வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திருப்பாவை ஜீயர் ஆன வரலாறு


-ஜி.ஆளவந்தார்
ஆளவந்தார் திருநாடு ஏகிய பின்னர், இராமானுஜர் ஆசாரியர் பீடத்தில் அமர்ந்தார் என்பதை அறிவோம். பீடாதிபதியாக இருந்த போதிலும், மடத்தில் ஏராளமான சீடர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் தாம் மேற்கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, தினந்தோறும் ஏழு வீடுகளில் பிட்சை எடுத்து இராமானுஜர் பசியாற்றிக்கொள்வார்.


சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைப் பாசுரங்கள் மீது இராமானுஜர் அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார். பிட்சைக்குச் செல்லும்போது திருப்பாவைப் பாசுரங்களை இடையறாது ஓதிக்கொண்டே போவார். ஓதும்போது பாசுரங்களில் வரும் கோகுலக் காட்சிகளை மனத்திரையில் தரிசித்து அனுபவித்துச் செல்வார். அந்தந்த வீடுகளில் கால்கள் தாமாகவே நிற்கும்; பிட்சையை ஏற்றபின் அவை அடுத்த வீடு நோக்கி நகரும்.

ஒரு நாள் பெரிய நம்பியின் வீட்டு வாசலை நெருங்குகையில், அவர் “உந்து மதகளிற்றன்” என்ற பாடலை இசையுடன் பாடிக் கொண்டே வந்தார். அவருடைய வீட்டு வாசலை அடைவதற்கு முன் பாதிப் பாசுரத்தைப் பாடிமுடித்து விட்டார். வாசலில் நின்ற வண்ணம்,
“பந்தார் விரலி! உன் மைத்துன்னன் பேர் பாடச்செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்பவந்து திறவாய்….”
-என்று பாடினார். அச்சமயம் வீட்டிற்குள் பந்தாடிக் கொண்டிருந்த பெரிய நம்பியின் மகள் அத்துழாய் கையில் பந்துடன் கதவைத் திறந்தாள். உள்ளத்திரையில் கோகுலக் காட்சியைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த இராமானுஜர், கதவு திறக்கும் ஓசை கேட்டுக் கண் திறந்து பார்த்தார். கையில் பந்துடன் இளமங்கை நிற்பதைக் கண்டவுடன், நப்பின்னைதான் தோற்ற மளிக்கிறாரோ என எண்ணி அப்படியே அத்துழாய் எதிரில் தெண்டனிட்டார்.

அப்போது அத்துழாய்க்கு இராமானுஜர் அறிமுகமில்லை. எனவே, அவள் உள்ளே ஓடித் தந்தை பெரிய நம்பியிடம் முக்கோல் தரித்த துறவி ஒருவர் தனக்குத் தெண்டனிட்டதை விளக்கினாள். நடந்த விஷயத்தை ஒரு கணத்தில் நம்பி புரிந்துகொண்டார். உடனே வெளியே வந்து எதிராஜரைத் தழுவிக் கொண்டார். வந்தவர் யார் என்பதைப் புரிந்துகொண்ட அத்துழாய் இராமானுஜர் காலில் விழுந்து “அண்ணா! உங்கள் தங்கையை மன்னிக்கும்படி வேண்டுகிறேன்” என்று விண்ணப்பித்தாள்.

“நானும் இந்தப் பாசுரத்தை உகப்புடன் ஓதி ஓதி உணர்ந்திருக்கிறேன். ஆனால் உம்மைப்போல அனுபவித்தது இல்லை” என்று பெரிய நம்பி கூறி, “இன்று முதல் திருப்பாவை ஜீயர் என்ற நாமம் உமக்குத் துலங்கட்டும்” என்று தமது சீடரை ஆசீர்வதித்தார்.குறிப்பு:
திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய ‘புரட்சித் துறவி இராமானுஜர்’ புத்தகத்திலிருந்து.
தகவல் உதவி: என்.டி.என்.பிரபு

1 கருத்து:

  1. I like Ramnujam for his greatness.The so called vaishnavas(iyengars) at present days are all converts from other castes.So vaishnavas(Iyengars) are not brahmins.Ramanujam himself is not a brahmin as he is a vaishnavite.Ramanujam became jeeyar from theron their tradition continues.Now followers of ramanujam do not believe in God shiva.

    பதிலளிநீக்கு