சனி, 6 ஆகஸ்ட், 2016

மதமாற்றமா, மனமாற்றமா ?

-சாண்டில்யன்ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி நினைக்கும்போதோ எழுதும்போதோ, அவருக்கு முன்னாலும் அவரைப் போன்ற ஈடு இணையற்ற மகான் தோன்றியதில்லை, பின்னாலும் தோன்றப் போவதில்லை என்ற முடிவுக்கே வருகிறோம்.

அவருக்கு முன்பு தோன்றிய மகான்கள், எந்த சமயத்தவராயிருந்தாலும் சரி, ஏதாவது ஒரு பாதையில் சிறந்தவர்களாயிருந்தார்கள். எல்லாப் பாதைகளிலும் சிறந்து, முன்னால் சென்றோருக்குப் பின்னால் வந்த பெருவிளக்காய், பின்னால் தோன்றினார்க்கு கலங்கரை விளக்கமாய்  இருந்தவர்கள் யாருமில்லை என்று சொன்னால், அது சத்திய வாக்கியமே தவிர, வீண் பாராட்டாக அமையாது.

ஸ்ரீராமானுஜருக்கு முன்பு பெரிய சந்நியாசிகள் இருந்திருக்கிறார்கள்; நிர்வாகிகளாக இருந்ததில்லை. பிற மதத்திலிருந்து தமது மதத்துக்கு மக்களைத் திருப்பியவர்கள் இருந்திருக்கிறார்கள்; ஆனால் அந்த மதமாற்றங்களில், ராஜாங்க செல்வாக்கு, பணம், அச்சுறுத்தல்- இவை கலந்து விளையாடின; மதத்திலிருந்து ஒருவரைத் திரும்பும்போது உடல் மட்டுமன்றி மனத்தை திருத்தி மதமாற்றம் செய்தவர்கள் மிக சொற்பம்.

மதமாற்றம் என்பது இருக்கிற மதங்களை திருப்புவதாக அமைந்ததே தவிர, சமுதாயத்தில் கீழ்தளத்திலிருந்தவர்களை மேல்நிலைக்கு ஏற, கைகொடுத்துதவ அமைந்ததில்லை.

மதமாற்றம் என்பது ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்தில் தற்கால முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. பணத்தைக் கொடுத்தோ, பள்ளிக்கூடங்களைக் கட்டியோ, மருத்துவ வசதிகளையளித்தோ ஸ்ரீ ராமானுஜர் மதமாற்றம் செய்யவில்லை. ஏதாவது ஒருவித லஞ்சத்தைக் கொடுத்தோ லோகாயத விஷயங்களில் ஆசை காட்டியோ எவரையும் ஸ்ரீராமானுஜர் தமது மதத்திற்கு இழுக்கவில்லை.

மதமாற்றம் என்பது மனமாற்றம் என்று ராமானுஜர் கருதினார்.

ஸ்ரீ வைணவ சித்தாந்தத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அதில் ஆசைப்படுபவர்கள் தாமாகவே வந்து சேர வேண்டும் என்பது ஸ்ரீ ராமானுஜர் கருத்து. அப்படி சித்தாந்தத்தைச் சொல்வதற்கு அவர் சந்தி சந்தியாகப் போய் நின்று கொண்டு இரைத்து பாடியும் கூவியும் யாரையும் அழைக்கவில்லை. அவர் சித்தாந்தப் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் தாமாகவே திரண்டார்கள். அவர் வழி நல்லதென மனதில் ஊன்றியவர்கள் ஸ்ரீவைணவர்களானார்கள்.

இந்த மதமாற்றத்தில் ஜாதிபேதம் கிடையாது. ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் சகலரும் சமம் என்ற கொள்கையைப் பரப்பினார்; அனுஷ்டித்தும் காட்டினார். அதனால் மக்கள் பெருவாரியாக ஸ்ரீவைஷ்ணவ மதத்தில் சேர்ந்தார்கள்.

இத்தகைய மதமாற்றத்தில், அதாவது மனமாற்றத்தில் ஸ்ரீராமானுஜர் யாரையும் வலுச்சண்டைக்கு இழுத்ததில்லை. வாதத்திற்கு வா என்று மார்தட்டியதில்லை. அகங்காரத்துக்கு சித்தாந்தத்தில் இடமில்லை என்று நினைத்தார்.

தாமாக வலுவில் வந்தவர்களோடு வாதம் செய்தார். அதுவும் எம்பெருமானை நினைத்து, அவர்மேல் பொறுப்பைச் சுமத்தி வாதம் செய்தார். அவருக்குக் கிட்டிய வெற்றிகள் பல.

அவர் வாதிக்கும்போது எம்பெருமான் வாதிக்கிறாரா, எம்பெருமானார் வாதிக்கிறாரா என்று விளங்காத அளவுக்கு வாதத்தில் வேகமும் அமைதியும் கலந்திருந்தன. இப்படியாக, சுருதி வாக்கியங்களினாலும் திவ்யப் பிரபந்த சூக்திகளினாலும் ஸ்ரீராமானுஜர் மதமாற்றம் - மனமாற்றம் செய்தார்.


தகவல் உதவி: திருநின்றவூர் ரவிக்குமார்.
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக