செவ்வாய், 20 செப்டம்பர், 2016

அன்பு என்றால் ராமானுஜரே! ராமானுஜர் என்றால் அன்பே!!

-சந்தக்கவி இராமசுவாமி
உலகத்தில் அன்பு குறைந்து, துன்பு மிகுந்து, அமைதியற்ற சூழலாக உள்ள இக்கலிகாலத்தில் ஸ்ரீ ராமானுஜரை நினைப்பது அருமருந்தாகி, அன்பு தழைக்க வழிவகுத்திடும்.

அன்பு யோகியாகவே வாழ்ந்து காட்டிய அவதார புருஷர் இவரே.

இவரைப் பற்றி நம் காலத்தில் வாழ்ந்து, மறைந்த, பேரறிஞரான ஓஷோ என்ற ஆசார்ய ரஜனீஷ் குறிப்பிடுவது உண்மையானதே. முன்னூறு மதங்கட்கு மேல் ஆய்வு செய்து, பலநூறு நூல்கள் எழுதிய இவர் கூறுவதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இவர் கூறுவது:
தென்னகத்தில் ஸ்ரீ ராமானுஜரிடம் ஒருவன் வந்து,  “எனக்கு முக்தியடையும் உபாயம் கூறுங்கள்’ என்றான். உடனே ராமானுஜர்,  ‘நீ யாரிடமாவது முழு அன்பு செலுத்தியிருக்கிறாயா? அதாவது யாரையாவது முழு அன்புடன் காதலித்திருக்கிறாயா?’ என்றார். 
அவன் திடுக்கிட்டு,  ‘அதிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவதற்காக வந்த என்னிடம் இவ்வாறு கூறுகிறீர்களே; நான் யாரையும் முழு மனதுடன் காதலிக்கவில்லை என்றான். அதற்கு ராமானுஜர் அப்படியானால் உனக்கு மோக்ஷமே ஸித்திக்காது’ என்றார்.
 ‘அதனால் அன்புதான் மோக்ஷத்திற்கு உபாயம்’ என்று ராமானுஜர் கூறியதாகக் கூறியது ஆராயத்தக்கது.

அன்பு என்றால் ராமானுஜரே! ராமானுஜர் என்றால் அன்பே!!

தன்னைக் கொலை செய்ய எண்ணிய யாதவ ப்ரகாசராகிய ‘குருவையே’ திருத்தித் தன் சீடராக ஆக்கியவர் என்றால் அன்பின் வடிவமே ராமானுஜர் என்பது மிகையாகாது.

மேல்கோட்டை, செல்லப்பிள்ளையான விக்ரஹத்தை, டில்லி பாதுஷாவினிடமிருந்து, பெற்று அழைத்து வரும்போது, அவ்விக்ரஹத்திடம் மிகுந்த பிரேமைப்பட்டிருந்த பாதுஷாவின் குமாரி, வருத்தமுற்றுத் தேடி வந்து, பெருமாள் விக்ரஹத்துடன் இரண்டறக் கலந்தது கண்ட ராமானுஜர், திருவரங்கக் கோயிலில், துலுக்க நாச்சியார் சன்னிதி அமைத்து அனைவரும், வணங்க வைத்ததால், சாதி, மதம் முதலியன பார்க்காமல் உண்மையான சமத்துவம் கண்ட அன்பு சொரூபமன்றோ ராமானுஜர்.

தம் சீடருள் ஒருவரான கோவிந்தப் பெருமான் என்பவர் ஒரு சமயம், ஒரு பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ராமானுஜர், ஆஹா! இவருடைய பூத தயை (எல்லா உயிர் மாட்டுமிருக்கும் பேரன்பு) இருந்தது என்னே! என்று கூறியதால், தான் மட்டுமின்றித் தன் அடியவர்களும் சாதி, குலம், உயிர், வேறுபாடற்ற அன்பு காட்டவே வழிவகுத்தமை தெரிகிறதாதலால் தூய அன்பையே போதித்தவர் ராமானுஜர்.

தன் அணுக்கத் தொண்டராயிருந்த, ‘கூரத்தாழ்வான்’ என்பவர் கண்ணிழந்து வருந்தியபோது,  ‘அடியேன் துஷ்கர்மமன்றோ, உமக்கிப்படி வருகைக்கு அடி’ என்று தன் தீவினையினாலேயே உமக்குத் துன்பம் நேர்ந்தது என்றதால், ராமானுஜரின் தூய அன்புள்ளத்தை என்னென்று வியப்பது?

மேல்கோட்டைக்குச் சென்றபோது, அங்குள்ள சமணர் முதலியோரும் இவரிடம் ஆசி பெற்றுத் தூய வைணவரானமை இவரின் அன்பின் ஆகர்ஷண சக்தியினாலன்றோ ஏற்பட்டது. 

தீவிரமாக மதமாற்றம் நடக்கும் இக்காலத்தில், தாமாக முன்வந்து தாய்மதம் திரும்பும்படி செய்த ராமானுஜரின் அன்புதான் உண்மையானது என்பதை உலகத்துக்குணர்த்துகிறதன்றோ!

ஒருமுறை திக் விஜயம் சென்றபோது பலப் பல ஊர்களிலிருந்தவர்களுக்கு, மானுட வாழ்வின் அல்லல் நீக்கும் உபதேசம் செய்து, அவர்கள் விருப்பப்படி, அவர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காராதிகளைச் செய்து ஸ்ரீ வைணவர்களாக்கி உலகையே வைணவம்  என்ற சொல்லுக்குரிய பொருளைக் காட்டினாரன்றோ. 

(ஒருமுறை ஸ்ரீ பட்டரிடம் ஒருவன் சுருக்கமாக ‘வைணவன் என்பவன் யார்?’ என்றான். அதற்கு அவர் ‘பிறர் துன்பங்கண்டு யோசிக்காமல் உடனே துடித்து உதவுபவனே வைணவன்’ என்றாராம்).

வேறொரு சமயம் எம்பெருமானார், ஏழு நாள் உபவாசம் இருந்து, அத்துடன் நடந்து வேடர்கள் வாழும் (திருக்குலத்தார்) மலையருகே சென்றபோது, அவர்களும் கூட நடந்து பட்டினி கிடந்து, இவரையே ஆச்ரயித்தனர். அப்போது வேடர்கள் அளித்த தேனையும் தினையையும் அன்புடன் ஏற்று உண்டு, அவர்களைக் கடாக்ஷித்து, சாதிமத பேதங்கள் இல்லை, அன்பே சத்தியம் என்று வாழ்ந்து காட்டிய மகான் ராமானுஜர்.

(இச்செயல் ஸ்ரீ ராமபிரானின் செயலையே ஒத்து விளங்கிற்று. குகன் தந்த தேனையும், மீனையும் ஏற்ற செயல் போன்றதேயாகும்.  ஸ்ரீ ராமானுஜர் ஆதிசேடன் அவதாரம் என்பதால், பெருமாளின் கூட இருந்தே கண்டறிந்த உண்மையல்லவா இச்செயல்).

எனவே ஆத்மாக்களை இழிவாக எண்ணாதே. உயர்வு தாழ்வு அவற்றுக்கில்லை என்ற வேத வாக்கியப் பொருளறிந்து. அன்பு காட்டி உய்ந்தவரும் உய்வித்தவரும் ஆவார் ராமானுஜர்.

திருக்கோட்டியூர் குருவிடமிருந்து பெற்ற திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையே, தான் நரகு சென்றாலும் பரவாயில்லை; மானுடம் முழுவதும் மோக்ஷமடையட்டும் என்று அம்மந்திரத்தை அறிவித்து, ராமானுஜ தரிசனத்தை அளித்த பேரன்பரன்றோ நம் ராமானுஜர்.

அக்காலத்துத் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட வர்ணத்தவரான (திருக்குலத்தார்) பிள்ளை உறங்காவில்லி தாசன் என்பவர், தம் மனைவியின் கண்ணழகிலே மோகித்து இருந்தபோது, ராமானுஜர் அவரிடம், இதைவிடச் சிறந்த கண்ணழகைக் காட்டுகிறேன் என்று கூறி, ஸ்நானம் செய்வித்துத் திருமண் சாற்றி, திருவரங்கக் கோயிலுள்ளே அழைத்துச் சென்று பெருமாளிடம், கண்ணழகு காட்ட வேண்டினார். பெருமாளும், தன் அழகிய, பெரிய, கரிய, தாமரைக் கண்னைக் காட்டிட, மயங்கிய தாஸர், அன்றுமுதல் பரம பாகவதராகி உயர்வு பெற்றார் என்று கோயிலொழுகு முதலியன கூறுமே.

ஆயிரம் ஆண்டிற்குமுன் கோயிலுள் திருக்குலத்தாரை அழைத்துச் சென்ற முதல் மானிட அன்பர் ராமானுஜரேயாவார்.

எப்போதும் ராமானுஜர் காவிரிக்கு நீராடச் செல்லும் போது அந்தண குலத் தலைவரான முதலியாண்டான் கையைப் பிடித்துக் கொண்டு செல்வாராம். நீராடிக் கரை ஏறிவரும்போது உறங்காவில்லி தாஸரின் (திருக்குலத்தாரின்) கையையே பிடித்துக் கொண்டு வருவாராம்.

காவிரியில் நீராடுவதால் வரும் பரிசுத்தியைக் காட்டிலும் பாவ (ஆடச்திச்) சுத்தியுடைய தாஸரின் கையைப் பற்றி வருவதால் ஏற்படும் பரிசுத்தி அதிகம் எனக் கருதுவார் ராமானுஜர்.

இரும்பைத் தன் ஸ்பரிசத்தாலே பொன்னாக்கும் வேதகப் பொன்னான ஸ்பர்சவேதியைப் போலத் தம் வர்ணாச்ரமங்களில், உயர்த்தியால் உண்டாகக்கூடிய அஹங்காரமாகிய அபரிசுத்தி இத்தாஸரின் கர ஸ்பரிசத்தால் நீங்குவதாகத் திருவுள்ளம் பற்றியவரன்றோ ராமானுஜர். இஃதன்றோ உண்மையான, வேடமற்ற, சமத்துவ நோக்குள்ள அன்பு வாழ்க்கை. இதனாலேயே உறங்காவில்லி தாசருக்கு ‘ராமானுஜ ஸ்பர்சவேதி’ என்ற பெயரே ஏற்பட்டது.

இத்தகு ராமானுஜரையே எங்கள் தவமுனி என உலகம் இன்று புகழ்கிறது. நான் இத்தகு யோகியையே விரும்புகிறேன் என்று கீதையில் கண்ணன் கூறுகிறான்.

கீதையில் ஒன்பதாம் அத்யாயத்தில் 32ம் ஸ்லோகத்தில் ந மேத் வேஷ்யோத்தி" - இவன் சாதி, ஆசாரம், ஸ்வபாவம், அறிவு முதலியவற்றால் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால், என்னை வழிபடும் விஷயத்தில் எனக்கு எவனும் வெறுக்கத் தக்கவனல்லன். இவனிடம் அருவருப்பும் கொள்ள மாட்டேன், கைவிடவும் மாட்டேன், இவனையே தலைசிறந்த யோகியாகக் காண்கிறேன், இவனையே தான் மிகவும் விரும்புகிறேன்" என்றபடி ராமானுஜரே கண்ணனின் அன்புக்குரியவராகிற தவமுனியாம். இதனாலேயே பூர்வாச்சார்யர்கள்,
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் 
ரக்ஷணாய கலுதத் க்ருபாபரம் 
யத்க்ஷணேந நிஜ முக்யமாநிதரம் 
வ்யுத்க்ஷி ணோதி பலநீதி தத்த்வத: 
-என்றனர். யாதொரு ஸ்ரீராமானுஜருடைய க்ருபை (அன்பு), தன்னை அடைந்தவர்களுடைய முக்குறும்பை, அதனால் விளையும் பலனை, உள்ளபடி காட்டிக் கண நேரத்தில் போக்கடிக்கிறதோ, அந்தக் கருணையே அவரை ரக்ஷிப்பதற்குப் போதுமானதன்றோ என்று துதிக்கின்றனர்.

இத்தகு தூய அன்பை உணர்த்தி, குல, சாதி வேறுபாடு காட்டாது வாழ்ந்து, அவர்களை உயர்த்திய ஞானமளித்ததாலன்றோ, அத்திருக்குலத்து உறங்காவில்லி தாஸரே, வாக்கு மூலம் அளிக்கிறார் பாடலாக.
நன்றுந் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றம்
எடுத்தான் அடிசேர் ராமானு சன்தாள் 
பிடித்தார் பிடித்தார் பற்றி.
-என்றதே ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாண்டு அன்பு வழியில் அழியாச் செல்வமாகும்.

அன்பே தெய்வம்! 

வாழ்க ஸ்ரீ ராமானுஜர் புகழ்.நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக