ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பக்திக்கு ஜாதியில்லை

-ஜி.ஆளவந்தார்


இராமானுஜருக்கு வாய்த்த ஐந்து ஆசாரியர்களைப் பற்றியும், அவருக்கு இவர்களிடமிருந்து கிட்டிய ஞான ஒளியைப் பற்றியும் ‘இராமானுஜர்’ என்ற தமது நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.


 “பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர் – ஐவருமே ஆளவந்தாரின் அந்தரங்கமான சீடர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்று, அனைவரிடமும் நல் ஞானம் எய்திய எதிராஜர் இப்போது ஆளவந்தாரின் மறு அவதாரமாகவே விளங்கினார். ஏனெனில் அந்தப் பரமாசிரியர் தம்முடைய ஐந்து சீடர்களிடத்திலும் ஐந்து பகுதிகளாக உயிர்த்திருந்தார். இப்போது இந்த ஐந்து பகுதிகளும் சங்கமித்து இராமானுஜராக வடிவெடுத்தன. இராமானுஜரிடம் அபரிமிதமாகக் குடிகொண்டிருந்த அதிமானுஷ்யமான அற்புதச் சக்திகளே இதற்குச் சான்றாகும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

***

திருமலையை நோக்கி எதிராஜரும் சீடர்களும் நடந்து சென்றார்கள். சற்று தூரம் சென்ற பின் பாதை இரண்டாகப் பிரிந்தது. எது சரியான வழி என்று தெரியாமல் இராமானுஜர் திகைத்தார். அருகில் ஒருவன் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான். திருமலைக்குச் செல்லும் சரியான பாதை எது என்று சீடர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் உடனே வேலையை நிறுத்திவிட்டு, அவர்களுடன் சிறிது தூரம் வந்து சரியான வழியைக் காட்டினார். இராமானுஜர் அவனுக்குத் தெண்டனிட்டு வணங்க, சீடர்களும் அவ்வாறே செய்தனர். 

அவன் சென்ற பிறகு, “இத்தகைய தாழ்ந்த குலத்தவனைத் தெண்டனிட்டு வணங்குவது சரிதானா?” என்று ஒரு சீடர் உடையவரிடம் பணிவாகக் கேட்டார். “அவருடைய சாதி உமது கண்ணை மறைக்கிறது போலும்! பக்தி சாதிக்கு மேற்பட்டது. திருமலைக்குச் செல்ல சரியான பாதையை அவர் காட்டியிருக்கிறார். அதற்காக அவரை வணங்குவதே முறை. இதுவே பரம ஆஸ்திக நெறி” என்று இராமானுஜர் பரம பாவனமான வைணவ சமத்துவத்தை உபதேசித்த வண்ணம் பயணத்தைத் தொடர்ந்தார்.


குறிப்பு:
திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய ‘புரட்சித் துறவி இராமானுஜர்’ புத்தகத்திலிருந்து. 
தகவல் உதவி: என்.டி.என்.பிரபு

2 கருத்துகள்:

  1. Ramanuja's one of the earlier gurus by name Yadavaprakashar is not mentioned.Yadava Prakashar belongs to saivite group who further turned to vaishnavite due to the ramanuja's great deeds.

    பதிலளிநீக்கு
  2. Ramanuja's guru yadava prakasha turned from saivite to vaishnavite and became disciple of ramanuja.Such is the greatness of Ramanuja.A guru turned into shishya of his own shishya ramanuja which never happened in history.

    பதிலளிநீக்கு