வியாழன், 29 செப்டம்பர், 2016

ஸ்ரீ ராமானுஜர் பாதையில் சங்கம்...

-பேரா. கே.குமாரசாமிசுவாமி விவேகானந்தர், திலகர், மகாகவி பாரதி போன்ற எண்ணற்ற மகான்களின் தேசிய, சமுதாயக் கருத்துக்களை ஒட்டியே ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது என்பது குன்றிலிட்ட விளக்கு போன்றதாகும்.
அதுபோல வைஷ்ணவ ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜரின் பல்வேறு சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல.

இன்று நிலவும் பல சமுதாயப் பிரச்சனைகளை அன்றே அவர் எதிர்கொண்டுள்ளார். அவர் வழியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. இக்கண்ணோட்டத்தில் சிலவற்றை இங்கு ஆராய்வோம்.


சமுதாய நல்லிணக்கம்:

சமூக வாழ்க்கையில் பொருளாதார அடிப்படையில் மட்டுமே ஜாதி பிரிவினைகள் இருக்கலாம். ஆனால், ஆன்மிகப் பார்வையில் அனைவரும் சமம் என்பது ஸ்ரீ ராமானுஜரின் வாதம்.

பிராமணரான அவர் ஆற்றுக்கு நீராடச் செல்லும்போது தன் மருமகன் தாசரதியுடன் செல்வார். நீராட்டங்கண்ட பிறகு, அவர் தனுர்தாஸரின் தோளைப் பிடித்துக்கொண்டு கரையேறுவார். அப்போதுதான் ஆத்ம ஸூத்தியைக் கொள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கை.

சமூகம், மதம் சார்ந்த குழப்பங்களை அகற்ற சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைளை ஒழுங்குபடுத்தி ஸ்ரீவைஷ்ணவத்திற்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தைத் தமது ஸ்ரீபாஷ்யத்தில் தந்துள்ளார்.

ஜாதி, சமய வேறுபாடு கருதாமல் அனைவரும் பயனுற திவ்யப்பிரபந்தத்தைக் கோயில்களில் பாராயணம் செய்ய ராமானுஜர் ஏற்பாடு செய்தார். எல்லோரும் இதன்மூலம் அறிவொளி பெற முடிந்தது.

யதிசைவம் என்னும் திருத்தலத்தில் ஒரு கோயில் நிர்மாணிக்கும் பணியில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும் ஹிந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக சேர்த்துக்கொள்ளபட்டனர். கோயில்களின் உள்ளே செல்ல இவர்களுக்கு அனுமதி இருந்திருக்கவில்லை. ராமானுஜர் அதை மாற்றி பலிபீடம் வரை செல்லவும், திருக்குளங்களில் நீராடவும் வகை செய்தார்.

ஒருநாள் ஒரு துணி வெளுப்பவன் அழகிய மணவாளனுடைய ஆடைகளைத் துவைத்து நேர்த்தியாக சலவை செய்து ராமானுஜரிடம் காட்டினான். மிக்க மகிழ்ச்சியடைந்த ராமானுஜர் அவனது கையைப் பற்றிக்கொண்டு பெரிய பெருமாள் சன்னிதிக்கு அழைத்துச்சென்று பெருமாளின் அருளைப் பெற்றுத் தந்தார்.

ராமானுஜர், பஞ்சமர்கள் பின்பற்றுவதற்கு சில சட்டதிட்டங்களையும் வகுத்தளித்தார். தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் மறுமலர்ச்சி என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ராமானுஜர் மூலம் செயல்முறைக்கு வந்துள்ளது.

அதைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் பூஜ்ய மோகன்ஜி பாகவத்,  ‘கோயில், நீர்நிலை, மயானம் என்பவை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி வருகிறார்.

 ‘சாமாஜிக் சமரஸதா’ என்ற அமைப்பின் மூலம் அகில பாரத அளவில் சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது.
ஒரு எடுத்துக்காட்டு: பண்ருட்டி அருகே திருவதிகையில் மகாசிவராத்திரி அன்று தலித் சமூகத்தினர் முதல் அந்தணர் வரை அனைவரும் தத்தம் கைகளால் கொன்றைநாதனுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி அற்புதமானதாகும்.

சமுதாய சிந்தனைகள்:

ராமானுஜர் ஒரு வேதாந்தியாக மட்டுமல்ல, சமூகம் தழுவிய பொருளாதாரம், பண்பாடு ஆகியத்துறைகளில் நல்ல சீர்த்திருத்தங்களைச் செய்தார். சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டு, நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாறுதல்களைச் செய்தார். மதக்கோட்பாடுகளும் அதன்வழி பெறப்படும் வேதாந்தக் கருத்துக்களும் மனிதகுல மேம்பாட்டிற்கே என்பது ராமானுஜரின் திடநம்பிக்கையாகும்.

 ‘நான் உபதேசிக்கும் மந்திரத்தை நீ மட்டும் சொல், மோட்சம் கிட்டும். பிறருக்குச் சொன்னால் நரகம் போவாய்’ என குரு திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது,  ‘அனைவரும் உய்வு பெறுவதற்காக தான் ஒருவர் நரகம் புகுந்தால் அது துன்பம் விளைவிக்காது’ என அஞ்சாது கூறியவர் கருணைக்கடல் ராமானுஜர்.

 ‘சாமாஜிக் சத்பாவ்’ என்ற முயற்சியில் சமுதாயத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமைக்கான ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. அதன் விளைவாக சமுதாயச் சீர்கேடுகள் அகன்று, முழு சமுதாயமும் ஒரு குடும்பமாக உருவாகும் சூழல் மெல்ல வந்துகொண்டிருக்கிறது.

சமுதாய சேவை:

சண்டாளன் தொடங்கி வேதங்களைக் கற்றறிந்தவன் ஈறாக அனைவருக்கும் தொண்டு செய்வதே அவரது நோக்கம். ராமானுஜர் கைங்கர்யம் என்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராவார்.

சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவினர் வறுமையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பல சேவைப் பணிகளை ராமானுஜர் மேற்கொண்டார்.

அவர் வழியில் ஆர்.எஸ்.எஸ்-சும் சேவைப் பணிகள் மூலம் நலிவுற்ற மக்கள் உய்வடைய பெரும் முயற்சி செய்துவருகிறது. கல்வி, ஆரோக்கியம், பொருளாதாரம், ஆன்மிகம் ஆகிய  துறைகளில் 1.5 லட்சத்திற்கும் மேலான சேவா காரியங்களை  ‘சேவா பாரதி’ அமைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ். செய்து  வருகிறது.

கல்வி பற்றிய கண்ணோட்டம்:

ராமானுஜர் அனைத்து விழாக்கள், வழிபாடுகள்,  உற்சவங்களிலும் தமிழுக்கு பிரதான இடமளித்தார். திவ்யபிரபந்தம் பாடுவோர் சுவாமிக்கு முன்பும், சமஸ்கிருத ஸ்லோகம் பாடுவோர் சுவாமிக்கு பின்னும் வரச்செய்தவர் ராமானுஜர்.

அதே நோக்கில்,  தரமான கல்வி எளிய முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்வியுடன் வாழ்க்கை மூல்யங்களை குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். குறைந்தது ஆராம்பக்கல்வி தாய்மொழி வாயிலாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மனிதனை உருவாக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். கோடிட்டுக் காட்டி வருகிறது.  ‘வித்யாபாரதி’ என்ற கல்வி அமைப்பு மூலம் கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்து வருகிறது.

* ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் ஓர் அங்கமாக வாழ வேண்டும் என்பது ராமானுஜரின் கருத்து. ஒவ்வொருவரும் ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கம் (ஹிந்து ராஷ்ட்ராங்க பூதா) என ஆர்.எஸ்.எஸ்-சும் கருதுகிறது.

* ராமானுஜரின் பார்வையில் ஸந்யாசம் என்பது தன் ஆளுமைத் திறனைக் கைவிடாமல், சமுதாய முன்னேற்றத்தில் ஒருமனதாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. அதேபோல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் வாழ்வையே வேள்வியாக்கி தேசப்பணியில் ஈடுபட்டுள்ள பிரசாரகர்களையும் வாழ்நாள் சங்க ஊழியர்களையும் காண முடியும்.

* தனிமனிதன் தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொள்வது சரியானதல்ல. பூர்ண சரணாகதி தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பது ராமானுஜரின் கருத்தாகும். அதுபோல் ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபகரும், அவர் வழித் தோன்றல்களும் தங்களை முன்னிறுத்தாமல், லட்சியத்தையும், இயக்கத்தையும் முன்னிறுத்துவதைக் காண முடியும்.

* தேச ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க ஆதிசங்கரர் நான்கு திக்கிலும் சங்கர மடங்களை ஸ்தாபித்தது போல, ராமானுஜர் நாடெங்கும் 74 சிறப்புமிக்க ஆச்சார்ய பீடங்களை ஸ்தாபித்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு பண்பாடு என்ற உணர்வை உருவாக்கி தேச ஒருமைப்பாட்டைப் பேணி வருகிறது.

* ராமானுஜர் வைஷ்ணவ சித்தாந்தத்தை நாடெங்கும் பரப்பியதன் மூலம் முகமதியர்கள் படையெடுப்பு ஓரளவு எதிர்கொள்ளப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-சும் முகமதியர்களின் தவறான மதமாற்றத்தை எதிர்த்துவருகிறது.

* மரபு என்பது நம்மை நம் மூதாதையர்களுடன் இணைக்கும் பாலமாக உள்ளது. தலைமுறைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை இது குறைக்கும். பெருமைக்குரிய பாரம்பரியங்களை நிலைநாட்டுவதில் ஸ்ரீராமானுஜரின் போக்கை ஆர்.எஸ்.எஸ்-சும் கடைபிடித்து வருகிறது.

* நமது நாட்டில் பசுவை கோமாதா என பூஜிக்கின்றோம். ராமானுஜரும் பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். சோழிங்கநல்லூரில் கோசாலை ஒன்றை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கொள்ளிடத்தின் வடகரையில் ஐந்து கிராமங்களை காடாக்கி பசுமந்தைகளைப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவருவதற்கு பெருமுயற்சி எடுத்ததோடல்லாமல்  ‘கோசேவா’ என்ற கதிவிதி மூலம் நாடு முழுவதும் கோசாலைகளை நிறுவி ஆவினங்களைக் காக்க முனைந்து வருகிறது.

ராமானுஜர் சமய தத்துவத்தை உபதேசித்தவர் மட்டுமல்ல, சிறந்த சமுதாய சீர்திருத்தவாதியும் ஆவார். உலகின் குருவாய் பாரதமாகிட உன்னத சக்தி வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் இயக்க வளர்ச்சிக்கு ராமானுஜரின் சிந்தனைகள் வலுவூட்டும் என்பதில் ஐயமில்லை.

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு அன்னாரது கருத்துக்களை மக்களிடம் கொண்டுச்செல்ல அகில பாரத அளவில் சங்கம் முயற்சிப்பது சாலப் பொருத்தம்.


குறிப்பு:
 .
பேராசிரியர் திரு. கே.குமாரசாமி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வட தமிழக துணை செயலாளர்.
 .
நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக