ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஸ்ரீவைணவத்தின் அடிப்படை தத்துவங்கள்

-ஜி.ஆளவந்தார்
ஸ்ரீவைணவத்தின் அடிப்படையான தத்துவங்கள் மூன்று எனலாம். அவை:

1. சித்து அல்லது ஜீவாத்மா. இது ஞானமாய் விளங்குகிறது, அழிவற்றது, எம்பெருமானுக்கே அடிமையாக அமைந்தது.

2. அசித்து அல்லது இயற்கை. இது அறிவற்ற பொருள். இது உருவ வேறுபாடுகளுக்கு உட்பட்டது. இது பிரகிருதி – உலகம் – எனவும் கூறப்படுகிறது. இதுவும் அழிவற்றது.

3. ஈசுவரன் அல்லது பரம்பொருள். சித்தையும் அசித்தையும் உடலாகக் கொண்டு, தனக்கு மேல் வேறொரு பொருள் இல்லாத பரம்பொருளாய், பரப்பிரம்மமாய்த் திகழும் இறைவனான க்ஷமத் நாராயணன் ஒருவனே ஈசுவரனாவான். உலகம் யாவையும், தாம் உள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையவன் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பரால் புகழப்பட்ட இவன் அகில புவன நாயகன். அளவற்ற கல்யாண குணங்களையும், பேரொளிமிக்க திவ்விய மங்கள சொரூபத்தையும் உடையவன். இடத்தாலும் காலத்தாலும் பிறவற்றாலும் அளவிடற்கு அரியவன். ஆயிரத்தெட்டு நாமங்களைக் கொண்டவன் ஸ்ரீமத் நாராயணன். இந்த மங்கள சொரூப கல்யாண குணங்கள் அனைத்தும் பரம் பொருளின் (ஸ்ரீமத் நாராயணனின்) விசேஷணங்கள் (அதாவது குணத்தை விளக்கும் அடைமொழிகள்). பரம்பொருள் இந்த விசேஷணங்களைக் கொண்ட விசேஷியம் (அதாவது அடையை அடைந்த பொருள்). இந்த விசேஷணம், விசேஷியம் இணைந்த கூட்டுக்கு விசிஷ்டம் (மேன்மையுள்ளது) என்று பெயர். இந்த விசிஷ்டத்துக்கு மேலாக வேறொனுற்மில்லை. இந்த விசிஷ்டத்துடன், மேன்மைச் சிறப்புடன், திகழும் அத்வைதம் தான் இராமானுஜருடைய விசிஷ்டாத்துவைதம்.

குறிப்பு:
திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய  ‘புரட்சித் துறவி இராமானுஜர்’ புத்தகத்திலிருந்து.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக