திங்கள், 5 செப்டம்பர், 2016

திருமந்திரம் விளைவித்த திவ்யதேசம்!


- ஜி.கிருஷ்ணமூர்த்தி

எட்டெழுத்து மந்திரத்தை எட்டுத் திக்கிலும் பரவச் செய்த எட்டெழுத்துத் திருத்தலம் திருக்கோஷ்டியூர் (திருக்கோட்டியூர்). ‘தென்பத்ரி’என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகள் தம் சீடரான ராமானுஜரிடம் ஒரு திருமந்திரத்தை உபதேசித்து, “இதை உச்சரிப்பதன் மூலம் உனக்கு மோட்சம் கிட்டும்.  மற்றவர்களிடம் இதைக் கூறினால் உனக்கு அப்பேறு கிட்டாது. அதுமட்டுமல்ல, உன்னை நரக லோகத்தை அடையச் செய்துவிடும்” என்று எச்சரித்தார்.

குருவின் சொல்லைத் தட்டக் கூடாது என்பதை அறிந்திருந்த ராமானுஜரோ, அதற்கு மறுமொழி கூறாமல் அமைதி காத்தார். உலக மக்களுக்கெல்லாம் கிட்டாத மோட்ச சாம்ராஜ்யம் தனக்கு மட்டும் கிடைப்பதை அவர் உள்ளம் ஏற்கவில்லை. குருவின் கட்டளையின்படி தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, உலக மக்கள் அனைவரும் மோட்சம் அடையச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டார்.

தன் எண்ணத்தை நிறைவேற்ற திருக்கோஷ்டியூர் ஆலயத்தின் மூன்றாவது தளத்தின் மீது நின்று மக்கள் அனைவரையும் திரண்டு வரச் செய்து,  கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் குரு தனக்கு உபதேசித்த மோட்சத்திற்கு வழிகாட்டும் மந்திரத்தை உரத்த குரலில் கூறி அறியச் செய்தார். இத்தகைய பெருமைமிகுந்த திருக்கோஷ்டியூர் அமைந்திருப்பது சிவகங்கை மாவட்டத்திலாகும்.

பிரம்மா, தேவசிற்பியான விஷ்வகர்மாவையும் அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி, மூன்று அடுக்குகளைக் கொண்ட அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோயில் உருவாயிற்று என்பது திருக்கோஷ்டியூர் ஆலயத்தின் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் திருக்கோஷ்டியூர் முதன்மையானதாக விளங்குகிறது.

 ‘அஷ்டாச்சரம்’ என்னும் எட்டெழுத்து ஆலயத்தின் எட்டு உள்விமானங்களையும் ‘ஓம் நமோ நாராயணா’  என்னும் மூன்று சொற்கள் மூன்று அடுக்குகளைக் கொண்ட தளங்களாகவும் அமைந்திருப்பது அந்த ஆலயத்தின் சிறப்பு. ஆலயத்தின் மூலவராக ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் விளங்குகிறார். மேலும் ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ யுத்த நரசிம்மர், ஸ்ரீ சம்ஹார நரசிம்மர் ஆகிய நான்கு நரசிம்மர் சந்நிதிகள் இங்கு அமைந்திருப்பது சிறப்பாகும்.

மூன்று தளங்கள் கொண்ட இக்கோயிலின் கீழ்த்தளத்தில் நவநீத கிருஷ்ணன் பாமா ருக்மணியுடனும், முதல் தளத்தில் சீராப்தி நாதனாக சயனக்கோலத்திலும், இரண்டாம் தளத்தில் உபேந்திர நாதனாக நின்ற திருக்கோலத்திலும், மூன்றாம் தளத்தில் பரமபத நாதனாக அமர்ந்த கோலத்திலும்- கூத்தாடியும் கிடந்தும் நின்றும் அமர்ந்தும்- என நான்கு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதை கண்டு மகிழலாம். இந்த ஆலயத்தில் தாயார் ‘திருமாமகள்’என்னும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறார்.

இக்கோயிலில் உற்சவர் பஞ்சலோகத்தில் அமையாமல் தூய வெள்ளியால் உருவாக்கப் பட்டுள்ளார். உற்சவரை,  ‘வெள்ளியான்’,  ‘மணிநிறவண்ணன்’ என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ நிவாசன், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகள், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன.

இங்கு ஆண்டுதோறும் பல உற்சவங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. சித்திரை மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம், வைகாசி மாதம் - வசந்த உற்சவம், திருவாடிப்பூரம் ஆகிய விழாக்கள் பத்துநாள்களுக்கு உற்சவம் மற்றும் திருத்தேரோட்டம் என விமரிசையாக நடைபெறும். மேலும் கோகுலாஷ்டமி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து ராப்பத்து விழாக்களும் ஆழ்வார்களின் திருநட்சத்திர உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தலத்தில் இந்திரனே உற்சவங்கள் நடத்துவதாக ஐதீகம்!

இது, பூதத்தாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசமாகும்.

ஸ்ரீ திருமாமகள் பிராட்டி சமேத ஸ்ரீ சௌம்ய நாராயணப்பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவதாண்டு அவதார ஆண்டினையொட்டி சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நிகழ்த்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் துவங்கி நடைபெறுகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 98429 18989.

நன்றி: தினமணி-வெள்ளிமணி (02.09.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக