகோட்டியூர் நம்பி என்ற நல்லவரை அடைந்தார். அதனால் திருமந்திரமும், துவையமும் அதிகரிக்கப் பெற்றார்.

சில காலத்திற்கு பிறகு திருக்கோட்டியூர் நம்பி திருமாலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரைக் காண திருவரங்கம் வந்தார். திருமாலையாண்டான் மதுரை திருமாலிருஞ்சோலையைச் சேர்ந்தவர்; ஆளவந்தாரின் சீடர்.


நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமாலையாண்டானையும் வணங்கினார். நம்பிகள் ராமானுஜரைப் பார்த்து, ‘இவர் என் குரு ஆளவந்தாரின் சீடர். திவ்ய பிரபந்தத்தில், அதிலும் குறிப்பாக, திருவாய்மொழியை ஆளவந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர். நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகவே இவரை இங்கு அழைத்து வந்தோம்’ என்றார்.

‘மகிழ்ச்சி. தங்கள் சித்தம் என் பாக்கியம்’ என்று கூறிய ராமானுஜர் திருமாலையாண்டான் திருவரங்கத்தில் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். ஆண்டான் ராமானுஜருக்கு திருவாய்மொழியை, தாம் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அப்படியே அர்த்தத்துடன் கற்பித்தார்.

இடையிடையே ராமானுஜர் குறுக்கிட்டு, ‘இதற்கு இப்படி பொருள் வராதே’ என்று சில விஷயங்களைக் கூறுவார். இது ஆண்டானை எரிச்சல் மூட்டியது.

ஒரு நாள் திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்
“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து,
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்;
அறியாமைக் குறள்ஆய், நிலம் மாவலி மூவடி என்று,
அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே”
(2.3.3)
-என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்.

இன்றும், பொதுவாக பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகள் தூக்கத்தில் தானாகவே சிரிப்பதும் சிணுங்குவதும் செய்யும். அப்போது பெரியவர்கள், குழந்தை கடவுளுடன் விளையாடுகிறது என்று கூறுவார்கள். அடையாளம் காணும் அறிவு வரும்வரை கடவுள் குழந்தையுடன் இருப்பதாக ஒரு நம்பிக்கை.

திருமாலையாண்டானும்  ‘அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள் பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாகப் புலம்புகிறார்’ ஆழ்வார் என்று பொருள் கூறினார்.

ராமானுஜர்  ‘அது சரியான விளக்கம் அல்ல. தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்துகொள்ளாதது தனது அறியாமையே என்று கூறுகிறார்’ என்று விளக்கினார்.

கடுப்பான ஆண்டான்,  ‘இது (ராமானுஜர்) ஒரு விஸ்வாமித்திர சிருஷ்டி’ என்று கூறி பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டார்.

சில நாட்களில் செய்தி திருகோட்டியூரை எட்டியது. திருகோட்டியூர் நம்பி புறப்பட்டு திருவரங்கம் வந்து ஆண்டானைக் கண்டு,  நடந்தது என்ன என்று வினவினார். நடந்ததை திருமாலையாண்டான் விளக்கினார்.

கேட்ட பிறகு திருகோட்டியூர் நம்பி, ராமானுஜர் கூறியது போன்றே ஆளவந்தார் விளக்கம் கூறி தாம் கேட்டுள்ளதாக எடுத்துரைத்தார். ‘ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாம் அறிந்த பரமாத்மாவாக இருந்தபோதும் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார். ராமானுஜரும் ஸ்ரீகிருஷ்ணரைப் போலவே தங்களிடம் பாடம் கேட்பதாகக் கருதி பாடம் சொல்லும்’ என்று ஆண்டானுக்கு அவர் அறிவுரை கூறினார்.

பிறகு அவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரிடம் சென்று, ‘தொடர்ந்து பாடம் கேளும்’ என்றார். பாடம் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு ராமானுஜரின் குறுக்கீடு வந்தது.

இம்முறை ஆண்டான் நிதானித்தார்;  சிந்தித்தார். ராமானுஜர் சொல்லுவது பொருத்தமாக இருப்பதைப் புரிந்து கொண்டார். ராமானுஜரைப் பார்த்து,  ‘நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை. அவர் பேசிக் கேட்டதும் இல்லை. அப்படியிருக்க எப்படி இவ்வளவு சரியாக அவர் எண்ணங்களை பிரதிபலிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு ராமானுஜர், “அவருக்கு நான் ஒரு ஏகலைவன்” என்றார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக