சனி, 3 செப்டம்பர், 2016

விந்தியத்தை தாண்டி ஸ்ரீ வைஷ்ணவம்

-சி.கோபாலன்


ஸ்ரீ  துவாரகா யாத்திரையாக சென்றபோது இறுதியில் ஜெய்ப்பூர் சென்றோம். சாவகாசமாக மார்க்கெட் பகுதியில் சுற்றியபோது திருப்பதி வேங்கடாசலபதி கோயில் என்ற விளம்பரப் பலகை தெரிந்தது. நெரிசலான காய்கறி மார்க்கெட் நடுவில் (சென்னை கொத்தவால் சாவடிக்கு ஒப்பிடலாம்) ஒரு மாடியில் அந்த கோயில் உள்ளது. உள்ளே நுழைந்தோம். பல பெண்மணிகள் அமர்ந்திருந்தனர். அலுவலகத்தில் இருந்தவரிடம்  காணிக்கை அளித்துவிட்டு,  “சுவாமி பிரசாதம் கிடைக்குமா?”  என்று வினவினோம். அழகான ஹிந்தியில்  “சற்றே பொறுத்திருங்கள்; இப்போது ஆரத்தி நடைபெறும். அதையடுத்து கோஷ்டி விநியோகம் உண்டு” என்றார். இந்த கோஷ்டி விநியோகம் என்பது தென்னாட்டு ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கே உரித்தானது.


சிறிது நேரத்தில் பெருமாளுக்கு ஆரத்தி நடந்தது. வியப்பிலும் வியப்பு. கூடியிருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீ ஆளவந்தாரின் (ஸ்ரீ ராமானுஜருக்கு குரு) ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகங்களை வாய்விட்டு பக்தி சிரத்தையுடன் கூறினர். தீர்த்தம், சடாரி ஆனபிறகு அனைவரும் அமர, கோஷ்டி விநியோகம் ஆகியது. இந்தக் கோயில் தென்கலை சம்பிரதாய கோயில். இவர்களது ஆச்சார்யார் பிருந்தாவனத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு வானமாமலை தான் மூல மடம். இதே போல் புஷ்கர், சித்ரகூட் ஆகிய க்ஷேத்ரங்களிலும் இத்தகைய பெருமாள் கோயில்கள் சிறப்புற விளங்குகின்றன.

விந்தியத்தைத் தாண்டிய வைணவத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகையில் பரோடாவில் (இன்றைய வதோதரா) உள்ள பாலாஜி மந்திர் செல்ல நேரிட்டது. சமீப காலத்தில் அங்கு குடியேறிய தமிழர்கள் இதை நடத்தி வருகிறார்கள் என்ற எண்ணத்துடன் நுழைந்த நான், கோயில் அர்ச்சகர் மற்றும் அருகே இருந்த ஒருவர் ஆகியவர்களைப் பார்க்கும் போது அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் தோன்றவே தமிழில் உரையாடத் தொடங்கினேன். பிறகுதான் தெரிந்தது அவர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் முறையாக தங்கள் ஆச்சாரியரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று ஸ்ரீ வைஷ்ணவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் கோயிலின் ஆசார்யரான வேங்கடாசாரியாரைச் சந்தித்தோம். சுமார் முப்பத்தி இரண்டு வயதுதான் இருக்கும். தோற்றத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் அய்யங்கார் போல் பொலிவுடன் காட்சியளிக்கிறார். அவருடன் உரையாடியபோது அக்கோயில் உத்தர அஹோபில மடத்தின் பராமரிப்பில் உள்ளது தெரியவந்தது.

விந்தியத்திற்கு வடக்கே ராமானுஜரின் பிரபாவம் குறித்து உரையாடியபோது அவர் என்னை  ‘ஸ்ரீ ஸம்பிரதாயத்தின் வரலாறு’ என்ற ஹிந்தி புத்தகத்தை படிக்கச் சொன்னார். அதன் பிரதி ஒன்றினைப் பெற்று படித்தால் அப்புத்தகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் ராஜஸ்தானில் தோன்றிய ஸ்ரீ அருளித்தாச்சார்யன் என்பவர். இவர் முறையாக ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை பெற்று,  பீடமாகக் கொண்டுள்ள ஸ்ரீ வித்யா பீடத்திற்கு ஆச்சார்யன். இந்த பீடம் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில்  பல ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களை செம்மையாக  நிர்வகித்து வருகிறது.

ஸ்ரீ அளிருத்தாச்சாரியார் சாஸ்திரங்கள் கற்றபின் தெற்கே திருப்பதி வந்து அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்களிடம் முறையாக ஸ்ரீ வைஷ்ணவ கிரந்தங்கள் காலக்ஷேபம் செய்துள்ளார். இவரது நீண்ட ஆராய்ச்சியின் பலனாக உருவானதே  ‘ஸ்ரீ சம்பிரதாய வரலாறு’ என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் பொதுவாக வைஷ்ணவ தர்மம் பற்றியும் பிறகு அந்த வைஷ்ணவ தர்மம் எவ்வாறு  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆச்சார்யார்களால் போற்றி வணங்கப்பட்டது என்பதையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவத்தில் பிரபலமாக விளங்கிவரும் வடகலை தென்கலை சம்பிரதாயம் பற்றிய விவரமான ஆராய்ச்சியும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

கடந்த முந்நூறு ஆண்டுகளாக ஸ்ரீ வித்யாமடம் இயங்கி வரும் சாந்தோத் சென்றோம். இது ஒரு குட்டி காசியாக விளங்குகிறது. நர்மதையின் ஒரு உபநதி இங்கு ஓடுகிறது. ஸ்ரீ சக்ரபாணி படித்துறை விசேஷமாக உள்ளது. ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் போல் இங்கு அமாவாசை மற்ற புண்ய காலங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.

ஸ்ரீ சக்ரபாணி தீர்த்தக் கரையில் ஸ்ரீ வித்யா பீடத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பாலாஜி  மந்திர் ஒன்று உள்ளது. அருகிலேயே சேஷ சாயி கோயில் உள்ளது. இங்குள்ள பெருமாள் பள்ளிகொண்ட பெருமானாகக் காட்சியளிக்கிறான்.

இது தவிர இப்போது ஸ்ரீ வித்யா பீடாதிபதியாக விளங்கும் ஸ்ரீ வேங்கடாச்சாரியார் தனது குரு ஸ்ரீ அளிருத்தாசார்யார் நினைவில் வேத பாடசாலை நடத்தி வருகிறார். இதில் ஏறத்தாழ முப்பது மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவும் உறைவிடமும் இலவசம்.

அத்துடன் கூட ஸ்ரீ வித்யா பீடத்தின் நிர்வாகத்தில் உள்ள பாலாஜி மந்திரும் உள்ளது. துவஜஸ்தம்பத்துடன் கூடியதாக விசாலமாக உள்ளது இக்கோயில். இங்குள்ள பெருமாளும் கண்கள் திறந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
சாந்தோதிலிருந்து கிளம்பி பரோடா வரும் வழியில் டபோய் என்ற சிற்றூர் உள்ளது. இங்கு பல கோயில்கள் உள்ளன.

சவாய் பாலாஜி மந்திர் என்பது மைசூர் பரகால மட சம்பிரதாயத்தைச் சார்ந்ததாகும். இதை நிர்வகிப்பவர்கள் கன்னடம் பேசும் ஸ்ரீ வைஷ்ணவக் குடும்பமாகும். சுமார் மூன்று தலைமுறைக்கு முன் மைசூரிலிருந்து வந்து இங்கு குடியேறிய இவர்களது மூதாதையர் வேத வேதாந்தத்தில் சிறந்து விளங்கினர். டபோய் பிரதேசத்தை ஆண்டு வந்த மன்னன் அவர்களை ஆதரித்து நிலமும் தானமாக வழங்கியுள்ளார். இது ஒரு விசாலமான மாளிகை. பழங்காலக் கட்டிடம். அதில் ஒரு பகுதி கோயிலாக உள்ளது. இங்குள்ள பாலாஜியின் கண்கள் திறந்தவண்ணம் உள்ளன. மத்தியப் பிரதேசத்திலிருந்து முறையாக தீக்ஷை பெற்ற வைஷ்ணவர்கள் வந்து பூஜை செய்து வருகின்றனர்.

விசேஷ உற்சவம் பற்றி அவர்களிடம் கேட்டபோது ஹிந்தி பாஷையில்  ‘சப்பன் போக்’ எப்போது நடைபெறும் என்றேன். அதற்கு அவர்கள் மிகவும் நிதானமாக தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ‘அன்னக்கூடை’ உற்சவம் நடைபெறும். அதுதான் சப்பன் போக் என்றார்கள். ஜெய்ப்பூரில் கேட்ட ‘கோஷ்டி விநியோகம்’ போல் இந்த ‘அன்னக்கூடை’ சப்தம்  ஸ்ரீராமானுஜரின் சம்பிரதாயம் எவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் பாரதம் முழுவதும் பதிந்துள்ளது என்பதை உணர்த்தியது.

டபோயில் தென்கலை சம்பிரதாயத்தை பின்பற்றும் ஸ்ரீநாராயணன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயில்களில் பின்பற்றப்படும் ஆராதனக்கிரமம் ஸ்ரீ வைஷ்ணவரால் புனருத்தாரணம் செய்யப்பட்ட பஞ்சராத்திர முறையாகும்.

பரோடாவில் வசித்துவரும் தமிழக அன்பர்களுடன் ராமானுஜரின் பிரபாவத்தைப் பற்றி பேசி வரும்போது குஜராத் -மத்தியப் பிரதேசம் சந்திக்கும் இடமான அலிராஜ்பூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் கோயில் பற்றி கேள்விப்பட்டோம்.  குஜராத் எல்லையில் உள்ள சோட்டா உதயபூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ளது இந்த ஊர். சோட்டா உதயபூர் உதயபூர் போல் பெரிதாக இருக்கும். அலிராஜ்பூர் ஒரு சிறிய ஊராக இருக்கக்கூடும் என்ற கண்ணோட்டத்தில் பயணம் செய்தோம். ஆனால் அனுபவம் அதற்கு நேர்மாறாக இருந்தது. சோட்டா உதய்பூர் ஒரு சிறிய ஊராகவும், அலிராஜ்பூர் ஒரு ஜில்லா கேந்திரமாகவும் விளங்குவதைப் பார்த்தோம். இந்த இடம் அதிகமாக வனவாசிகள் இருக்கும் பகுதியாக விளங்குகிறது.

அலிராஜ்பூர் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, ஸமஸ்தானத்தை ஒத்து விளங்குகிறது. சுதந்திரத்திற்கு முன் சுதேச ராஜாக்கள் வசித்து வந்த விசாலமான அரண்மனை இப்போது பழுதடைந்து காணப்படுகிறது.

ஊரில் தென்கலை சம்பிரதாயத்தைச் சார்ந்த ஆசார்ய மந்திர் என்று அழைக்கப்படும் கோயில் உள்ளது. ஸ்ரீ வேங்கடேச பகவான், ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் எழுந்தருளியிருக்கின்றனர்.

இதுதவிர ராஜகோபுரம், த்வஜஸ்தம்பத்துடன் கூடியதாக ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்வாமி கோயில் விளங்குகிறது. இது வடகலை சம்பிரதாயக் கோயில். ஸ்ரீ வித்யா பீடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.  கோயில் அர்ச்சகர் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில் அர்ச்சகர்களின் வடிவிலேயே இருப்பதைப் பார்த்து நண்பர்கள் வியந்து போனோம்.

பெருமாள் பெயர் லக்ஷ்மி நரசிம்மர். ஆனால் அவர் தெற்குப் பக்கத்தில் காட்சியளிப்பது போல் லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கவில்லை. நின்ற திருக்கோலத்தில் தனியாகவே காட்சியளிக்கிறார். வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அவரது நாக்கே அவரது நரசிம்ம சொரூபத்திற்கு அடையாளமாக விளங்குகிறது.

குஜராத் - ராஜஸ்தான் முதல் அஸாம் வரையில் உள்ள பிரதேசத்தில் இன்னும் ஏராளமான ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்கள் இருக்கக்கூடும்.

மனிதனாகப் பிறந்து அதுவும் ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள் தோன்றிய தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து ராமானுஜர் காட்டிய நெறியில் வாழ முயன்று வருகின்ற அனைவரும் உடையவரின் வாழ்வும் பணியும் எந்த அளவுக்கு ஆழமானதாகவும் அகலமானதாகவும் அமைந்திருந்தன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.நன்றி: விஜயபாரதம்- ஸ்ரீ ராமானுஜர் 1000 சிறப்பிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக