செவ்வாய், 13 செப்டம்பர், 2016

அகளங்க நாட்டாழ்வான் உருவான வரலாறு

-ஜி.ஆளவந்தார் 


மன்னன் அகளங்கனிடம் வேலை பார்த்து வந்த தனது மருமக்கள் செண்டவில்லியையும் வண்ட வில்லியையும் வில்லிதாசர் தனது குரு இராமானுஜரிடம் அழைத்து வந்தார். அவர்கள் இருவருக்கும் எதிராஜர் பஞ்ச சம்ஸ்காரம் செய்தார். அவர்களுக்கு முறையே செண்டலங்கார தாசர் என்றும் வண்டலங்கார தாசர் என்றும் தாஸ்ய நாமமிட்டார். அவர்கள் மூவரும் சிற்றரசரிடம் தொடர்ந்து வேலை செய்து வந்தார்கள்.

அம்மூவரும் வேலை முடிந்த பிறகு வைணவ கைங்கரியங்களில் ஈடுபட்டார்கள்; தமக்குக் கிடைத்த சம்பளப் பணத்தை இராமானுஜரின் திருவடிகளில் சமர்ப்பித்து வந்தனர். அந்தப் பணம் மடத்தின் செலவுகளுக்குப் பயன்பட்டது.

தம் மூன்று ஊழியர்களிடமும் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை அறிந்த அகளங்கன், அவர்களை அழைத்து, “இனிமேல் என்னிடம் வேலை செய்ய வர வேண்டாம். உங்களுடைய பொழுது பூராவையும் சத்காரியங்களுக்கே செலவிடுங்கள். ஆனால், எப்போதும் போல உங்களுக்குச் சம்பளம் தரப்படும்” என்று கூறினான். அவ்வாறே அவர்கள் தமது முழு நேரத்தையும் வைணவத் தொண்டில் ஈடுபடுத்தினார்கள். மாதம் முடிந்தவுடன், அரசனிடம் சம்பளம் வாங்கி வந்து மடத்தில் கொடுத்தார்கள்.

இதை அறிந்த இராமானுஜர் அம்மூவரையும் அழைத்தார். “மெய் வருந்த உழைத்து அறவழியில் சம்பாதித்த பொருள்தான் பாகவத கைங்கரியங்களுக்குப் பயன்படும். உழைப்பின்றிக் கிடைக்கும் பணம் சத்காரியங்களுக்கு உதவாது. இந்தப் பணத்தை எடுத்துச் சென்று உங்கள் அரசரிடம் கொடுத்து விடுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவ்வாறே, அவர்கள் மூவரும் பணத்தை அரசரிடம் திருப்பித் தந்தார்கள். “உழைக்காமல் கிடைக்கும் செல்வம் பாகவதக் கைங்கரியத்திற்குப் பயன்படாது என்று எங்கள் ஆசாரியர் தெளிவுபடுத்தினார். எனவே, அன்பு கூர்ந்து இப்பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வேண்டினர்.

அகளங்கன் பிரமித்து நின்றான். “ஊரை அடித்து உலையில் போடு” என்பது உலக வழக்காய் இருக்கும் இக்காலத்தில், அருட் சேவை செய்வதாய் அலையும் ஆஷாட பூதிகளுக்கு நடுவில், இப்படியும் ஒரு மகானா? இப்படியும் ஓர் ஒழுக்க சீலரா? என்னை உங்கள் குருநாதரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று மூவரையும் வேண்டிக் கொண்டான்.

மடத்திற்கு வந்து, இராமானுஜருக்குத் தெண்டனிட்டு வணங்கி நின்றான் அகளங்கன். தனக்கு உய்யும் வழியை உபதேசிக்கும்படி திருவடிகளைப் பற்றினான். இராமானுஜர் மிக்க மகிழ்ச்சியுடன் அவனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைணவனாக்கினார். அகளங்க நாட்டாழ்வான் என்பது அவருடைய தாஸ்ய நாமம் ஆயிற்று.

அகளங்கன் தமது அரசுப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். இவருடைய நிர்வாகத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இராமானுஜர், கோவில் கைங்கர்யங்கள் அனைத்தையும் மேற்பார்வையிடும் மூத்த அதிகாரியாக அவரை நியமித்தார். அரச வாழ்க்கையை விட இந்த இறைத் தொண்டே தமக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாய் அகளங்க நாட்டாழ்வான் கருதினார்.குறிப்பு:
திரு. ஜி.ஆளவந்தார் எழுதிய  ‘புரட்சித் துறவி இராமானுஜர்’ புத்தகத்திலிருந்து.
தகவல் உதவி: என்.டி.என்.பிரபு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக