சனி, 17 செப்டம்பர், 2016

ராமானுஜர் வழியில் விவேகானந்தர்

-பி.ஆர்.ஹரன்


ஸ்ரீமன் நாராயணனே பரமாத்மா. அவன் அனைத்து விதமான நற்குணங்களுடன், முழு சுதந்திரமாக, அனைத்திலும் இருப்பவன். ஆன்மாவுக்கும் ஆன்மாவாக இருப்பவன். அத்தகைய பரமாத்மாவின் அம்சமானவன் ஜீவாத்மா. ஞானத்தையே குணமாகக் கொண்டு பரமாத்மாவுக்குச் சரீரமாக இயங்குபவன். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு; ஆனால் இறுதியில் ஒன்றே!

இது ஸ்ரீ ராமானுஜர் அருளிய விசிஷ்டாத்வைதம். ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனைக் கண்டவர் அவர். அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவிடம் சென்று இறுதியில் ஒன்றுசேர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பியவர். அதனால்தான் சகல ஜீவராசிகளிடத்திலும் கருணையுடன் நடந்துகொண்டார்.

தங்களை உயர்குலப் பிறப்பாகக் கருதியவர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளலாகாது; மற்ற குலத்தவர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்கிற கருத்தை தன் வாழ்விலும் நடத்தையிலும் வலியுறுத்தியவர் ஸ்ரீ ராமானுஜர்.


அரங்கனின் அழகின் வயப்பட்ட உறங்காவில்லி, அடுத்த கணமே  ஸ்ரீ ராமனுஜரின் சீடரானார். ஸ்ரீ ராமானுஜர் தினமும் காவிரியில் நீராடிவிட்டு வரும்போது உறங்காவில்லி தாசரின் தோள்களில் தன் கைகளைப் போட்டுக்கொண்டுதான் நடந்து வருவது வழக்கம். அதேபோல நீராட ஆற்றில் இறங்கும்போதும் முதலியாண்டான் என்பவரின் கரங்களைப் பற்றிக் கொண்டுதான் செல்வார். முதலியாண்டானும் உறங்காவில்லியும் வேறு வர்ணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களைத் தன் சீடராகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்களை அரவணைத்து, குல வேறுபாடுகள் பார்க்கக் கூடாது என்கிற தன் கொள்கைக்கேற்ப வாழ்ந்தும் காட்டியவர் ராமானுஜர். ஆணவம் சிறிதுமற்ற அடியவர்களான இவர்களைத் தீண்டுவதன் மூலம் பிறப்பால் நான் அடைந்த ஆணவத்தைப் போக்கிக்கொள்கிறேன், என்று கூறியவர் ஸ்ரீ ராமானுஜர்.

திருவரங்கத்தின் வயது முதிர்ந்த அந்தணரான பெரியநம்பி அவர்கள், சேரியில் வாழும் மாறநேர் நம்பி என்னும் பக்தர் நோயுற்று வாடியபோது, அவருக்கு உணவு எடுத்துச் சென்றார். அப்போது அதை ஊக்குவிக்கும் விதத்தில் ஸ்ரீ ராமானுஜர், சிறந்த பக்தரான மாறநேர் நம்பிக்கு பெரிய நம்பி அவர்கள் உணவு எடுத்துச் செல்வது மாறநேர் நம்பியின் இறுதி நாட்களுக்கு நன்மை பயக்கும்" என்றார். அதன்படியே மறநோர் நம்பியின் இறுதிச் சடங்குகளையும் பெரிய நம்பியே செதார். பெரிய நம்பிமேல் கோபம் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராமானுஜரிடம் புகார் செய்தபோது கூட,  “இவர்களையா தீண்டத்தகாதவர்கள் என்பது? இவர்களும் லக்ஷ்மியின் புதல்வர்களே" என்று கூறி அதையே பெயர் காரணமாகக் கொண்டு அவர்களுக்கு திருக்குலத்தார்" என்று பெயர் வைத்தார். அவர்களின் ஆலயப்பிரவேசத்துக்கும் வழிவகுத்தார். மேல்கோட்டையில் திருக்குலத்தாரை ஒன்றுகூட்டி அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆலயத்திற்குள் பிரவேசித்தார் ஸ்ரீ ராமானுஜர்.

உயர்குலத்தில் பிறந்தவர்கள், மற்ற குலத்தில் பிறந்தவர்களை அரவணைத்து பாவிப்பதன் மூலம், ஏற்றத்தாழ்வுகள் மறைந்து ஆரோக்கியம் மிகுந்த சமூகம் நிலைநிறுத்தப்படும்.

குல வேறுபாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் ராமானுஜர். பிறப்பால் உயர்ந்தவர் என்று அகங்காரம் கொள்வது எவ்வளவு தவறோ, அதே போல பிறப்பால் தாழ்ந்தவர் என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதும் தவறு என்று போதித்தார்.

திவ்ய மந்திர ரகசியம் அறிந்தவர்களுக்கு வீடுபேறு கிட்டும் என்பது விதி. பரமாத்மாவின் சரீரங்களாக விளங்கும் ஜீவாத்மாக்களுக்கு அந்த ரகசியம் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ராமானுஜர். எனவே, தனக்கு நரகம் கிட்டினாலும் பிறருக்கு விடுபேறு கிடைக்க வேண்டும் என்பதால் கோபுரத்தின் உச்சியிலிருந்து திவ்ய மந்திர ரகசியத்தை உறக்கச் சோல்லிய மஹான் ஸ்ரீ ராமானுஜர்.

வேதம் காட்டிய தர்மத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த விசிஷ்டாத்வைத தத்துவத்தை உலகிற்குத் தந்து சிறந்த சமய குருவாக விளங்கிய   ஸ்ரீ ராமானுஜர், பரமாத்மாவின் சரீரங்களான ஜீவாத்மாக்களிடையே எந்தவிதமான வேறுபாடுகளும் கூடாது என்கிற நோக்கத்துடன் வர்ண குல வேறுபாடுகளைகளையும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் வாழ்ந்து காட்டினார். 

சமய மார்க்கத்தில் ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தைக் கடைப்பிடித்து அதன் வழியில் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், சமூக நலன் என்று வரும்போது, ஸ்ரீ ராமானுஜரையே தன் குருவாகக் கொண்டு அவர் வழி நடந்து சமூக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார்.
 “ராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் கவலை கொண்டு அவர்களிடம் கருணையுடன் நடந்துகொண்டார். அவர்களுக்குத் தேவையானபடி சம்பிரதாயங்களைக் கருத்தில் கொண்டு, அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு, அவற்றைப் பரிசுத்தமாக்கி, புதிய சம்பிரதாயங்களை ஏற்படுத்தி, புதிய வழிபாட்டு முறைகளையும் அறிமுகம் செது வைத்தார். அதே சமயத்தில் அந்தணர் முதல் பறையர் வரை அனைவருக்கும் உயர்ந்த சமய வழிபாட்டு முறைகளின் கதவுகளைத் திறந்து வைத்தார். ராமானுஜரின் இந்தச் சிறந்த பணியே பின்னர் பரந்து விரிந்து வளர்ச்சியடைந்து வடதிசையையும் ஆக்கிரமித்தது. வடநாட்டிலுள்ள பல ஆன்மீகத் தலைவர்கள் அவருடைய இந்தப் பணியை மேற்கொண்டனர். அவர்களுள் சிறந்தவராக நவீன காலக்கட்டத்தில் சைதன்யரைச் சோல்லலாம்”
-என்று ஸ்ரீ ராமனுஜரைப் பற்றிப் பேசுகிறார் விவேகானந்தர்.

ஸ்வாமி விவேகானந்தருக்கு ஸ்ரீ ராமானுஜரின் ‘ஸ்ரீ பாஷ்யம்’ போன்ற உரைகளையும் நூல்களையும் அறிமுகப்படுத்தியவர், அவருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் இருந்த அவருடைய சீடர் அளசிங்கப் பெருமாள் ஆவார். ராமானுஜரின் நூல்களும் அவருடைய வாழ்க்கையும் விவேகானந்தரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நாடெங்கும் தான் சுற்றுப்பயணம் போகும் இடங்களிலெல்லாம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் காணுகையில் அவருக்கு ராமானுஜர் செய்த பணியின் முக்கியத்துவம் புரிபடுகிறது. ராமானுஜர் வகுத்த வாழ்வியல் இலக்கணத்தைப் பரப்புவது ஒன்றே ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்துடன் தனது பணிகளையும் தொடர்கின்றார்.

ராமானுஜர் சுட்டிக்காட்டியபடி பக்தி யோகத்தை அடையவேண்டும் என்கிறார் விவேகானந்தர்.  “விவேகம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல், அப்பியாசம், தியாகம், மனத் தூமை, வலிமை, அதீதமான மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே பக்தி யோகத்தை அடைய முடியும்” என்று ராமானுஜர் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார் சுவாமி விவேகானந்தர். உணவு சுத்தமாக இருக்கும்போது, நம்முடைய சத்வ குணம் மெருகேறுகின்றது. நினைவாற்றல் தடுமாற்றமின்றி இருக்கிறது என்று ஸ்ருதி சொல்கின்றது.
 “அசைவ உணவை உண்பவர்கள் அவர்களே குறிப்பிட்ட பிராணியைக் கொல்பவர்களாக இருப்பது நல்லது. ஆனால், சமூகம் அவ்வாறு செயாமல், பிராணிகளை வதை செய்வதற்கென்றே குறிப்பிட்ட குழுவினரை ஏற்படுத்தி அவர்களை வெறுக்கவும் செய்கிறது. பிராணி வதை என்பது மிகவும் கடினமான காரியம். அந்த கடினமான காரியத்தைச் செபவர்கள் தான் அசைவ உணவை உட்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்நாளும் பக்தர்களாக ஆகப் போவதில்லை. ஆனால் பக்தர்களாக ஆக விரும்புபவர்கள் அசைவ உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்" 
-என்றும் கூறுகிறார் விவேகானந்தர். 

ராமானுஜர் தன்னுடைய பக்தியோக முறையை சமூகத்தில் அனைவருக்கும் அருளினார். பக்தி யோகத்தை அடைய அவர் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும்போது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் களையப்படும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தவர் விவேகானந்தர். உண்மை, நேர்மை, கருணை, அஹிம்சை போன்ற குணங்களை ராமானுஜர் வலியுறுத்தியதைத் தானும் வலியுறுத்தினார் விவேகானந்தர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனைத் தோற்றுவித்த சமயத்தில், ஸ்வாமி விவேகானந்தர் அந்தணர் அல்லாதோருக்கு உபநயனம் செவித்து காயத்ரி மந்திரத்தையும் உபதேசித்தார். ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யத்தை அவர்களுக்கு அளித்து ஆசீர்வாதம் செதார்.

ஆன்மிகத்தில் ஞானம் பெற்று மேன்மை அடைய ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தைக் கடைப்பிடித்த ஸ்வாமி விவேகானந்தர், சமூக நன்மைக்கு ஸ்ரீ ராமானுஜரை முன்மாதிரியாகக் கொண்டு அவருடைய வழியைப் பின்பற்றினார் என்பதை அவருடைய உரைகளும், அவர் வாழ்வில் நடந்தேறிய சம்பவங்களும் நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

நாமும் ஸ்வாமி விவேகானந்தரின் வழி நடந்து மேன்மை அடைவோமாக.குறிப்பு:  
திரு. பி.ஆர்.ஹரண், எழுத்தாளர். 
நன்றி: விஜயபாரதம் - ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக