சனி, 10 செப்டம்பர், 2016

நிகரற்ற நிர்வாகி ராமானுஜர்

-கோமதி வெங்கட்


ழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சொரியும் திருவரங்கநாதனின் திருவடி தொழுது, தானும் உய்ந்து உலக உயிர்கள் அனைவரும் உய்வதற்கான விசிஷ்டாத்வைத நெறியை உலகிற்கு உரைத்த மகான் ஸ்ரீ ராமானுஜர். இவர் ஒரு ஆன்மிகவாதியாக மட்டுமல்லாமல் உலகில் உயிர்த்த அனைத்து உயிர்களையும் நேசித்த மனிதநேயம் மிகுந்த  மகானாகவும் திகழ்ந்தார்; கோயில் செல்வங்களைக் காத்த இணையற்ற நிர்வாகியாகவும் மிளிர்ந்தார். அதனால்தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள்  “தென்னரங்கன் செல்வமுற்றும் திருத்தி வைத்தான் வாழியே" என அவரைத் துதிக்கின்றனர்.
ஒரு மனிதன் தலைசிறந்த தலைவனாக மக்கட் பணியாற்ற வேண்டுமேயானால் அவனிடம் கற்றலில் பணிவும், எண்ணத்தில் தெளிவும், செயல்களில் துணிவும் இருத்தல் அவசியம் என்கின்றனர் மேலாண்மை மேதைகள். இவை அனைத்தும் வாய்க்கப் பெற்று அவற்றுடன் அளவற்ற அன்புள்ளமும் கொண்டிருந்த ராமானுஜர் தலைசிறந்த தலைவராய் மிளிர்ந்ததில் ஐயமேதுமில்லை.

ராமானுஜர் பூவுலகில் பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பேநம்மாழ்வாரின் ஆணைப்படி பக்தர்கள் தாமிரபரணி நீரைக் காய்ச்ச, அந்நீரில் நிறைந்துள்ள தாமிரம் ராமானுஜர் விக்ரஹமாய் மாறிற்று. இவர் எவரென அடையாளம் தெரியாத பக்தர்களுக்கு இவரே பவிஷ்யதாசார்யன்" (எதிர்காலத் தலைவன்) என்றியம்பினாராம் நம்மாழ்வார்.

பிறப்பதற்கு முன்பே பல அதிசயங்களை நிகழ்த்திய ராமானுஜர் தம் வாழ்நாளிலும் அரங்கன் அருளால் பல அதிசயங்களை அரங்கேற்றியவர். ஆளவந்தாரின் சீடர்கள் ஐவரிடமும் பெரியோர் பலரிடமும் பணிந்து ஆழ்ந்து, அகன்று கசடறக் கற்றவர்.

மிகத் தெளிவான திட்டங்களுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அவர் வகுத்துக் கொடுத்த நடைமுறைகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்து இன்றளவும் அதேபோல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்றால் அவரது நிர்வாகத் திறமை நிகரற்றதன்றோ?

திருவரங்கம் கோயில் பொறுப்பை ஏற்றவுடன் ஒழுங்கு முறைகளுக்கு உட்படாதவர்களின் மிரட்டல்களுக்குக் கலங்காமல் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கோயில் பணிகளுக்கு உட்படுத்தினார். விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல்,இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்என்னும் குறள்வழி நின்றுதன்மையும், திறமையும் நிறைந்த பலரை இறைபணியில் ஈடுபடுத்தினார். தன்னுடைய நிர்வாகத்தில் கடைக்கோடி ஊழியனும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிய உத்தமர் அவர்.

ஒருமுறை விறகு வெட்டும் ஊழியர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். ராமானுஜரைக் கண்டதும் அவரைப் பணிந்து, தன் குடும்பத்தைப் பேண இன்னும் சற்று அதிக உணவு வேண்டும் எனக் கேட்டார். உடனே உடையவரும் அதற்கு ஆவன செய்வதாக வாக்களித்தார். ஆனால் அவரது இடையறாத வேலைகளில் மறந்துவிட்டார். சில நாட்கள் கழித்து அந்த விறகு வெட்டி இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர் மிகுந்த மனவருத்தத்துடன் அவனது இல்லத்திற்குச் சென்றார். அந்த விறகுவெட்டியின் மனைவி, ஐயா! நாங்கள் மிகவும் வறுமை நிலையிலுள்ளோம். ஆகையால் நீங்கள் தினமும் அனுப்பிக் கொடுத்த உணவை என் கணவனின் மறைவிற்குப் பின்னும் கொடுத்தருள வேண்டும்" என வேண்டினார். உடையவர் உள்பட அனைவரும் அதிர்ந்தனர். உள்ளம் நிறைந்த அன்புடன் உடையவர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அரங்கனே மனித உருவில் கொண்டு வந்தது அதிசயத்திலும் அதிசயமன்றோ?

அரங்கன் பணிக்காக அர்ச்சகர், சலவைத் தொழிலாளி (ஈரங்கொல்லி), தச்சர், சிற்பி, ஓவியர், தளிகை சமைப்பவர், புஷ்ப கைங்கர்யம் செய்பவர், சாமரம் வீசுவோர், பட்டு நெசவாளர், இசை வல்லுநர், அரையர், பால்காரர், ஸ்ரீபாதம் தாங்கி, தையல்காரர், தூய்மை செய்பவர், நீர் சுமப்பவர், விளக்கேற்றுபவர், குடை ஏந்துபவர், செருப்புத் தைப்பவர் என சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் கோயிலில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஒப்புயர்வற்ற மேலாளர் அவர்.

நுண்ணறிவும் ஆழ்ந்த புலமையும் அளவற்ற ஆற்றலும் பொருந்தியிருந்த போதிலும், பழகுதற்கு இனிய பண்பாளர் அவர். குழந்தையுள்ளம் படைத்த குணக்குன்று அவர். அதற்கு எடுத்துக்காட்டாக, அவர் வீதிவலம் வருகையில் தெருவில் விளையாடும் குழந்தைகள் தாங்கள் விளையாட்டில் சமைத்து பெருமாளுக்கு அமுது செய்த உணவென்று சொல்லி அவர் கரங்களில் அளித்த மணலை மிகுந்த மகிழ்வுடன்  ‘தன்யோஸ்மி’ (மிக்க நன்றி) என்று கூறிப் பெற்றுக் கொள்வாராம்.

வருமுன் காப்பவனே தலைசிறந்த தலைவன். காவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்த திருவரங்க மக்களை வெள்ளத்தினின்று காக்க இருகரை காப்பான்" என்ற பெயரில் காவலாளிகளை நியமித்திருந்தார். வெள்ள அபாயம் ஏற்படும் காலகட்டங்களில் அவற்றை சரிசெய்யத் தேவையான பொருட்களும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாம். இங்ஙனம் மாதவன் சேவையையும் மக்கள் சேவையையும் ஒருங்கே ஆற்றிய மனிதருள் மாணிக்கம் மகான் ஸ்ரீ ராமானுஜர்.

சாதி, மத, இன, செல்வ வேறுபாடின்றி உலக உயிர்கள் அனைத்தும் உய்ய வேண்டும் என எண்ணி கோயில்களை நிர்வகித்த நிகரற்ற நித்திலம் ஜகதாசார்யன் ஸ்ரீ ராமானுஜர்.    


நன்றி: விஜயபாரதம் ராமானுஜர் 1000 சிறப்பிதழ்.

.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக