திங்கள், 19 செப்டம்பர், 2016

திருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி!


-ஆசிரியர் குழு
ஸ்ரீரங்கத்தில் திவ்ய பிரபந்தத்துக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்த ராமானுஜர் திருப்பதி திருமலை பற்றிய பாசுரம் பாடியபோது, கண்ணீர் விட்டு அழுதார். கேட்டுக் கொண்டிருந்த சீடர்களில் அனந்தன் என்னும் சீடர் அழுகைக்கான காரணத்தை கேட்டபோது, திருமலையில் நந்தவனம் இல்லாத காரணத்தால் , பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய இயலாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றார் ராமானுஜர்.

உடனே தான் அந்த பணிக்கு செல்வதாக உறுதியளித்து, தனது கர்ப்பிணி மனைவியுடன் திருமலைக்கு சென்று, ராமானுஜர் பெயரில் குளம் ஒன்றை வெட்டி, அந்தக் குளத்தை சுற்றிலும் நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் அனந்தாழ்வார்.

மேலும் ராமானுஜர் திருநாடு அலங்கரித்த பிறகு, ஆழ்வார்களுக்கு கூட தனி சன்னிதி இல்லாத திருமலை கோயிலில்,  ‘பாஷ்யக்காரர் சன்னிதி’ என்கிற பெயரில் உண்டியலுக்கு எதிரே ராமானுஜருக்கு தனி சன்னிதி ஒன்றையும் அனந்தாழ்வார் அமைத்தார். 

அனந்தாழ்வார் அமைத்த குளமும், நந்தவனமும் இன்றும் திருமலையில் தெற்கு மாட வீதியும், மேற்கு மாட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ளன. 

மேலும் அனந்தாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை அந்த நந்தவனத்திலே அடக்கம் செய்து மகிழமரம் ஒன்றை நட்டுள்ளனர். அனந்தாழ்வார் பிருந்தாவனம் என்று அந்த இடம் அழைக்கப்படுகிறது.  ‘ராமானுஜ புஷ்கரணி’ அவசியம் திருமலையில் காண வேண்டிய புனித பகுதியாகும். 


நன்றி: விஜயபாரதம் ராமானுஜர் 1000 சிறப்பிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக