திங்கள், 12 செப்டம்பர், 2016

குருவே சர்வம்!

-நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா

சீர்திருத்தம் பலவற்றை சிறப்புடனே செய்தவராம்...
சீர்பெருமை பலபெற்ற சீர்மிகு இராமானுஜராம்...

(சீர்திருத்தம்)

வைணவராய்ப் பிறந்தாலும் வையகமே போற்றி நிற்கும்
வரதராஜன் தந்த வரம் இராமானுஜ அவதாரம்!
குலத்தாழ்ச்சி இல்லாமல், குலப்பெருமை பேசாமல்,
குலகுருவாய் வந்திட்டவர், குலம் செழிக்க வாதிட்டவர்!

(சீர்திருத்தம்)

ஆழ்வார்கள் அருளிச் செய்த அழகுதமிழ்ப் பாசுரங்கள்
வடமொழியின் வேதத்திற்கு இணையெனவே வாதிட்டவர்!
திராவிடரின் வேதமென்றே திவ்ய பிரபந்தப் பாசுரத்தை
ஓதும்படி செய்திடவே இவ்வுலகில் தோன்றிட்டவர்!

(சீர்திருத்தம்)

திருக்கோயில் உள்ளேதான் நுழைந்திடவே முடியாத
தெருக்கோடி மக்களுக்கும் திருக்கரத்தை நீட்டியவர்!
தீண்டாமை எனச் சொல்லும் தீவினையை மாற்றிடவே
திருப்பெரும்புதூர் ஈன்றெடுத்த அவதார திருச்செல்வர்!

(சீர்திருத்தம்)
குறிப்பு:

திரு. நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா அவர்கள் நெமிலி பாலா பீடாதிபதி கலைமுதுமணி கவிஞர் நெமிலி எழில்மணி அவர்களின் மூத்த மகன். இவர் பக்தர்களை  ‘ஆத்மீகம்’ என்ற அமைப்பில் இணைத்து குருவாக இருந்து வழி நடத்துகிறார். 
பாலா திருவிருத்தம், பாலா அந்தாதி என ஆயிரக்கணக்கான பிரார்த்தனைப் பாடல்களை அழகுத் தமிழில் எழுதி உள்ளார்.   
பிரச்னைகளைப் பிரார்த்தனைகளாக்கி மன அழுக்குகளைப் போக்கி, ஜாதி மத பேதமற்ற மனிதர்களை உருவாக்குகின்ற வேலையை இவரது பாடல்கள் செய்கின்றன.
கீழ்த்தட்டு மக்களை ஆதுரத்தோடு அணைத்துக் கொள்வதும், பிறர்நலன் வேண்டி வாழ்வதுமே ஆத்மீகம் என்று வாழ்ந்து காட்டி வழி நடத்துகிறார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக