வியாழன், 22 செப்டம்பர், 2016

ஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்

-எம்.என்.எஸ்.


பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். அங்கு சரஸ்வதி பண்டாரம் என்ற ஸ்தாபனத்தில் இருக்கும் விருத்தி கிரந்தத்தைக் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் எழுத முற்பட்டார். அதற்கு தமது சீடரான கூரத்தாழ்வானுடன் சென்றார்.

எனினும் பிற சமயவாதிகளின் எதிர்ப்பால் அவரால் விருத்தி கிரந்தத்தை சில நாட்கள் கூட, தன் பொறுப்பில் வைத்திருக்க முடியவில்லை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். இதனால் மிக வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வாரிடம் அது பற்றி தமது கவலையை தெரிவித்தார்.

ஆனால் அந்தக் கிரந்தத்தை தாம் இரவு முழுவதும் கண் விழித்து படித்துவிட்டதாகவும் அதை இப்போழுதே தெரிவிக்கவா அல்லது இரண்டு ஆறுகளின் கரைகளின் நடுவில் சொல்லவா என்று பதில் அளித்தாராம். இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம். ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடன் ஆழ்வாரின் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை எழுதி முடித்தார். இதையறிந்த சரஸ்வதி மாதா ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான லஷ்மி ஹயக்ரிவரின் விக்ரஹ மூர்த்தியையும் அவருக்குப் பரிசளித்தாராம்.

அதே ஹயக்ரிவ மூர்த்தி தான் வழிவழியாக ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவார்கள். அந்த லஷ்மி ஹயக்ரிவ மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம்.

நன்றி: தி இந்து ஆன்மிகஜோதி  (08.09.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக