திங்கள், 26 செப்டம்பர், 2016

நல்லதொரு வழிகாட்டி


-ஏ.அப்பாசாமி
இறைவன் அளவற்ற கருணைகொண்டு இம்மையிலும், மறுமையிலும் நன்மையைத் தர எண்ணி மகான்களின் வடிவங்கொண்டு இந்த உலகிற்கு வருகிறார். எனவே இத்தகைய மகான்களின் வரலாற்றைப் படிப்பதால் நமது ஆன்மிகப் பாதை எளிதாகிறது. அவர்களின் பெருவாழ்வும் மேலான உபதேசங்களும் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இத்தகைய அவதார புருஷர்களில் ஒருவர்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்த ஸ்ரீ இராமானுஜர்.

இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமையைச் சாடியவர். தீண்டாமை கூடாது என்பதை தனது வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார்.


உறங்காவில்லி என்பவர் ஓர் அரசு ஊழியர்.  இவர் தனது மனைவியை விட அழகு மிகுந்தவர் இவ்வுலகில் இல்லை என்று கருதி,  எங்கு சென்றாலும் மனைவிக்கு குடைபிடித்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டே செல்வார். இதைக் கண்ணுற்ற இராமானுஜர் அவனை அழைத்துக் கொண்டு போய் ஸ்ரீரங்கம் அரங்கனைக் காட்டினார். அழகிய விரிந்த தாமரை இதழ் போன்ற  அந்த பெரிய கண்களைக் கண்ட உறங்காவில்லி அகமகிழ்ந்து அரங்கனுக்கு அடிமையானார். “தேவரீர் நான் இதுவரை ஒரு மின்மினிப் பூச்சியிடம் மோகம் கொண்டிருந்தேன். இப்பொழுது கதிரவனைக் கண்டு விட்டேன்” என்று இராமானுஜரிடம் கூறி அவரின் சீடரானார். இராமானுஜர் அவனை வாரி எடுத்து ஆரத் தழுவிக் கொண்டார்.

பொன்னாச்சி விலைமகளாக இருந்தும், உறங்காவில்லியை தன் கணவனாக ஏற்று அவன் வழியே இராமானுஜரின் திருவடிகளில் புகலடைந்தாள். 
 
இராமானுஜர் தினமும் காவிரியில் நீராடாச் செல்லும் போது சிறந்த அந்தணச் சீடரான முதலியாண்டானின் கையைப்பிடித்துக்கொண்டு செல்வார். திரும்பும் போது உறங்காவில்லி தாசரின் தோள் மீது கைபோட்டு வருவார். இது மற்ற அந்தணச் சீடர்களுக்கு வருத்தமளித்தது. இதை அறிந்த இராமானுஜர் அந்தணச் சீடர்களுக்கு பாடம் புகட்ட ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி அந்தணச் சீடர்களின் வேட்டிகளைக் கிழிக்கச்செய்து அவர்களுக்குள் சண்டை மூட்டியதையும், உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சியின் நகைகளை கழட்டி வரச் செய்து, அதன் காரணமாக பொன்னாச்சியும் உறங்காவில்லியும் நடந்து கொண்ட முறையிலிருந்து அந்தணச் சீடர்கள் பாடம் கற்றுக்கொண்ட விதத்தையும் படித்தும் கேட்டும் பேரானந்தமடையலாம். இதன் மூலம் இராமானுஜர் சீடர்களுக்கு “அறிவின் பண்பும், உள்ளத்தின் பண்புமே நன்மைக்குக் காரணங்கள், ஜாதி அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என விளக்கிச் சொன்னார்.

இன்னுமொரு நிகழ்ச்சியில் இராமானுஜர் பிறருக்காக தான் எதையும் தியாகம் செய்யக் கூடியவர், சுயநலமில்லாத பெருந்தகை என்பதை நடத்திக் காட்டுகிறார்.

திரு எட்டெழுத்து மந்திரத்தை பொருளுடன் கற்க திருக்கோட்டியூர் நம்பியிடம் 18 முறை சென்றும் நம்பி மந்திரத்தை சொல்லித் தரவில்லை. இராமானுஜர் கதறி அழுகிறார். அதன் பிறகு திருக்கோட்டியூர் நம்பியின் நெஞ்சம் கனிந்து திரு எட்டெழுத்து மந்திரத்தை பொருளுடன் இராமானுஜருக்கு கற்பிக்கிறார். பிறகு “இராமானுஜா இந்த மந்திரத்தை கேட்பவரெல்லாம் இறந்த பின்பு முக்தி அடைந்து வைகுந்தம் செல்வர், சொன்னவர் நரகம் செல்வர், எனவே இதை யாருக்கும் கூறாதே” என்று கூறினார்.

ஆனால் இராமானுஜர் திருக்கோட்டியூர்க் கோவிலின் கோபுரத்தில் ஏறி அவ்வூர் மக்கள் அனைவரையும் கூவியழைத்து ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திரு எட்டெழுத்து மந்திரத்தை உரக்க கூறிவிட்டார். அந்தப் பெரும் கூட்டம் இராமானுஜரோடு சேர்ந்து மூன்று முறை இந்த மந்திரத்தை முழங்கியது.

செய்தி அறிந்த  திருக்கோட்டியூர் நம்பி இராமானுஜரை மிகவும் கடிந்து கொண்டார். அப்பொழுது இராமானுஜர் சொன்னார், “மகாத்மாவே, அடியேன் ஒருவன் கடும் நரகத்திற்குச் சென்று வருந்த இதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வைகுந்தம் சென்று இன்புறுவார்கள் என்றால் இந்தப் புண்ணியம் தங்களுக்குத்தானே சுவாமி சேரும்”, எனச் சொல்லி திருக்கோட்டியூர் நம்பியவர்களின் கோபத்தைத் தணிக்க, நம்பி  இராமானுஜரை அன்போடு அணைத்துக்கொண்டார்.

ஸ்ரீ இராமானுஜர் எளிமையின் உறைவிடம், ஏழையோடு கூடியிருப்பதிலே இன்பம் காண்பவர் என்பதை இன்னொரு நிகழ்ச்சியின் மூலம் நிகழ்த்திக்காட்டுகிறார்.

ஒருமுறை இவருடைய பணக்கார பக்தர் யஜ்ஞேசர் இவரை விருந்துண்ண அழைத்திருந்தார். ஆனால் அநத் பணக்கார பக்தர் தன் வீட்டுக்கு வந்த இராமானுஜரின் சீடர்களிடம் நடந்து கொண்ட விதம் இராமானுஜருக்குப் பிடிக்காததால் அவர் தன்னை நீண்ட நாள் அழைத்துக்கொண்டிருந்த ஏழை அந்தணர் வரதாசாரியார் வீட்டுக்குச் செல்கிறார். இவர் ஏழைதான், ஆனால் விதுரரைப் போல் தூய இயல்புடையவர்.

இவர் தினமும் காலையில் பிட்சைக்குச் சென்று கிடைப்பதைக் கொண்டுவந்து தன் அழகிய தூய மனைவி லட்சுமியுடன் பரமனை வழிபட்டு அதன்பின் உண்பார்கள்.

ஸ்ரீ இராமானுஜர் அந்த ஏழை வீட்டுக்குச் சென்ற நேரம் வரதாசாரியர் பிச்சைக்கு வெளியே சென்றிருந்தார்.  உடுத்திய ஒரே துணியுடன் இருந்த லட்சுமி ஸ்ரீ இராமானுஜரையும் அவரது சீடர்களையும் வரவேற்று உபசரித்த பாங்கினையும், வீட்டில் ஒரு பருக்கைகூட இல்லாதிருந்த நிலையில், இந்த  எலும்பும், இரத்தமும், சதையும், அழுக்கும் நிறைந்த உடல் மீது ஆசைப்பட்ட பணக்காரச் செட்டியாரிடம் சென்று, பண்டங்களைப் பெற்று, கலியனின் தொண்டைக் கண்டு களிப்புற்ற பரமன், “எனக்காகச் செய்த பாவமும் புண்ணியமாகும்” என்ற வாக்கை மனதில் எண்ணி, பல்சுவை உணவை வேகமாகச் சமைத்து யதிராஜருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவளித்த பாங்கினையும், இதற்கும் மேல் பிச்சை எடுத்து வந்த வரதாசாரியார் மனைவியின் மிகச் சிறந்த, ஒப்பிடமுடியாத தியாகச் செயலைக் கண்டு மிகவும் பேருவுகையடைந்து. ‘என் தேவியே நீ  இன்று உன் கற்பிற்கு மிகச் சிறந்த சான்றளித்திருக்கிறாய்’ எனக் கூறி அவள் கையைப்பிடித்து இராமானுஜரின் பாதங்களில் வீழ்ந்து ஆசி பெற்றதையும், நடந்ததைக் கேட்டு இராமானுஜரும், சீடர்களும் பெரு வியப்புற்றதையும், எல்லாவற்றிற்கும் மேலே வரதாச்சாரியார் தன் மனைவியை அழைத்துக்கொண்டு பணக்காரச் செட்டியாரிடம் சென்ற பொழுது அவர் லட்சுமி நாச்சியாரைத் தனது தாயாராகக் கருதி கண்ணீர் வடித்ததும், பிறகு செட்டியார் யதிராஜருக்குச் சீடராக மாறியதும் இன்னும் பல அரிய நிகழ்வுகளையும், ஸ்ரீ இராமானுஜரின் வாழ்வில் காணலாம்.

ஸ்ரீ இராமானுஜருடைய அற்புதமான இந்த வாழ்க்கை, உபதேசம், செயல்முறை ஆகியவை பற்றி பல புத்தகங்கள் வந்திருந்தாலும் நமது ஸ்ரீ சுவாமி இராமகிருஷ்ணானந்தர் தனது   ‘ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தக்த்தில் மிக அற்புதமாக ஆதாரங்களோடு விவரித்துள்ளது நாம் ஒவ்வொருவரும் படித்து பேரானந்தமடைய வேண்டிய ஒன்றாகும். இது நமது கடமையுமாகும்.


குறிப்பு: 
 .
திரு. ஏ.அப்பாசாமி, கோவை- பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் (ஓய்வு).கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக