ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அற்புதர் ராமானுஜர்- டி.பி.ராமானுஜம்

-என்.டி.என்.பிரபு

அற்புதர் ராமானுஜர் ஓர் அற்புதமான புத்தகம்!

ராமானுஜர் நாடகம் என்றவுடன் அனைவரும் சொல்வது இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் நாடகத்தைத் தான். இப்படி மனதில் பதிந்திருந்த எனக்கு சென்னை கன்னிமாரா நூலகத்தில் நான் கண்ட டி.பி. ராமானுஜம் எழுதிய ‘அற்புதர் ராமானுஜர்’ என்ற நாடகப் புத்தகம் ஆச்சரியத்தை அளித்தது  (புதையலாய் இன்னும் எத்தனை இருக்குமோ?).


பள்ளிக்கூட வகுப்பறையில் புத்தகத்தை சட்டென்று பிரித்து அந்தப் பக்கத்தில் படம் இருக்கா என ஒரு விளையாட்டு விளையாடுவோம். அதைப் போல் புத்தகத்தை சட்டெனப் பிரித்து ஒரு இடத்தைப் படித்தேன். அப்படியே நடப்பதை கண்ணில் காண்பதுபோல் எழுத்து நடை அவ்வளவு அழகாக இருந்தது. யதார்த்தமாய் தமிழ் விளையாடும் விதமாக அமைந்திருந்தது. இந்தப் புத்தகத்தை படித்தே தீரவேண்டும் ஆர்வத்தை அளித்தது.

அருமையான எழுத்து நடையில் படிப்போரை ஈர்க்கும் வண்ணம் அருமையாக எழுதப்பட்டுள்ள நாடக நூல் ‘அற்புதர் ராமானுஜர்’. இந்த நூலை டி.பி. ராமானுஜம் என்பவர் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் முன் அட்டையோ, புத்தகம் பற்றிய குறிப்போ இல்லை. அர்ப்பணம் பகுதியிலிருந்தே புத்தகம் தொடங்குகிறது. இந்தப் புத்தகம் குறித்து இணையத்தில் பார்த்தபோது 1993-இல் வெளிவந்ததாகத் தெரிகிறது. இந்தப் புத்தகத்தை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் அருமையை, பெருமையை அறிய, வாழ்த்துரை வழங்கியுள்ள திரைப்பட இயக்குநர் இறையருட் செல்வர், திரு. கே. சங்கரின் வரிகளிலேயே காண்போம்…
“வில்லை ஒடித்த இராமனைக் கண்டு விஸ்வாமித்திரர் மகிழ்ந்தது போல, இந்த நூலைக் கண்டு நான் மகிழ்கிறேன்.

பக்கத்திற்குப் பக்கம், பகவானைப் பார்க்கிறேன்.

ஆழ்வார்களின் பேச்சைக் கேட்கிறேன்.

அமிழ்தான தமிழைச் சுவைக்கிறேன்.”

 இவரைப் போலவே அணிந்துரையில் திரு. இரா. முத்துக்குமாரசுவாமி, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் அவர்கள் எழுதியுள்ளதிலிருந்து…
“திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதுவது என்பது தனிக்கலை. கடந்த முப்பது, முப்பதைந்து ஆண்டுகட்கு மேலாக இக் கலையில் ஈடுபட்டுத் தனித்திறம் பெற்று விளங்குபவர் திரு. இராமானுஜம். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகத் திகழ்ந்து மறைந்த ப. நீலகண்டன் அவரகளிடம் பல படங்களுக்கு உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார்….

…..பக்திப்பட இயக்குநர் திலகம் டைரக்டர் கே. சங்கர் அவர்களிடம் பத்தாண்டுகட்கு மேலாக உதவி வசனகர்த்தா பணி…

…. இவர் உதவி வசனகர்த்தாவாகவே இருந்து விட்டதால் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் இவர் என்ன பணி செய்கிறார் என்பதே தெரியாது.

… ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் இராமானுஜம். முதியவருக்கும் பணிவு. இளைஞர்க்கும் பணிவு. குழந்தைகட்கும் பணிவு – எனப் பணிவின் பல பரிமாணங்களை வாழ்கையில் காட்டுபவர் இவர்.

இத்தனை ஆண்டுகளாகத் தமக்கிருந்த ஆற்றலைத் திரைப்படத் துறையிலேயே செலுத்தி வந்த இவர் நாடக உலகில் புகுகின்றார். வைணவப் பெருந்தகையான இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாடாகமாக ஆக்கித் தந்துள்ளார். அதிலும் இவருடைய எளிமை புலப்படுகிறது. மிக எளிய இனிய தமிழில் உடையவரின் வாழ்க்கை நாடகமாக்கியுள்ளார்”.
 உண்மையிலேயே டைரக்டர் கே. சங்கரும், இரா. முத்துக்குமாரசுவாமி அவர்களும் எழுதியுள்ளதைப் போல மிக அற்புதமாக அமைந்துள்ள புத்தகம் ‘அற்புதர் இராமானுஜர்’. இந்தப் புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போதே நான் பலரிடமும் இந்த புத்தகத்தைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன். எனக்குள் இந்த புத்தகம் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு தெரிந்த புத்தக விற்பனை செய்யும் நண்பர் மூலம் விசாரித்ததில் விற்பனைக்கு இடைப்பதில்லை என தெரிந்துகொண்டேன்.

நான் படித்த நூலகத்திலிருந்து எடுத்து படித்த இந்த புத்தகம் 344 பக்கத்துடனே முடிவடைகிறது. மேலும் எத்தனை பக்கங்கள் என்று தெரியவில்லை.

தற்போது ராமானுஜரின் 1000-வது ஜெயந்தி  கொண்டாடப்படும் இந் நேரத்தில் இந்த புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக