சனி, 20 ஆகஸ்ட், 2016

பகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்

  -அ..இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000-வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளைய பெருமாள் எதிராஜர் நம் பாரத நாட்டில் பிறந்து அனைவரின் கவனத்தினையும் ஈர்த்து வருவது மட்டும் அல்ல; அகில உலகமும் இன்று ஸ்ரீ ராமானுஜர் புகழ் பாடி வருகின்றது

நம் தமிழ்நாட்டில் பாரம்பரியமாகவே தமிழிசை பாடல்கள், கர்நாடக இசை பாடல்கள் பாடுபவர்கள் பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இசை பயிற்றுவிக்கும் பாடல் ஆசிரியர்களும் இனிமையாக தன்னார்வத்துடன் இசை பணி ஆற்றி வருகின்றனர். இவர்களில் பலர் பஜனை பாடல்களோடு சம்பிரதாய பாடல்களை இன்றளவும் பாடி வருகின்றனர். பலருக்கு நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் அனைத்தும் தெரியும். மேலும் பலர்  தெலுங்கு கீர்த்தனைகளையும் பாடி வருகின்றனர்.   

இப்படி, பஜனை பாடல்கள் பாடும் பல குடும்பங்களில் இயல்பான வகையில் அகிலம் போற்றும் ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிந்தனை 1000 வருடங்களாக நிலவி வருகின்றது என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல, பாரத நாடு முழுவதும் பலருக்கும் தெரியாது. அத்தகைய பஜனைப் பாடல் பாடுபவர்களில் அநேகம்பேர் தங்களது பெயருடன் ராமானுஜதாசன் என்றே சேர்த்து அழைக்கப்பட்டு வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு குரு பாரம்பரியத்தில் அல்லது ஒரு ஆச்சார்யர் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு, ராமானுஜதாசன் என்ற பெயரை தன் பெயருடன் இணைத்து அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ஸ்ரீ ராமானுஜர் உபதேசித்த முக்கியமான ஐந்து கடமைகளை கடைபிடித்து வருகின்றனர். தாம் பாடும் பஜனை பாடல்களுடன் ஸ்ரீ பெரும்புதூர் நோக்கி வீறுநடைபோட்டவண்ணம் இருக்கின்றனர்.
 
ஸ்ரீ ராமானுஜர் மீது பக்தியுடன் இருப்பது பாராட்டுதற்குரியதொன்று. பல பஜனைப் பாடல்களில்   ஸ்ரீ ராமானுஜர் போற்றியுடன் அவரைப்பற்றி உள்ள பல்வேறு தமிழ், தெலுங்கு கீர்த்தனைகளை இசைத்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடாத்ரி,  ஸ்ரீ ராமதாஸர், ஸ்ரீ அன்னமய்யா, ஸ்ரீ புரந்தரதாஸர் போன்ற மகான்கள் இயற்றிய பஜனை பாடல்களை மிருதங்கம், தாளம் போன்ற துணை இசைக் கருவிகள் வாசிக்கும் நண்பர்கள் அணி சூழ பாடும் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்

சில சமயம் அவர்களது பஜனையில் பந்த சேவை என்று ஒரு நிகழ்வு காணலாம். பிரதி கார்த்திகை மாதம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறன்று ஷோலிங்கபுரத்தில் நரசிம்மர் திருக்கோயிலில் அவர்கள் குழு குழுவாக வந்து பந்தசேவை பஜனையில் ஈடுபடுவது பார்ப்பவர்களின் மனதில் பக்திப் பரவசத்தினை ஏற்படுத்திடும்.  ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமானுஐர் போன்ற மகான்களை மையப்படுத்தி பாடும் பஜனைப் பாடல்கள் அற்புதமாக இருக்கும்.

ஒவ்வொரு மாதம் பௌர்ணமி, அமாவாசை அன்று இரவில் அனைத்து கிராமங்களில் மற்றும் பெரிய ஊர்களில் பஜனைகோயில் அல்லது பஜனை மடத்தில் அவர்கள் பஜனை புரிவது அன்றாட வாழ்வில் இணைந்த சத்கார்யமாக இன்றும் விளங்கி வருகின்றது. ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஸ்ரீ பெரும்புதூரில்,    ஸ்ரீ உடையவர் சாற்றுமுறை நடைபெறும் சமயம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழும் ஸ்ரீ ராமானுஜ தாசர்கள், பஜனைக்குழுவினர் அங்கு நடைபெறும் 10 நாட்கள் உத்ஸவத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீ ராமானுஜருக்கு பஜனைப் பாடல்களைப் பாடி வணங்கிவருவது, சாற்றுமுறை சமயம் கந்தகபொடி உத்ஸவத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது  இயல்பான விஷயமாக இன்றும் என்றும் விளங்குவது அற்புதம் அல்லவா

பஜனை பாடும் அவர்கள் எப்போதும் தங்கள் பெயருடன் ராமானுஜதாசன் என்றே அழைத்து மகிழ்வார்கள். சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் சம்பிரதாய அமைப்பில் வேறு பட்டாலும் ராமானுஜதாசனாக இருப்பதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும். முக்கியமாக திருக்குலத்தார் என்று பக்தியுடன் ஸ்ரீ ராமானுஜரால் அரவணைக்கப்பட்டோரும் ராமானுஜதாசனாகவே இருப்பார்கள். ஒருவர் மற்றொருவர் காலில் விழுந்து வணங்குவது, தன் கழுத்தில் உள்ள பூமாலையினை காலில் விழுந்து வணங்குபவர்களுக்கு சூடுவது அவர்களைப் பொருத்தவண்ணம் ஸ்ரீ ராமானுஜருக்கே சூட்டி அலங்கரிப்பதற்கு சமமாக நினைப்பார்கள், மகிழ்ச்சி கொள்வார்கள்.

இனி, விஷயத்திற்கு வருவோம். பஜனைப் பாடல் பாடுபவர்கள் இராமானுஜதாசனாக மாற அவர்கள் 5 கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த 5 கடமைகளும் ஸ்ரீராமானுஜரால் வழி வகுக்கப்பட்டது

ஸ்ரீ ராமனின் சகோதரர் லட்சுமணன் இளைய பெருமாள்தான் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனைத் தாங்கி சேவை சாதித்துவரும் ஆதி சேஷன் ஆவார். ஸ்ரீ ராமானுஜர் அனைவருக்கும் குறைந்தபட்ச 5 கடைமைகளாக உள்ளவற்றினை ஏற்றுக்கொள்ளுபவர்கள். எந்த ஆஸ்ரம தர்மத்தினைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எக்குலத்தினைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ராமானுஜதாசர்களாக பாவிக்கப்படுவார்கள் என்ற சம்பிரதாயத்தினை உருவாக்கினார்

இதற்காக ஸ்ரீ ராமானுஜர் 74 சிம்மாஸனாதிபதிகள் என்ற அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் பல இடங்களில் அவர்களை அமர்த்தி ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தினை அமைத்துக்கொடுத்தார். அந்த 74 சிம்மாஸனாதிபதிகளின் தொடர் பரம்பரையில் உள்ளவர்களே இன்று ஜீயர் பரம்பரை என்ற பட்டத்தோடு தாங்கள் இருக்கும் ஊரில் தங்களைக் காணவரும் பக்தர்களை பக்தஜன சபையினரை பஜனைப் பாடல்களை பாடுபவர்களை ஆஸ்ரயித்து உபன்யாசித்து, ஸ்ரீ வைஷ்ணவ நெறியினை பரப்பி, ஊற்றுக் கேணியாக இன்றும் விளங்கி வருவது, ஸ்ரீ ராமானுஜரின் அனுக்ரஹமே அன்றி வேறொன்றும் இல்லை.

குரு பரம்பரையில் உள்ள ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ வைஷ்ணவ நெறியாம் பஞ்ச ஸம்ஸ்காரங்களை ஏற்றுக்கொள்பவர்களின் வரிசையினை அல்லது பஞ்ச ஸம்ஸ்காரங்களை அனுஷ்டிக்கும் குடும்பத்தினருக்கு உரிய ஆசிர்வாதத்தினை அடிக்கடி வழங்கி வருகின்றனர். பஞ்ச ஸம்ஸ்காரங்களை ஏற்றுக் கொண்ட அடியவர்களும் தங்களை ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யனாக பாவித்து ஸ்ரீ ராமானுஜர் அருளிய 5 கடமைகளை தவறாது நிறைவேற்று வருவது இன்றளவும் சிறப்பு மிக்கதொன்று.

பஞ்ச ஸம்ஸ்காரங்களை இன்றளவும் தவறாது கடைபிடித்து வரும் பக்தர்கள் அனைவரும் ராமானுஜ தாசர்களாக தங்களை ஏற்றுக்கொண்டு பஜனை பாடல்களைப் பாடி வருவதுடன் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் குடும்பத்தில் உள்ள அடுத்த தலைமுறையினரையும் ராமானுஜர் சம்பிரதாயத்தில் பஜனை கோஷ்டியில் இணைத்து  வாழையடி வாழையாக, என்றும் ஜீவநதியாக இருக்கும்  கங்கை பிரவாகமாக ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு பெரும் தொண்டாற்றுவது போற்றப்படவேண்டிய விஷயம்.

நாம் நம் பகுதியில் உள்ள பாரம்பரிய பஜனை குழுவினர் நடத்தும் பஜனைகளில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஊக்கமளித்திட வேண்டும். பாரம்பரிய பஜனை சம்பிரதாயத்தில் உள்ள ராமானுஜதாசர்களின் நட்பினை பெறுவதும் அவர்களுடன் இணைந்து பஜனையில் கலந்துகொள்வது மிகமிக அவசியமானதொன்று. ஏனெனில் நாமும் ஒரு வழியில் ஸ்ரீ ராமானுஜராக மனதளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனை அனைவரும் காணும் வண்ணம் நம்மையும் பஜனை கோஷ்டியில் ஈடுபடுத்துவது காலத்தின் கட்டாயமும் கூட.  

எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் திருவருள் அனைவரும் பெற்றிட வேண்டும்.  ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம். பூஜனீய ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.    
 


 நன்றி:  
விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக