புதன், 21 செப்டம்பர், 2016

பிறர்க்கென வாழ்ந்த பேரருளாளர்

-பிரேமா நந்தகுமார்பாரதத்தின் ஆன்மிக, சமய வரலாற்றில் சிலரது பெயர்கள் மேலெழுந்து காணப்படுகின்றன. அவர்கள் தனிநபர்களாக இறை அனுபவம் பெற்றதுடன் நிறைவடையாமல் பிறர்க்கென வாழ்ந்த தீரர்கள். தனிநபர் இறையுணர்வுடன். சமுதாயம் மேன்மையுற வேண்டுமென்ற உணர்வும் இரண்டறக் கலந்து அவர்களிடம் வெளிப்பட்டுள்ளது. புத்தரின் பௌத்த மதமும் இக்கருத்தை ஒட்டி எழுந்ததே. தனிமனித முக்தி என்ற பாதையில் பயணிப்பவர் மனித சமுதாயத்தின் துயரங்களைப் போக்குவதற்காக தன்னாலான பணியாற்ற வேண்டியது அவசியம். பக்தி நெறியும் முக்தியும் மட்டுமே போதுமானதல்ல. உலகில் பிறந்ததனால் உயிர் வாழ்க்கை உயர்வடையப் பணியாற்ற வேண்டும்.

பௌத்த சங்கங்களும் சமணப் பள்ளிகளும் துறவற வாழ்க்கைக்கு மட்டுமே வழிகாட்டாமல் சமுதாயத்திற்கு கல்வியும் மருத்துவத்தையும் கொடுத்தன. பௌத்த துறவிகளின் கலை வெளிப்பாடே அஜந்தா குகை ஓவியங்கள். புத்தர் பெருமானின் மறைவுக்குப் பின் சுமார் 15 நூற்றாண்டுகள் கழித்து வந்த ஒரு வைணவத் துறவி மனித சமுதாயத்தின் ஆன்மிக மற்றும் லௌகீக ஆரோக்கியத்தைப் பேணினார். வைணவ குரு பரம்பரையில் வைரமென ஒளிர்ந்த ஸ்ரீ ராமானுஜர் (1017-1137) தான் அவர்.

திருப்பெரும்புதூரில் பிறந்த ஸ்ரீ ராமானுஜர் புகழ்பெற்ற குருமார்களிடம் கல்வி பெற்றார். ஆசித்து, சித்து, பரமன் (பௌதீத பொருள்கள், உயிர்க் கூட்டங்கள், இறைவன்) ஆகிய மூன்றைப் பற்றியும் அவற்றிடையே நிலவும் உறவு குறித்தும் கசடறத் தெளிந்தார். நாதமுனிகள், ஆளவந்தார் என்ற தனது புகழ்மிக்க குரு பரம்பரையினர் போதித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற தத்துவத்தை தெளிவாக தான் எழுதிய ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த சங்கிரஹ, வேதாந்த சாரம், வேதாந்த தீபம் ஆகிய நூல்கள் மூலம் நிறுவினார்.

இந்நூல்களில் அனைத்து நற்குணங்களின் உறைவிடமாக திகழும் இறைவனை நிறுவியதுடன், அவனிடம் சரணாகதி செய்வதே இறையனுபவம் பெற சுலபமான வழியென காட்டியுள்ளார். புலனடக்கம் மற்றும் பக்தி ஆகிய முக்கிய பண்புகளின் அடிப்படையில் வைணவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறையை, தனது ‘நித்ய’ என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது விருப்புகளையும் உணர்வுகளையும் எஃகினை ஒத்த உறுதியுடன் கட்டுப்படுத்தி பிறர்க்கு சேவை செய்வதென்பது சுலபமானதல்ல. எனவே விரிவான திருவாராதனையை (வழிபாட்டு முறை) ஏற்படுத்தினார். அதன்மூலம், செய்பவன் நான் என்ற தன்முனைப்பையும் செயலின் பலனையும் தியாகம் செய்கின்ற சாத்வீக தியாகத்தை முடிவில் எட்டலாம். ‘கத்ய திரயம்’ என்று அறியப்படும் மூன்று நூல்களின் தொகுப்பு சரணாகதி தத்துவத்தை விளக்குகிறது.

இதில் இறைவனின் பாத கமலத்தைப் பற்றுவது எப்படி, அதன் மூலம் வாழ்வின் துன்பங்களைப் போக்குவது எப்படி என்பது கற்பிக்கப்படுகிறது. இறைவனின் ‘திருவடி’யைப் பற்றி (நம்மாழ்வாரின் கருத்தை ஒட்டி) ஸ்ரீ ராமானுஜர் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

இது சுலபமான செயல் அல்ல. அதற்காக அவர் துன்புறுத்தப்பட்டார். வேறு மாநிலத்தில் சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழ்ந்தவர்களை ஸ்ரீ ராமானுஜர் ஒருங்கிணைத்தது அப்போதிருந்த சமயவாதிகளுக்குப் பிடிக்கவில்லை.

பிள்ளைலோகாச்சாரிய ஜீயர் சொல்லியதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, ஸ்ரீ ராமானுஜர் கோயில் பணி செய்பவர்களை கோயிலுக்கு அருகிலேயே குடியமர்த்தினார். அதன்மூலம் இரவும் பகலும் அவர்கள் கோயிலில் தங்கள் பணியை செய்ய ஏதுவானது. அனைத்து ஜாதியினரையும் கோயில் பணியில் அமர்த்தினார். அவரவர்களுக்கு ஏற்றபடி கௌரவிக்க ஏற்பாடு செய்தார். இன்றுவரை அந்த ஏற்பாடு தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. 

பிராமண சமையல்காரர்களைக் கொண்டு கோயில் சமையலறையில் பிரசாதம் தினசரி தயாரிக்கப்படுகிறது. நந்தவனத்தைப் பராமரித்து, மலர் கொய்து, மாலையாக்கி இறைவனுக்கு சாத்த கொண்டு வரும் பணி மற்ற ஜாதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறைவனுக்கும் இதர தேவதைகளுக்குமான ஆடைகளை தூய்மை செய்து தரும் பணி சலவைத் தொழிலாளர் ஜாதியிடம் கொடுக்கப்பட்டது. சமையல் பாத்திரங்கள் செய்து தரும் பணி குயவர்களிடமும் மரமேறிகளிடம் இளநீர் கொண்டுவரும் பணியும் ஒப்படைக்கப்பட்டது. ஆவினங்களைப் பராமரித்து பால், தயிர், நெய் ஆகியவற்றை கோயிலுக்கு கொண்டுவரும் பொறுப்பு யாதவர்களுடையது.

தலித்துகளுக்கு சமுதாயத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார் ஸ்ரீ ராமானுஜர். மாறனேர் நம்பிக்கு (ஹரிஜன்) உதவிகளையும் இறுதிச் சடங்கையும் செய்ததால் கண்டனத்துக்காளான அந்தணர் பெரியநம்பிக்கு ஆதரவளித்தவர் ஸ்ரீராமானுஜர். தனது சீடரும் தனக்கு பிறகு குரு பீடத்தை ஏற்கவிருந்தவருமான தனது ஆன்மிகவாரிசான பட்டாச்சாரியாரை கைசிக புராணத்திற்கு உரை எழுதும்படி வைத்தார். இந்த கைசிக புராணமானது, திருகுறுங்குடியில் வசித்த ‘சண்டாளனான’ நம்பாடுவான் பற்றியது. அவர் இசையுடன் பாடி இறைவனை மகிழ்விப்பார். உயிரையும் தந்து இந்த விரதத்தை நிறைவேற்றும் உறுதி கொண்டவர். இந்நாளிலும் கூட கைசிக ஏகாதசி தினத்தன்று திருக்குறுங்குடி கோயிலில் இந்த புராணம் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. 

ஸ்ரீ ராமானுஜர் ஹரிஜனங்களை ‘திருக்குலத்தார்’ என்று அழைத்தார். இச்செயல் இன்றும் இந்தியாவில் ஜாதி வேறுபாடுகளை களைய முனைவோருக்கு ஒளிவிளக்காக வழிகாட்டி வருகிறது. மேல்கோட்டை திருநாராயணர் கோயில் (மைசூர்) தலித்துகளை அனுமதித்த அவரது முடிவு அந்நாளில் மிகத் தீரமான முடிவாகும். சமயத் தலைவர்களும் அறிஞர்களும் பக்தர்களும் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய சரியான வழியை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் காட்டுகிறது ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை. 

சமுதாயத்திற்காகவே வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜரின் வாழ்வு வீண் போகவில்லை. அவர் காலடியைப் பின்பற்றி வந்தவர்கள் சமுதாயத்திற்காக சீரிய பணியாற்றியுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைத் தொடங்கியபோது சுவாமி விவேகானந்தர் ஒதுக்கப்பட்ட ஜாதியினரின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். கடந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜர் செய்த மேன்மையான பணிகளை நினைவுபடுத்தி உயர்வாகப் பேசினார்.  "தாழ்ந்த ஜாதியினருக்காக ஸ்ரீ ராமானுஜர் பரிதவிக்கவில்லையா? தன்னுடைய சமுதாயத்தில் பறையர்களை இணைத்துக் கொள்ள அவர் வாழ்நாள் முழுவதும் முயற்சித்தார் இல்லையா?" என்று கேட்டு உத்வேகம் அளித்த சுவாமி விவேகானந்தர் கடைசி மனிதர் அல்ல. தமிழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் சமுதாயத்தில் ஆறில் ஒரு பங்கினராக உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்ப்பதைக் கண்டித்து பலமுறை பேசியுள்ளார். அவருடைய ‘ஆறிலொரு பங்கு’ கதை இந்த விஷயம் குறித்த சிறப்பான கதை. பாரதியும் ஸ்ரீராமானுஜரைப் போற்றியுள்ளார்.

இதுபோன்ற மாமனிதர்களைப் பின்பற்றி மேலும் பலர் வருவார்கள் - பாரதி கண்ட கனவான பாரதத்தின் பொற்காலம் விரைவில் மலரும் என்ற உறுதியுடன் செயல்படுவோமாக!

குறிப்பு:
 .
இக்கட்டுரை, தேசிய சிந்தனைக் கழக வெளியீடான  ‘ஆச்சார்யர் இராமானுஜரும் அண்ணல் அம்பேத்கரும்’  நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரையாகும்.
.
இதனை எழுதியுள்ள  திருமதி பிரேமா நந்தகுமார் (75), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும்.
 .
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

1 கருத்து: