வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்


-ம.கொ.சி.இராஜேந்திரன் “ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளம்”- என்பது மகாகவி பாரதியின் கூற்று. நம் பாரத தேசத்தின் அறிவுக் கருவூலமாக பெரியோர்கள் செய்த இலக்கியங்கள் -வேதம், உபநிடதம், அவற்றை ஒட்டிய ஆய்வு நூல்கள், அறநூல்கள், அருள் நூல்கள், தத்துவ சாத்திர நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனத் தொடர்கின்றன. தாங்கள் இறையருளால் பெற்ற ஞானத்தை மாணவர்களுக்கு போதித்தார்கள். ஆச்சார்யர்களிடமிருந்து அதற்கான நடைமுறைகளை பாரம்பரியமாகக் காப்பாற்றி வந்தார்கள். சிலர் மடங்களை ஸ்தாபித்ததன் மூலம்; சிலர் நூல்களைப் படைத்ததன்மூலம்; சிலர் போதனைகள் மூலம்; சிலர் சமுதாயத் தொண்டுகள் மூலம்; சிலர் இயக்கங்களையே தோற்றுவித்து நம் தேசத்தின் ஞானப் பரம்பரையை காத்து நின்றனர். இவ்வகைக்கு நல்லதோர் உதாரணம் என்றால் குருநானக், குரு கோவிந்தசிங், ஸ்ரீ இராமகிருஷ்ணர், தமிழகத்தில் வள்ளலார் போன்றோரைச் சொல்லலாம்.

பாரத தேசத்துப் பண்பாடு தெளிந்த நீரோடையைப்போல ஓடிக் கொண்டிருக்க, மேற்சொன்ன ஞானிகளும், கற்றறிந்த சான்றோர்களுமே அந்நீரோட்டத்திற்கு வற்றாத ஊற்றுக் கண்களாய் விளங்குகின்றனர் என்றால் மிகையில்லை.

அத்தகு ஞானிகளின் வரிசையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்த ஸ்ரீ இராமானுஜர், நாம் என்றென்றும் வணங்கத்தக்கவராவர். அதைப்போலவே தனது அறிவுக் கூர்மையாலும், தொலைநோக்குக் கொண்ட சிந்தனையாலும் நம் நாட்டிற்கு 138-வது ஸ்மிருதியை எழுதிய ‘நவீன மனு’ அண்ணல் அம்பேத்கரும் நாம் என்றென்றும் நினைவில் கொள்ளத் தக்க பெருந்தகையாளராவர்.

இவ்விரு சான்றோர்களின் வாழ்க்கையில் காணும் சிந்தனைகள் மற்றும் செயல்வடிவங்களிலான ஒற்றுமை, பார்வைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.


குருவே போற்றிய சீடர்கள்

ஸ்ரீ இராமனுஜர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தப் பயிற்சியும், திருக்கச்சி நம்பிகளிடம் தெய்வப் பணியும், பெரிய நம்பியிடம் ஆழ்வார்களின் பிரபந்தங்களையும், திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யார்த்தங்களையும், திருமலையாண்டானிடம் திருவாய்மொழி வியாக்கியானத்தையும், திருவரங்கப் பெருமாளரையரிடம் சரமோபாயத்தையும், பெரிய திருமலைநம்பியிடம் ராமாயணத்தையும் கற்றுத் தெளிந்தார்.

பல நதிகளாய் ஓடிவரும் நீர்ப்பெருக்கம், இறுதியில் கடலாய் நிறைந்து காணப்படுவதைப் போலே பல ஆச்சார்யர்களிடம் கற்று, தெளிந்த, திருந்திய ஞானநதிகள் ஸ்ரீ இராமானுஜரிடம் பெரும் ஞானச்கடலாய் பொங்கின.

தம் ஆச்சார்யர்களிடமிருந்தே வாழ்த்துக்கள் பெற்றதோடு, யாதவப் பிரகாசமும், பெரிய நம்பிகளும் ஸ்ரீ இராமானுஜருக்கு சீடர்களாய் மாறி பாடம் கற்றதும் சீடனின் பெருமையை பறைசாற்றும். திருக்கோட்டியூர் நம்பி ‘எம்பெருமானரே!’ என்று ஆரத்தழுவி இராமானுஜரை கொண்டாடியதும் சிறப்பே.

அவ்வாறே பீமாராவ் என்ற மாணவனுக்கு பின்னாளில் ‘அம்பேத்கர்’ என்ற பெயரே அடையாளமாகிப் போனதே, தம் வாழ்வின் முன்னேற்றத்தற்கு அடித்தளமிட்ட ஆசிரியருக்கு அம்பேத்கர் செய்த நன்றிக்கடனாகும்.

வேற்று ஜாதி ஆசிரியர்களிடம் பாடம் கற்ற மாணவர்களான ஸ்ரீ இராமானுஜரும் அம்பேத்கரும் தங்களின் வாழ்வில் ஞானஒளி யேற்றிய ஆசிரியர்களை என்றும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞானபக்தியுடன் வணங்கினர்; அவர்களே மெச்சும்படியாக, வணங்கும்படியான கர்மவீரர்களாய் இருவரும் திகழ்ந்தனர்.

தியாகமயமான வாழ்க்கை

தனது துணைவியார் ஜாதி காரணமாக திருக்கச்சி நம்பியை அவமதித்ததும், ‘பசி’ என்று வந்த ஏழைக்கு அன்னமிட மறுத்ததும், பெரியநம்பியின் ‘மனைவியை மனம் நோகச் செய்ததும் ஸ்ரீ இராமானுஜரை வருந்தச் செய்தன. தனது லட்சிய வாழ்க்கைக்கு இடையூறாய் இல்லறத்தாள் இருப்பதைக் கண்டு பேரருளாளரான இறைவனிடம் முறையிட்டார். இறுதியில் தாம் கொண்டுள்ள வைணவ சம்பிரதாயத்தின் மேம்பாட்டுக்காக துறவறத்தை தனது 32-ஆம் வயதிலேயே (கி.பி.1049) மேற்கொண்டார். அதனால் ‘யதிராஜன்’ ஆனார். மேலும் தம்மை கொலை செய்ய முயற்சித்த குருவான யாதவப் பிரகாசரிடமே தொடர்ந்து பாடம் பயின்றார். பின்னாளில் அவரே மனமுவந்து இராமானுஜரிடமே சீடருமானார்.

அம்பேத்கரும் சாதிக் கொடுமைகளால் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். அவரது குடும்பம் இராமானந்தர் - கபீர் பக்தி மார்க்கத்தில் வந்தமையால் சகிப்புத்தன்மையுடன் அவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பக்குவமுள்ளவராகவும் விளங்கினார். மாட்டுவண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டமை, பள்ளியில் ஒதுக்கப்படுவது, பணிபுரிந்த இடங்களில் தீண்டாமையால் அவமானப்படுத்தப் பட்டதை அனுபவங்களாகவே கொண்டிருந்தவர் அம்பேத்கர்.

தான் அனுபவித்த சாதிக் கொடுமைகளினால் சற்றும் மனம் தளராது தான் பிறந்த குலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சமர்ப்பண மனப்பான்மையுடன் பாடுபட்டார் அம்பேத்கர்.

சமத்துவ உணர்வை வலியுறுத்தியும், வாழ்ந்தும் காட்டியதால் வைதீகர்களில் சிலர் இராமானுஜரைக் கொல்லவும் திட்டமிட்டனர். பிச்சைக்குச் செல்லும்போது அர்ச்சகர் ஒருவரின் மனைவி மூலமாக நஞ்சு கலந்த உணவை இட, அவளது கண்ணீரும் குறிப்பும் உணர்ந்த உடையவர், அவ்வுணவை காவிரியில் கொட்டிவிட்டு, பல நாள் உண்ணாமல் பட்டினி கிடந்தார். சோழ மன்னன் கிருமி கண்ட சோழனின் ஆணையால் தன்னுயிர் காக்க கூரத்தாழ்வாரும், பெரிய நம்பியும் இரு கண்களை இழந்ததும் இராமானுஜருக்கு சொல்லொணாத் துயரத்தைத் தந்தது. வெள்ளுடை அணிந்து நீலகிரிக் காடுகளின் வழியே இன்றைய கர்நாடக மாநிலத்திற்குச் சென்றார்.

காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது மேல் சாதியினரால் கொலை முயற்சி நடத்தப்பட்ட போதும், அஹிம்சை முறையிலேயே தம் மக்களை அமைதியுடன் வழி நடத்தினார். படித்த மேதாவிகளாலும், காங்கிரஸ் தலைவர்களாலும் பலமுறை அவமதிக்கப்பட்டாலும் தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடாது, தன்னம்பிக்கையுடன் தலைமை தாங்கும் ஆளுமைப் பண்புடன் மிளிர்ந்தவர் அம்பேத்கர்.

தீண்டாமையை ஒழித்த தவசிரேஷ்டர்கள்

இராமானுஜர் வைணவத்தை கருவியாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமையை வேரறுத்தார். எல்லாத் தரப்பு மக்களையும் இணைக்கும் ஒரு தளத்தில் கொண்டுவரும் இயக்கமாகவே தனது ஆன்மிகப் பயணத்தை நடத்தினார்.

இன்றைய மேல்கோட்டை (அன்று திருநாராயணபுரம்; கர்நாடக மாநிலம்) என்னும் ஊரில் அருகிலுள்ள தொண்டனூரைச் சேர்ந்த ஹரிஜன மக்களைக்கொண்டு காடு வெட்டினார்; நகர் உருவாக்கினார்; கோயிலை எழுப்பினார்; வழிபாடுகளையும், திருவிழாக்களையும் முறைப்படி செய்வித்தார். ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு அடித்தளமிட்ட ஆன்மிகப் புரட்சியாளரான ஸ்ரீஇராமானுஜர், தொண்டனூரிலேயே ‘மோதி தலா’ ஏரி அமைவதற்கும் காரணமாயிருந்தார். அங்கே எழுநூறு மடங்கள் உருவாகின. 52 சீடர்கள் உருவாகினர். ஜாதி, செல்வம், கல்வி என்னும் மூன்று மும்மலங்களால் மனம் அழுகிப் போன சமுதாயத்தை அன்பு, அறிவு, அருள் எனும் மூன்று அருவிகளால் தூய்மைப்படுத்திய துறவிதான் இராமானுஜர்.

நகைகளைக் களவாடி வருமாறு சீடர்களைப் பணித்ததன் மூலம் ‘தாழ்குலச் சீடரான’ உறங்காவில்லிதாசரும், அவர் மனைவி பொன்னாச்சியும் ‘மாமனிதர்கள்’ என்ற உண்மையை உலகிற்குப் புரிய வைத்தவர் இராமானுஜர். ‘திருக்குலத்தார்’ என்றே ஒதுக்கப்பட்டவர்களுக்குப் பெயரிட்டுப் பெருமை சேர்த்தார்.

திருக்குலத்திலே பிறந்த மாறனேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணரான பெரியநம்பிக்கு ஆதரவளித்ததோடு, அவர்தம் திருவடிகளைத் தொட்டு வணங்கி வாழ்த்தியவர் ஸ்ரீ இராமானுஜர்.

தம் இளம்வயதிலேயே வேற்று ஜாதியரான திருக்கச்சி நம்பிகளை ஆச்சார்யராக ஏற்றதன் மூலம் எல்லோரையும் ஓர் குலமாகவே அணுகியவர்.

அண்ணல் அம்பேத்கரும் சாதி வேற்றுமைகளால் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளானபோதும் மக்களிடையே பிரிவினையை, வெறுப்புணர்வை வளர்க்காது நல்லிணக்கத்தையே விதைத்தார். பொறுமையுடன், அளவு கடந்த பக்குவத்துடன் இந்து மதத்திலுள்ள தீண்டாமையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளைக் கையாண்டார். இந்து சமூகத்தைத் சீர்திருத்திட தனது அறிவுத் திறமையைம், கடும் உழைப்பையையும் நல்கினார்.

இந்துசமுதாயத்தை சீர்திருத்தும் நோக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்ததே ‘இந்து சட்ட மசோதா’. இம்மசோதாவை மூன்று நோக்கங்கங்களை மையமாகக் கொண்டே உருவாக்கினார். இந்துக்களிடம் உள்ள குறைகளை, பழுதுகளை சரிப்படுத்துவது; இந்து மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம்; அடிப்படையான உரிமைகளை அனைவருக்கும் நிலைநாட்டுவது" என்ற 3 நோக்கங்களைக் கொண்டே இந்தச் சட்டத்தைத் திருத்தி 1948-ஆம் ஆண்டு அக்டோபரில் அரசியலமைப்பு சட்ட அவையிடம் அளித்தார்.

‘இந்தியர் அனைவரும் சமயம், இனம், சாதி, பால், பிறப்பிடம் போன்ற காரணங்களால் பாகுபடுத்தப்படாமல் அடிப்படை உரிமைகள் அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்பட இம்மசோதா வழிவகுத்தது. துரதிர்ஷ்டவசமாக இச்சட்டம் நிறைவேற்றப்படாமலேயே நின்றுபோய்விட்டது.

இச்சட்டத்தின் மூலம் தன் வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையை, தேசிய சிந்தனையை, நன்கொடையை, உயர்ந்த பார்வை தனக்குள் பொதிந்து கிடந்ததை வெளிப்படுத்தினார் அம்பேத்கர்.

ஹிந்து மகா சபையின் தலைவரான வீரசாவர்க்கரும், அண்ணல் அம்பேத்கரும் இந்து மதச் சீர்திருத்தத்திற்கும், தீண்டாமை ஒழிப்பிற்கும், அரசியல் விடுதலைக்கான போராட்டங்களில் ஒரே சமமான நோக்கங்களையும், பார்வையும் கொண்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்ணலின் பொன்விழாவின் போது (கி.பி.1942) போது, “அம்பேத்கரின் சிறந்த ஆளுமையும், மேதைத் தன்மையும், வழிநடத்திச் செல்லும் திறமையும், மக்களை அணிதிரட்டும் ஆற்றலும் அவர் இந்நாட்டின் பெறற்கரிய பெருஞ்செல்வம் என்பதை மெய்ப்பிக்கின்றன. தீண்டாமை ஒழிப்பில் அம்பேத்கர் ஆற்றியுள்ள அரும்பணி, மதிப்பிட முடியாத தாகும். கோடிக்கணக்கான தீண்டத்தகாத மக்களிடம் பொங்கும் தன்னம்பிக்கையை ஊட்டியவர் அவர். அவரது இவ்வரிய செயல்கள் நாட்டுப்பற்றையும், மானுடநேயத்தையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டவையாகும்" என்று வியந்து பாராட்டுகிறார் வீரசாவர்க்கர்.

தன் வாழ்நாள் முழுதும் ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காகவே போராடிய அம்பேத்கர் எங்கும் எப்பொழுதும் தன் தேசிய சிந்தனையான ஆன்மிக ஒருமைப்பாட்டின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவராக, உறுதியுள்ளவராகவே விளங்கினார். தேசபக்தியுள்ள தலைவனாக விளங்கியதால் மற்ற தலைவர்களுக்கும் முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டினார்.

இந்துமதத்தின் ஒரு உட்பிரிவாகவே கருதப்படும் பௌத்த மதத்தை தழுவியதும் தன்னை தேச நிர்மாணியாகவே அடையாளம் காட்டிக் கொள்ளத்தான்.

பாரதத் தாயின் இருபெரும் தவப் புதல்வர்கள்

வேதநெறி சார்ந்த வைணவத்தை எளிய மக்களுக்கும் கொண்டு சென்று தேசமெங்கும் ஆன்மிக வெள்ளம் பாய்ச்சி தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தவர் ஸ்ரீ இராமானுஜர்.

ஜாதிய பிரிவுகளால் அல்லலுற்றப் போதிலும் அடிமைப்பட்ட தேசத்தின் விடுதலைக்காக தன் மக்களை இணைத்துக்கொண்டு தன் அறிவாற்றலின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வலுசேர்த்தவர் அண்ணல் அம்பேத்கர்.

தங்களது படைப்புகளில் சமரஸத்தைப் போதித்ததோடு நில்லாமல், தங்கள் வாழ்க்கையிலும் உறுதியோடு கடைபிடித்த இவ்விரு மகான்களும் பாரதத்தாயின் அருந்தவப் புதல்வர்களே.

ஆயிரம் ஆண்டுகள் காணும் ஸ்ரீ இராமானுஜரின் கொள்கைகளும், 125-ஆம் ஆண்டுகள் நிறைவுபெறும் அண்ணல் அம்பேத்கரின் தேசிய சிந்தனைகளும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்குகள்.

அவர்தம் நினைவுகளை, உயர்ந்த எண்ணங்களை நம் மனங்களில் நிலைத்து நிற்கச் செய்வோம்!


குறிப்பு:
 .
இக்கட்டுரை, தேசிய சிந்தனைக் கழக வெளியீடான ‘ஆச்சார்யர் இராமானுஜரும் அண்ணல் அம்பேத்கரும்’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையாகும்..
 .
 திரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பளர்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக