வெள்ளி, 2 செப்டம்பர், 2016

அத்வைதமும் விசேஷ அத்வைதமும்


-புலவர் வெ. இராமச்சந்திரன்


உலகம் நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்னும் பொது நோக்கோடு, மனிதன் நற்செயல் புரிந்து மகிழ்வுடன் வாழ வேண்டும். இது ஒன்றே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென புத்தர் வலியுறுத்தினார். செயல்கள் செய்பவர்களைப் பொறுத்துள்ளது. நற்செயல்கள் செய்யும் மனிதனை அவர் மதித்தார்.

காலப்போக்கில் எண்ணங்கள் மாறின. கள்ள குணங்களும் போக்கும் மாறவே, புத்தரைப் பின்பற்றுபவர் மனம் போனபடி வாழலாயினர். இந்நிலையில், உலகை இடுக்கணிலிருந்து காப்பதற்காக, நன்மையே வடிவான பரமன், குருவாக ஸ்ரீ சங்கரர் என்னும் திருநாமத்தோடு அவதரித்தான். 

வேதங்களை, ஆழ்ந்து பயின்ற சங்கரர், தகுதி வாய்ந்தவர்களுக்கு வேதத்தின் உண்மைகளைக் கவனத்துடன் வெளியிட்டார். ஆறு சமயங்களிலும் உண்மைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அனைத்து சமயங்களின் உண்மைகளும் பரம்பொருள் என்னும் ஒரு முடிவிற்குள் அடக்கம்; அது உண்மை என்றார். ‘ஏகம் தத்சத் - பகுதா வதந்தி’. உண்மை ஒன்றே. ஆனால், அது பல பெயர்களில், பொருள்களில் பேசப்படுகின்றது என்று நிறுவினார். இந்த உண்மையை நிறுவ, நான்கு திசைகளிலும் நான்கு மடங்களைத் தோற்றுவித்து, சமயம் வளரவேண்டும்; அது வேத வழி வாழவேண்டும் என்று நான்கு சீடர்களிடம் அவற்றை ஒப்படைத்தார். 

இதில், சைவம், வைணவம், சாக்தம் என்ற பேதங்கள் ஏதுமில்லை. இது உபநிடத வாக்யமான  ‘ஸஹனா வவது’ என்னும் மொழிக்கிணங்க அக்னி, வாயு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒரு பரம்பொருளின் இயக்கத்தில் வெவ்வேறு வடிவில் விளங்குகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்மை உண்டு. அதன்படி அதது இயங்கும் என்றும் நிறுவினார். நெடுங்காலமாக இதனை உணராத முனிவர்கள், விழிப்பு நிலையில் இதனை உணரத் தொடங்கினர்.

சத்வ குணத்தின் ஒலியில் தன் பூரணத் தன்மையை உணர்ந்து, அதன்பின் சம்சாரத்தைக் கடக்க முடியும். இது ஒன்றே வழி. இதைத் தவிர வேறு வழியில்லை. இதனை ‘நாந்ய: பந்தா, வித்யதேயனாய’ என்று ரிக்வேதம் (10.99.17) கூறுகின்றது. நூற்றெட்டு உபநிடதங்கள், ஒரே நிலையில் ‘த்யாகம்’ பற்றியே பேசுகின்றது. இதை கைவல்ய உபநிடதம் -  ‘த்யாகேனைகே அம்ருதத்வமானசு:’ என்று தியாக குணத்தை மனிதனுக்கு அம்ருதம் என்று உணர்த்துகின்றது. .

எனவே, மனித வாழ்வில் த்யாகம் செய்வதால், இறைவனை அடையமுடியும் என்று ஆதிசங்கரர் நிறுவினார். மேலும், சைவ, வைணவ, சக்தி என்று அனைத்து கோயில்களுக்கும் சென்று, அஷ்டகம், அஸ்தவம் (16 சீர்) போன்ற துதிகளால் வேறுபாடின்றி சமய நெறியைப் பரப்பினார். இது இன்றளவும், சமயத்திற்கு அடிப்படை நாதமாக விளங்குகின்றதைக் காணலாம்.

காலங்கள் செல்லச் செல்ல, சங்கரருடைய நெறி, துறவாடை அணிந்து, இச்சை கொண்டு அலைந்த புலன்களுக்கு அடிமையாயின. வேதங்களின் விளைவான நான்கு மகா வாக்கியங்களுக்கு, மாற்றிப் பொருள் கொண்டு பரப்பியதால்,  ‘நான் ப்ரம்மம் ஆகிறேன்’ (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்ற வாக்கியம் பொருள் மாறுபாடு காணலாயிற்று. பின்னர் நாயன்மார்கள் சைவத்தைப் புகழ, வைணவ ஆழ்வார்கள் வைணவத்தைப் புகழ, நிலைமை பக்தி என்ற பெயரிலேயே, மாறுபாடு காணலாயிற்று. இருந்தும் வேத நெறியின் ஆழ்ந்த கருத்துக்கள் மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தன.

இந்த நிலைமையில் மாற்றம் தர வேண்டி அவதரித்த மகான் ஸ்ரீ ராமானுஜர், உள்ளது ஆட்சி செய்யும் இடத்தில் இல்லது (மாயை) ஆட்சி செய்ய முடியாதென, ஆனந்தம், அமைதி, சத்தியம், வள்ளன்மை, தர்மம் என உள்ளது என்னும் தத்துவ நிலையை மேம்படுத்தினார். 

துயரம், அமைதியின்மை, குறுகிய மனப்பான்மை, பகை, அதர்மம், அசத்தியம், பேராசை, ஆகியவை இல்லது வகையைச் சார்ந்தது. அல்லதைத் தீர்க்கும் வழியில் அவதரித்த ராமானுஜர், இதைத் தன் அவதார காரணமாக நினைத்துச் செயல்பட்டார்.

 ‘யாரும் பிறவியினால் வைணவன் ஆவதில்லை. ஓர் ஆசாரியனைப் புகலாகக் கொண்டு, பண்டைக்குலத்தைத் தவிர்த்து, தொண்டர் குலத்தில் தீட்சை பெற்ற பின்பே, வைணவனாகிறான். திருமாலுக்குத் தொண்டு செய்யும் உரிமை பெறுகிறான். சாதி, குலங்களினால் வரும் பெருமையை விடவும், தொண்டர் குலத்தில் இணைந்திருக்கும் பெருமை, மிகவும் உயர்ந்தது. இதற்கு தொண்டர் குலத்துளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி, பண்டைக் குலத்தைத் தவிர்த்து’ என்னும் திருப்பல்லாண்டு பாசுரம் ஆதாரமாகக் கொள்கிறார் ராமானுஜர்.

மேலும் பரமாத்மா எங்கும் எதிலும் பரந்துள்ளான் என்னும் ஆதிசங்கரரின் தத்துவ அடிப்படையில், தன் முதல் ஆச்சார்யனாக விளங்கிய திருக்கச்சி நம்பி உபதேசித்த வார்த்தைகளை ஸ்ரீ ராமானுஜர் பிரமாணமாகக் கொள்கிறார். இது வரதன் திருக்கச்சி நம்பியிடம் உபதேசித்ததாக,  திருக்கச்சி நம்பி உபதேசித்தது. 

 “நானே பரமான ப்ரம்மம். உலகிற்குக் காரணமான பிரகிருதிக்கும் காரணமானவன் நானே (பரதத்வம் நாமே). பரன் நாராயணன், அவர் ப்ரம்மம். 
பேதமே தர்சனம்; ஜீவனுக்கும் இறைவனுக்கும் வேறுபாடு என்பது உறுதியான சித்தம். 
ஆத்மாவைப் பரமனின் திருவடிகளில் சரணாகதி செய்வதே, முக்திக்கு வழி. 
உயிர் விடும் காலத்தில் என்னை நினைக்க மறந்தாலும் கூட என் பக்தர்களுக்கு நிச்சயம் முக்தி உண்டு. 
உயிரைத் துறந்த உடனே என் பக்தர்கள் பரமபதம் அடைகிறார்கள்”. 

எல்லா நற்குணங்களும் உடைய பெரியநம்பியைப் பற்றி, இவ்வாறாக இந்த குருவாக்கினையே வரதப் பெருமானின் திருவாக்காக ஏற்று ‘நாராயணனே பரம் ப்ரம்மம்’ என்ற கருத்தில் விசேஷமான நாராயண மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தார் ராமானுஜர்.

மேலும், எங்கெல்லாம் வைணவத் திருத்தலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் திருமடம் அமைத்து, வைணவத் திருக்கோயில்களில் நித்ய பூஜைகள் நடப்பதற்கு வரைமுறைகளையும், வழிமுறைகளையும், விதிமுறைகளையும், ஏற்படுத்தி, சனாதன தர்மமான ஹிந்து சமயத்தில் நாராயண வழிபாட்டிற்கு புதிய வழிபாட்டு முறையை உருவாக்கி, இன்றும் இது தொடர வழிவகுத்தார். சமயம் உள்ளவரை இந்த விசேஷ அத்வைதம் பேசப்படும் என்பதே உண்மை.


நன்றி: விஜயபாரதம்- ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக